PUBLISHED ON : ஜூலை 03, 2011

இதுவரை: கவிதாவின் மாஜி கணவனான ஆண்டர்சனால் ஏற்பட்ட குழப்பத்தில், நரேனுக்கும் - மதுரிமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நரேனை விட்டு, சிறிது காலத்திற்கு பிரிந்திருக்க விரும்பினாள் மதுரிமா. ஆனால், நரேனின் சி.இ.ஓ., வைத்தீஸ்வரனின் யோசனைபடி, நரேன் முந்தி கொண்டு, மதுரிமாவுக்கு விவாகரத்துக்கான வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான். அதற்கேற்றாற்போல், மதுரிமாவின் தாய், இந்தியாவுக்கு திரும்பி போய், மதுரிமாவுக்கு வேறு திருமணம் செய்து வைப்பதாக கூறினாள். இதெல்லாம், மதுரிமாவின் மனதில் விபரீத எண்ணத்தை ஏற்படுத்தியது—
மதுரிமாவும், அவள் தாயும், இந்தியாவுக்கு போக, ஏர்லைன்ஸ் நிறுவனங்களோடு, டிக்கெட் முன் பதிவுக்காக ஆன்லைனில் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் மதுரிமா. எப்படியாவது இந்தியாவுக்குப் போய் கொஞ்ச நாள் இருந்தால், இடமாற்றம் மதுரிமாவின் மனதில் மாற்றம் ஏற்படுத்தும் என்று நம்பினாள் மதுரிமாவின் அம்மா.
''என்ன மது... டிக்கெட் இருக்கிறதா?''
''இல்லம்மா... இன்னும், நாலஞ்சு நாட்கள் ஆகும்.''
''இன்னும், நாலஞ்சு நாளா... இந்த வீட்டிலேயா? வேணாம் மது... நம்ம வீட்டுக்கு போயிடலாம்; டாக்சியை வரவழை.''
இந்தியாவில் இருக்கிற அப்பாவுக்கு எதுவும் தெரியாது; விளக்கமா சொல்லணும். நரேனை விட்டு பிரிந்து செல்வதிலேயே குறியாக இருந்தாள் அவள் அம்மா. மதுவின் மனசுக்குள் லேசாக வலித்தது. இன்னும், நான்கைந்து நாட்களில் வேறு ஏதாவது பெரிதாக நடந்து, இந்த சூழ்நிலை அடியோடு மாறி, அவளும், நரேனும் மீண்டும் சந்தோஷமாக வாழும் அற்புதம் நிகழாதா என, அவள் உள் மனது ஏங்கியது.
''வேணாம்மா... நாலஞ்சு நாள் இங்கேயே இருப்போம். எனக்கு, என்னமோ நீ சொல்றது சரியாப்படல.''
மதுரிமாவின் முகத்தை அவள் தாய் உற்றுப் பார்த்தாள். மகள் மனசுக்குள் அனுபவிக்கும் வேதனையை அவளால் உணர முடிந்தது.
''என்ன மது... உனக்கு கஷ்டமா இருக்கா? பிரியறதுல உனக்கு இஷ்டம் இல்லையா?''
அம்மாவின் கேள்விக்கு, பதில் சொல்லாமல், மவுனமாக, அசைவற்றவளாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தாள்.
''மது... உன் நிலைமை எனக்கு புரியுது... ஆனா, வேற வழியில்ல. இந்த ஆள் கூட இனியும் வாழணும்ன்னு பிரியப்பட்டா, உன்னோட நிலைமை இன்னும் மோசமாயிடும். அம்மா சொல்றத புரிஞ்சுக்க.''
மதுரிமாவுக்கு, அம்மாவின் பேச்சு எரிச்சலை தந்தது. இந்த, ஒரு மாத கால வாழ்க்கையில் நானும், நரேனும் எத்தனை சந்தோஷமாக இருந்திருக்கிறோம் என்பது புரியாமல் பேசுகிறாள்.
