PUBLISHED ON : ஆக 15, 2021

பா - கே
அன்று, வழக்கம் போல், தபால் எடுத்து வர, போஸ்ட் ஆபீசுக்கு சென்றிருந்தேன்.
தபால்களை பிரித்து கொடுக்கும் பகுதி, அந்த அலுவலகத்தின் பின்பகுதியில் இயங்கி வருவதால், முன்பக்க கவுன்ட்டர்களை கடந்து செல்ல வேண்டியிருந்தது.
தபால் தலை, அஞ்சல் அட்டை, இன்லாண்டு கடித உறை ஆகியவற்றை விற்கும் கவுன்ட்டரில் ஏதோ, 'கசமுசா!'
இது வழக்கமானது தானே என்று நினைத்து, அதை கடந்து சென்றேன். தபால்களை மூட்டையில் கட்டி திரும்பி வரும்போது, அதே கவுன்ட்டர் அருகே, மக்கள் கூடியிருக்க, அவர்களுக்கு நடுவே ஒரு அம்மாள் புலம்பிக் கொண்டிருந்தார். என்னவென்று அறியும் நோக்கில் எட்டி பார்த்தேன்.
அங்கிருந்த பெரியவரிடம், 'நீயே கேளு சார், நியாயத்தை... வெளியூரில் தங்கி வேலை செய்யும் என் புள்ள, எனக்கு மாசா மாசம் பணம் அனுப்புவான். இதே ஆபீசுல தான், வந்து பணத்தை வாங்கி போவேன். ரெண்டு, மூணு மாசமா அவனிடமிருந்து பணம் வரலே.
'என்னாச்சோ, ஏதாச்சோ என பதறியபோது, என் வூட்டாண்ட இருக்கிற வாத்தியாரு, 'கடுதாசி எழுதி கேட்போம். நீ போய் ஒரு ப்ளூ கலர்ல இருக்கிற கடுதாசியை வாங்கிட்டு வா'ன்னு, சொல்லி விட்டாரு.
'சரின்னு, இங்க வந்து கேட்டா, இரண்டரை ரூபான்னு சொல்றாரு, இவரு. இரண்டு ரூபா, ஐந்து ரூபா இருக்கு. ஐம்பது பைசா இல்லையேன்னேன். 'வேணுன்னா, ரெண்டு லெட்டரு வாங்கிட்டு, ஐந்து ரூபா கொடு; இல்லாட்டா, ரெண்டு ரூபா கொடுத்து, நாலு கார்டு வாங்கிக்கோ; ஒரு கார்டு 50 பைசா'ன்னு சொல்றாரு...
'எனக்கெதுக்குய்யா, ரெண்டும், நாலும். என் இத்து போன குடிசையில இத எங்க பாதுகாத்து வைச்சுப்பேன்...' என்றார், அந்த அம்மாள்.
'ஏம்மா, உன் புள்ளைய செல்போனில் கூப்பிட்டு சொல்லிடுறதானே...' என்றார் ஒருவர், அதிமேதாவியாக.
'அட ஏன்யா, நீ வேற வயிற்றெரிச்சலை கிளப்பிட்டு. செல்போன் வச்சிருக்கிற அளவுக்கு வசதி இல்ல. அதை பயன்படுத்தறதுக்கும், கிராமத்துக்காரியான எனக்கு தெரியாது. ஏதோ வயித்து பிழைப்புக்கு இங்கு வந்து அல்லாடுறேன்.
'முன்னெல்லாம் தெருவுக்கு தெரு, சிவப்பு கலர்ல, பொது டெலிபோன் தொங்க விட்டிருப்பாங்க. அதில், ஒரு ரூபா போட்டு, பேசறதையும் பார்த்திருக்கேன். இப்ப அதுவும் இல்ல. அதுமட்டுமல்லாம, என் புள்ளையின் போன் நம்பரும் எனக்கு தெரியாது...' என்றார், அப்பாவியாக.
தனக்கு ஆதரவாக ஆட்கள் இருக்கின்றனர் என்ற தைரியத்திலோ என்னவோ, இப்போது கவுன்ட்டர் ஆளு, 'ஏம்மா, அரசாங்கத்துகிட்ட கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் என்கிட்ட கேட்டா, நான் என்ன செய்வேன்.
50 பைசா இருந்தா கொடு. இல்லாட்டா, நடையை கட்டு...' என்றார்.
