தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (15)

நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (15)

நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (15)


PUBLISHED ON : ஆக 15, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருமுறை, ஈரோட்டில் நாடகம் முடித்து நள்ளிரவு, 12:15 மணி ரயிலை பிடிக்க நிலையத்திற்கு வந்தார், எஸ்.வி.சேகர். அவர்களுக்கு டிக்கெட் இருந்த கோச்சில் இடமில்லை.

'நாங்கள்தான் முறையாக டிக்கெட் போட்டு இருக்கிறோமே... எப்படி எங்கள் பெயர் விடுபடலாம். கூப்பிடு அதிகாரியை...' என்று, கூப்பாடு போட்டனர்.

அங்கு வந்த அதிகாரி, எஸ்.வி.சேகரிடம் இருந்த டிக்கெட்டை வாங்கிப் பார்த்து, 'என்ன மிஸ்டர் சேகர், நீங்கள் நாடகத்தில் தான் தமாஷ் செய்வீர்கள் என்றால், நேரிலும் செய்கிறீர்கள். நீங்கள், டிக்கெட் போட்ட ரயில், நேற்று நள்ளிரவே போய் விட்டது...' என்றார்.

இரவு, 12:00 மணிக்கு நிலையத்தை கடக்கும் அல்லது ஏறும் பயணிகளுக்கு, இந்த இரவு நேர குழப்ப அனுபவம் நிச்சயம் ஏற்பட்டு இருக்கும்.

மறுநாள், ரயில்வே நேரப்படி, சரியாக டிக்கெட் போடாமல், முதல் நாளே போட்டுவிட்டு பேந்த பேந்த முழிப்பர். அன்று, அவர்கள் நிலைமையும் அப்படித்தானாகிப் போனது. அப்புறமென்ன அவர்களுக்கு தனி ரயிலா விடுவர்... பஸ் பிடித்து, ஊர் வந்து சேர்ந்தனர்.

அமெரிக்காவில், 32 நாட்களில், 28 நாடகங்களை நடத்தியது ஒரு சாதனை.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு விமானத்தில் தான் போக வேண்டும். ஸ்டெயின்லுாயிஸ் என்ற இடத்திற்கு போவதற்காக, விமானம் ஏறப்போயிருந்த போது, ஒரு அதிர்ச்சி. அவர்கள் ஏற இருந்த விமான கம்பெனியையே மூடி விட்டதாக, நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

அப்படியானால், டிக்கெட் பணம் கோவிந்தாவா? பணம் போனால் பரவாயில்லை, நாம் போகாவிட்டால் நாடகத்திற்கு டிக்கெட் எடுத்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற கவலையுடன், விமான நிலையத்தில் விசாரித்தால், இன்னொரு ஆனந்த அதிர்ச்சி.

'ஆமாம் சார்... நீங்கள் டிக்கெட் எடுத்த விமான கம்பெனியை மூடி விட்டனர். ஆனால், நீங்கள் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து விட்டதால், உங்களுக்காக மட்டும் தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளனர்...' என்றார்.

அதுதான் அமெரிக்கா! வாங்கிய பணத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும், 100 சதவீதம் நேர்மையாக இருக்க விரும்புவர். நுகர்வோரை மதிக்கும் நாடு அது. அப்புறமென்ன, 110 பேர் செல்லும் விமானத்தில், அவர்கள், 13 பேர் மட்டும் சென்றனர். அதைவிட மகிழ்ச்சி, என்னவென்றால், அந்த, 13 பேருக்கு, 14 ஏர்ஹோஸ்டஸ் சேவை செய்தனர்.

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். எஸ்.வி.சேகர் குழுவில், 30 பேர் இருப்பதாக சொல்லியிருந்தீர்கள். ஆனால், 13 பேர் மட்டுமே பயணம் செய்ததாக சொல்கிறீர்களே, எது சரி... என்று, நீங்கள் கேட்பது புரிகிறது.

இரண்டுமே சரி தான். நம் நாட்டிற்குள் என்றால், 30 பேர் தான்; அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் என்றால், அத்தனை பேருக்கும் டிக்கெட் போட, 'பட்ஜெட்' இடம் கொடுக்காது. ஆகவே, முக்கியமானவர்கள் மட்டும் பயணம் செய்வர். மீதம் உள்ள கேரக்டர்களுக்கு, அங்குள்ள தமிழ் சங்க உறுப்பினர்கள் அல்லது நடிப்பில் ஆர்வமுள்ளவர்களை நடிக்க வைத்துக் கொள்வர்.

முதல் முதலாக அமெரிக்காவிற்கு நாடகம் போடப் போனபோது, எஸ்.வி.சேகர் மட்டுமே போயிருந்தார் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா... ஆனால், அதுதான் உண்மை.

அமெரிக்க பிரஜையான கிறிஸ்டினா என்பவர், எஸ்.வி.சேகரின் நாடகங்களை ஆராய்ந்து, டாக்டர் பட்டம் பெறுவதற்காக, சென்னையில், ஒன்பது மாதம் தங்கியிருந்து, தமிழும் கற்று, நாடக ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். பின், தன் ஆராய்ச்சியை சமர்ப்பித்து, டாக்டர் பட்டமும் பெற்றார்.

தொடரும்

எல். முருகராஜ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us