''அதுக்கில்லம்மா... விவாகரத்து என்பது எனக்கும், நரேனுக்கும் நடந்த கல்யாணத்தை மட்டுமே ரத்து செய்யற விஷயம் இல்ல. என்னோட எதிர்கால வாழ்க்கையையே நான் ரத்து பண்ணிடுற மாதிரி தோணுதும்மா.''
சொல்லும் போதே மதுரிமாவின் அழகிய கண்களில், முத்து முத்தாய் நீர்க்கோத்து, அவள் கன்னங்களில் உருண்டது. மதுரிமாவின் கண்ணீரை விரல்களால் துடைத்தபடி, அவள் தாய் பேசினாள்...
''ஏன் அப்படி நினைக்கற... உன் வாழ்க்கை அப்படி போறதுக்கு நான் விட்டுருவேனா; விடமாட்டேன்.''
அம்மா என்ன சொல்கிறாள் என்பது, அவளது உறுதியான குரலில், மதுரிமாவுக்குத் தெளிவாகவே புரிந்தது. அம்மா நாசூக்காகவும், பூடகமாகவும் மதுரிமாவின் மறுமணத்தைப் பற்றி, மறுபடியும் பேச்செடுக்கிறாள். அம்மாவே தொடர்ந்தாள்...
''ஆமா... இந்த மாசம் தலைக்கு தண்ணீர் விட்டுண்டியா?''
மறுபடியும், மவுனமாக இருந்தாள் மது.
''மது... நான் என்ன கேக்கறேன்னு புரியுதா?''
''நல்லாவே புரியுதும்மா... என்னோட பீரியட் பத்தி கேக்குற. இந்த மாசம் நான் இன்னும் தலை முழுகல.''
''நிஜமாவா... எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு?''
''மூணு நாளாச்சு...''
மகள் இப்படி சொல்லும் போது, ஒரு தாய் மிகவும் சந்தோஷப்படுகிற ஒரு விஷயம்... ஆனால், மதுவின் தாய் சந்தோஷப் படவில்லை.
''மூணு நாள்தானே... பரவாயில்ல... அப்ப நாம ஒண்ணுப் பண்ணுவோம். இங்கிருந்து முதல்ல ஒரு நல்ல ஓட்டலுக்குப் போயிடுவோம். அப்புறமா இங்கேயே நல்ல டாக்டரை போய் பார்த்துட்டு, நாலஞ்சு நாள் கழிச்சே ஊருக்குப் புறப்படுவோம்.''
''டாக்டரையா... எதுக்குமா?''
''வேற எதுக்கு? அவனே வேணாம்ன்னு ஆயிடுச்சு. அதுக்கப்புறம் அவனோட குழந்தை மட்டும் எதுக்கு? பேசாம கலைச்சிடுவோம்.''
அம்மா சொன்னதும், இடது கையால் அடிவயிற்றையும், வலது கையால் வாயையும் பொத்தியபடி குலுங்கி அழுதாள்.
''அழாதே மது... அம்மா எதையும் தப்பா சொல்லிடல. அம்மா இப்ப சொல்றது உன் நன்மைக்காகத்தான்னு நீ அப்புறமா புரிஞ்சுக்குவே.''
கொஞ்சமும் இரக்கமின்றி கருவை கலைக்கச் சொல்கிறாளே... இது, ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவும், வாழ்க்கையும் அல்லவா! வேண்டும் போது கட்டுவதற்கும், வேண்டாம் என்ற போது கலைப்பதற்கும் வாழ்க்கை என்பது சிறுவர்கள் கடற்கரையில் கட்டி விளையாடும் மணல் வீடா?
''இல்லம்மா... அது மட்டும் என்னால முடியாது. என்னோட சண்டை, வருத்தம் எல்லாம் நரேனோடு தான்; என் குழந்தையோடு இல்ல.''