இதையெல்லாம் அவதானித்த நான், 10 ரூபாய் கொடுத்து, நான்கு இன்லாண்டு கடித உறை வாங்கி, ஒன்றை அந்த அம்மாளிடம் கொடுத்து, மற்றவற்றை எடுத்து வந்தேன். வாசகர்களுக்கு, தனிப்பட்ட முறையில் கடிதம் எழுத உதவுமே!
பிரச்னை தீர்ந்ததில், கூடியிருந்தவர்கள் முணுமுணுத்தவாறு, வரிசையில் நிற்க ஆரம்பித்தனர்.
பின்குறிப்பு: எனக்கு ஒரு சந்தேகம்... ஒரு பைசா முதல், 50 பைசா நாணயம் வரை, வழக்கொழிந்து பல காலமாயிற்றே. இன்னும் எதற்கு, 50 காசு என, கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்?
இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. சமீபத்தில் மதுரையில், ஐந்து பைசாவிற்கு கோழி பிரியாணி என்று, விளம்பரம் செய்ததில், ஐந்து பைசா நாணயத்துடன், கூட்டம் முண்டியடித்து, ஏக கலாட்டாவானதே... ஐந்து பைசா நாணயம் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? பொக்கிஷமாக சேர்த்து வைத்திருந்தனரோ!
ப
அலுவலகத்துக்கு, புத்தக விமர்சன பகுதிக்கு வந்த புத்தகங்களை அடுக்கி வைக்கும்போது, ஒரு சின்ன கையேடு கண்ணில் பட, எடுத்து புரட்டினேன். அதில், முன்னேற பல வழிகள் சொல்லியிருந்தனர். 'பயத்திலிருந்து விடுபட்டு, வெற்றி பெறுவது எப்படி?' என்ற தலைப்பில், ஒரு குட்டிக் கதை வெளியாகியிருந்தது. அது:
அந்த காலத்து மன்னர்கள், ஏதாவது போட்டிகளை அறிவித்து பரிசுகளை வழங்குவர். அதேசமயம், போட்டியில் தோற்றால், கழுத்தை சீவி விடுவதும் வழக்கம். அப்படித்தான் மன்னர் ஒருவர், வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தார்.
போட்டியில் பங்கேற்க முன்வருபவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா ஒரு ஆடு வழங்கப்படும். அந்த ஆட்டை அவர்கள் ஓராண்டு பராமரித்து, அதன் பின் மன்னரிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். அப்போது, அதன் எடை, இப்போது என்ன இருக்கிறதோ அதே அளவிலேயே இருக்க வேண்டும். எடை கூடவோ, குறையவோ கூடாது என்பது தான், அந்த போட்டி.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு, 1,000 பொற்காசுகள் வழங்கப்படும்; இதில் தோற்றால், வழக்கம் போல், தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தார்.
முதலில், போட்டியில் பங்கேற்க தயங்கினர், மக்கள். போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலும் ஏதாவது தண்டனை நிச்சயம் என்பதால், பலரும் முன்வந்தனர். குறிப்பிட்ட நாளில் மிகப்பெரிய
விழா ஒன்றை நடத்தி, ஆடுகளை வழங்கினார், மன்னர்.
ஓராண்டு சென்றது...
போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும், தாங்கள் வளர்த்த ஆட்டை கொண்டு வந்தனர். அவற்றின் எடை சரிபார்க்கப்பட்டது. ஆடுகளின் எடை கூடுதலாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது. ஓராண்டுக்கு முன்பிருந்த எடை இல்லவே இல்லை.
இந்நிலையில், ஒரேயொருவர் வளர்த்த ஆடு மட்டும் அதே எடையுடன் இருந்தது.
இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. மன்னரும் வியப்புற்றார்.
'எப்படி இது சாத்தியமாயிற்று...' என்று அவரிடம் கேட்டார், மன்னர்.
'மன்னா... கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலிக்கு முன், ஆட்டைக் கட்டி, அதற்கு இலை, தழைகளை போட்டு வந்தேன். அதை ஆடு சாப்பிட்டாலும், பயத்திலேயே நாள் முழுவதும் வாழ்ந்து வந்தது. இதனால், அதன் எடை அப்படியே மாறாமல் இருக்கிறது...' என்றான்.
தண்டனைக்கு பயந்து கொண்டிருப்பதை விட, வருவது வரட்டும் என்று செயல்பட்ட அவனது புத்திசாதுர்யத்தை பாராட்டி பரிசளித்தார், மன்னர்.
மன்னர்களின் எக்குத்தப்பான போட்டிகளையும், அதை எதிர் கொண்ட மக்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தேன். புத்தி உள்ளவன் பிழைத்துக் கொள்வான் என்பது மட்டும் புரிந்தது.
