PUBLISHED ON : பிப் 06, 2022

கே. பாபு, மதுரை: 'ஆட்டோ' ஓட்டுனர்கள், நமது நாளிதழுக்கு எதிராக சென்னையில் சாலை மறியல் செய்து, போராட்டம் நடத்தினார்களாமே...அவர்கள் சார்ந்திருக்கும் தொழில் சங்கங்களின் துாண்டுதல். சரியான வாடகை வாங்கும் ஓட்டுனர்களுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சான்றிதழ் வழங்குகிறாரே... அச்செய்தியை நாமும் வெளியிடுகிறோமே...
* முருகு. செல்வகுமார், சென்னை: பா.ம.க., தொடங்கி, 30 ஆண்டுகள் கடந்து விட்டன... அதன் நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் சாதித்தது என்ன?மாற்றி, மாற்றி திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தான்! வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார்... என்ன சாதிக்கிறார் என்பதை பார்த்துக் கொள்ளுங்களேன்!
கி. சுப்பு, நெல்லை: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் குறித்து, அந்துமணியின் கருத்து என்ன?அவர்கள் கூர்மையான, போர் வாள்... அவர்கள் ஆதரவு இருந்தால், அரசியல் கட்சிகள் எதையும் செய்யலாம்... இன்று, அவர்கள் நடுநிலையாக உள்ளனர்!
* க. மோகனசுந்தரம், விருதுநகர்: ஆளும் கட்சி, எதிர்க்கட்சி... இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன?ஆளும் கட்சியினர், 'கை' நீட்டிக் கொண்டிருப்பர்! ஆளும் கட்சியாக இருந்து எதிர்க்கட்சியானோர் கம்பி எண்ண காத்திருப்பர்!
வெ. சென்னப்பன், எல்லப்புடையாம்பட்டி, தருமபுரி: சைவம், அசைவம் இதில் எந்த உணவு நல்லது?சைவம் தான் என்றாலும், அசைவமும் நல்லது தான்... ஆனால், 'ரெட் மீட்'டை தவிர்க்க வேண்டும். அது, கொழுப்பை அதிகரித்து, இதய அடைப்பை ஏற்படுத்தி, சின்ன வயதிலேயே மரணத்தில் கொண்டு விடும்!
டி. கிரேஸ் ஜூலியட் மேரி, சிட்னி, ஆஸ்திரேலியா: கை துப்பாக்கி சுட, உங்களுக்கு கற்றுக் கொடுத்தது யார்?மதுரையில் உள்ள, 'டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவர். அண்ணன், தம்பி இருவர்கள், அதன் முதலாளிகள். அதில், தம்பியே கற்றுக் கொடுத்தார். இருவரையுமே, 'முதலாளி' என்று தான் அழைப்பேன்!
க. பாலன், தென்காசி: பெண்களில் பெரும்பான்மையினர் பயந்த சுபாவம் உள்ளோராக இருக்கின்றனரே... ஏன்?ஆண்களில் பலர் அப்படி நினைத்துக் கொள்கின்றனர்... அது தப்பு... பெண்களில் சாதனை படைத்தோர், படைத்துக் கொண்டிருப்பவர்கள் பற்றி தெரியாதா... தெரிந்து கொள்ளுங்கள்!
