PUBLISHED ON : ஜூலை 03, 2011

** ரா.நவநீத கிருஷ்ணன், நெல்லூர்: கர்வம், ஆத்திரம், கோபம் - மூன்றில் எதை அடக்குவது எளிது?
மூன்றுமே வெகு சுலபமாக அடக்கக் கூடியது தான்; ஆனால், மனித மனம் ஒத்துழைக்க வேண்டுமே!
***
*கோ.ருக்மணி, கள்ளக்குறிச்சி:பக்கத்து வீட்டுப் பெண்களிடம், குடும்ப பிரச்னைகளை, கவலைகளை மனம் விட்டு பேசலாமா?
'வேலியில் போற ஓணானை எடுத்து...' இந்த பழமொழி முழுமையாக தெரியும் தானே உங்களுக்கு... அதுபோல அவஸ்தைப்பட விரும்புகிறீர்களா? அப்படியே யாரிடமாவது, 'ஷேர் செய்து கொள்ள வேண்டுமென எண்ணம் இருந்தால், பேப்பர் - பேனா எடுத்து எழுதுங்கள்; பின்னர் கிழித்து போட்டு விடுங்கள்.
***
*ஜி.திவாகர், மதுரை: அதிகப்படி, 'மேக்-அப்' செய்து கொள்ளும் பெண்களை, ஆண்கள் விரும்புவதில்லை என்ற பேச்சு எந்தளவுக்கு உண்மை?
நூற்றுக்கு நூறு உண்மை. தினமும் ஆபீஸ் வரும் வழியில், குறிப்பிட்ட ஒரு இடம் வரும் போது, ஒரு இளம் பெண், 'கிராஸ்' செய்கிறார். ஓவர் மேக்-அப், லிப்ஸ்டிக், பவுடர், மை... அழகி என்ற நினைப்பு போலும்... சைக்கிளை நிறுத்தி, கீழே இறங்கி, 'இப்படி, 'மேக்-அப்' போட்டு, வாழ்வை வெறுக்க அடிக்காதே...' எனச் சொல்லிவிட இப்போதெல்லாம் தோன்றுகிறது... அந்த தெரு முனையிலே இருக்கும் போலீஸ்காரரும் கண்ணில் படுகிறார். சைக்கிளை வேக, வேகமாக மிதித்து விடுகிறேன்.
***
** கே.ரஞ்சன், கோவை: காஷ்மீர் பிரச்னைக்கு சுமூகமான, விரை வான தீர்வு காண ஒரே வழி என்ன சார்?
ஏற்கனவே சொல்லி விட்டேன். மீண்டும் கூறுகிறேன்... 'இரும்புக் கரம்' ஒன்றுதான் ஒரே வழி! 'காஷûவாலிடீஸ்' கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்... சீனாவிலுள்ள, 'டினா மென் ஸ்குயர்' சம்பவத்தை நினைவில் கொள்ளுங்கள்... யாராவது கேள்வி கேட்டார்களா?
***
*எஸ்.முரளி, குறிஞ்சிப்பாடி: என் முகத்தை எனக்கே பிடிக்கவில்லை... என்ன செய்யலாம்?
சூப்பர் சான்ஸ்யா உமக்கு, உடனே, சினிமாவுலே சேர்ந்துடும். நம்ம சினிமா ஹீரோக்களுக்கு சரியான போட்டியாக இருப்பீர்!
***
**வி.ஆர்.கே.ராதிகா, கூடலூர்: தனக்கு நிகராகப் படித்து, பணி செய்யும் பெண்களிடமும், அதிகமாக வரதட்சணை வாங்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழகத்தின் பல மாவட்டங் களில் இந்தக் கொடுமை மறைந்து விட்டது. ஆனால், 100 சதவீத கல்வி அறிவு பெற்று விட்ட மெத்த படித்தவர்கள் நிறைந்த குமரி மாவட்டம், ஏனோ இந்த விஷயத்தில் இன்னும் படுபாதாளத்தில் கிடப்பது ஆச்சரியத்தையும், வருத்தத்தையும் தருகிறது. கொடுப்பவர்கள் இருக்கும் வரை, கேட்பவர்களுக்கும் பஞ்சமிருக்காது... 'முடியாது' என முடிவெடுக்க இந்த மாவட்டக் காரங்களுக்கு, 'தில்'இருக்கிறதா?
***