''மது... நீ புரியாமப் பேசற. ஒரு பொண்ணுக்கு குழந்தைங்கறது ரொம்ப சந்தோஷமான விஷயம்தான். ஆனா, இந்தக் குழந்தையோட விஷயம் அப்படி இல்ல. விவாகரத்துக்குப் பிறகு இந்தக் குழந்தை உனக்கு சந்தோஷமா இருக்காது; பிரச்னையா மாறிடும்.''
''பிரச்னையா மாறிடுமா... யாருக்கு; எனக்கா?''
''உனக்கு இல்ல... உன்னைத் தவிர்த்து மத்தவங்களுக்கு.''
''மத்தவங்களா... மத்தவங்கன்னு நீ யாரைச் சொல்ற?''
''மது... வாழ்க்கை என்பது, ஆயிரம் காலத்துப் பயிரு. உன்னோட வாழ்க்கை இந்த விவாகரத்தோட சுலபமா முடிஞ்சு போற விஷயமில்ல. இதுக்கப்புறமும் நீ சந்தோஷமா, ரொம்ப காலத்துக்கு வாழணும்.''
''அதுக்காக நான் என்ன செய்யணும்கற?''
''நீ மறுபடியும் வேற ஒரு கல்யாணம் செய்துக்கணும்.''
''போதும்மா... இதுக்கு மேல தயவு செஞ்சு எதையும் பேசாதே. நீ சொன்னீயே, ஆயிரம் காலத்துப் பயிரு. அதுவே, என் வயித்துல வளர்றதா வெச்சுக்குவோம். அது ஒண்ணு போதும். பயிர் நாற்றா இருக்கும் போதே அதுக்கு நெருப்பு வெச்சுட்டு, அடுத்த போகத்துக்கு ஆசைப்படுறவ நான் இல்ல. இந்தப் பேச்சை இத்தோடு விட்டுடு.''
''மது... இப்ப நீ ரொம்பவும் கோபமாகவும், வருத்தமாகவும் இருக்க. இப்ப இதபத்தி உன்னால் சரியா யோசிக்க முடியாது. நிதானமாக யோசிச்சுப் பாத்தா, நான் சொல்றத உன்னால் புரிஞ்சுக்க முடியும். முதல்ல ஊருக்குப் போவோம். மத்த விஷயங்களை அப்புறம் பாத்துக்குவோம்.''
''அப்புறம் பாத்துக்க இதுல என்ன இருக்கு?''
''எவ்வளவோ இருக்கு. நாம் ஊருக்குப் போனதும் நான், உன் மாமா கிட்ட இதை பத்திப் பேசறேன். எல்லாம் சரியாகவே நடக்கும்.''
''மாமாகிட்ட பேசப் போறீயா? என்னைப் பத்தி மாமாகிட்ட நீ பேசறதுக்கு என்னம்மா இருக்கு?''
''என் அண்ணனோட பையன், பாஸ்கரன் இருக்கான் மது.''
''ஆமா... பாஸ்கரன் இருக்கார்... அவருக்கென்ன இப்போ?''
''பாஸ்கருக்கு உன்னைப்பத்தி நல்லாவே தெரியும். அவன் உன்னை தப்பாவே எடுத்துக்க மாட்டான். அண்ணன்கிட்ட பேசி உனக்கும், பாஸ்கருக்கும் ரெண்டாவது கல்யாணம்...''
''நிறுத்தும்மா... விட்டா நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற. என்னைப் பத்தி நீ என்ன நெனச்சுக்கிட்டிருக்க... முதல்ல நரேன், இப்ப நரேனுக்கப்புறமா பாஸ்கர். அப்புறம் பாஸ்கருக்கு அடுத்து யாரு?''
''என்ன மது... இப்படி கேக்கற?''
''வேற எப்படி கேக்கச் சொல்ற... ஒருத்தர் இல்லேன்னதும், வேற ஒருத்தர் தொட்டுக்கிட்டே இருக்கணும்ன்னு ஆசைப்படறவ இல்லேம்மா உன்னோட பொண்ணு... நீ சொல்றத நினைச்சாலே என் உடம்பு கூசுதும்மா.''
''இதோ பார் மது... உன் உடம்பு கூசணும்கறதுக்காக நான் இதை சொல்லல... உடம்பாகட்டும், மனசாகட்டும். ஆசைங்கறது வேற, தேவைங்கறது வேற. நீ ஆசையப் பத்திப் பேசற; நான் தேவையைப் பத்தி சொல்றேன். உனக்கு இது புரியறதுக்கு இன்னும் கொஞ்சம் நாள் பிடிக்கும்.''
''அம்மா... நீ ஆயிரம் சொன்னாலும் சரி... நீ சொல்வதை நான் ஏற்கப் போவதில்லை. எனக்கு, இன்னொரு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தை தயவு செய்து மாற்றிக் கொள். அதற்கு ஒரு போதும் நான் சம்மதிக்க மாட்டேன். நீ சொன்ன விவாகரத்துக்கு நான் ஏன் ஒப்புக் கொண்டேன் தெரியுமா?''
''உன் புருஷன் அந்த கவிதா மேல் ஆசைப்படுகிறான் என்பதால்தானே?''
''நிச்சயமாக இல்லை... என் புருஷனுக்கு என் மேல ஆசை வரவேண்டும் என்பதற்காகத்தான் நான் இதற்கு சம்மதித்தேன்.''
''உன்னை விவாகரத்து செய்து விட்ட பிறகு, உன் புருஷனுக்கு உன் மேல் எப்படி ஆசை வரும் மது?''
''ஆசை வரும்... என் மேல் நரேன் வைத்திருக்கும் அன்<பு, ஆசை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நான் செய்ய நினைத்தது விவாகரத்து அல்ல; ஒரு தற்காலிகப் பிரிவு. இந்தப் பிரிவு நிச்சயம் அவரை யோசிக்க வைக்கும். என் பயம் நரேனைப் பற்றியது அல்ல. என் பயமெல்லாம் கவிதாவின் மேல்தான். என்னுடைய பயத்தை நரேன் புரிந்துக் கொள்ளும் போது, நிச்சயம் அவர் என்னிடம் வந்து விடுவார்.''
''மனைவிக்கு கணவன் மேல் நம்பிக்கை இருப்பதில் தவறில்லை. ஆனால், அவளது அளவு கடந்த நம்பிக்கையே சில நேரங்களில் அவளுக்கு எதிராக மாறிவிடும்.''
''எந்த விதத்தில் எதிராக மாறும்?''
''ஆண்களுக்கு சபல புத்தி அதிகம். சந்தர்ப்பம் கிடைக்காத வரையில் எல்லா ஆண்களுமே ஏகபத்தினி விரதர்கள்தான். ஆனால், சந்தர்ப்பமும், சபலமும் ஒன்றாக கைகோர்க்கும் போது, மனைவியின் நம்பிக்கை தூள் தூளாக சிதறி விடும்.''
''மனைவி, புருஷன் மேல் நம்பிக்கை வைக்கறது தப்புன்னு சொல்றியா?''
''சேச்சே... நான் அப்படி சொல்லல. நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, எல்லாத்துக்குமே ஒரு வரைமுறை இருக்கு. வெறும் நம்பிக்கைல மட்டுமே, முழு வாழ்க்கையை வாழ்ந்துட முடியாது. உன்னை ஒண்ணு கேட்கட்டுமா மது?''
''கேளும்மா...''
''நம்பிக்கையை பத்தி பெரிசா பேசறியே... அந்த கவிதா, ஆயிரம் முயற்சி செய்யட்டும்... நீ தான் உன் புருஷன் மேல் பெரிசா நம்பிக்கை வெச்சிருக்கிறீயே... எதனால உனக்கு இந்த சந்தேகமும், பயமும் வந்தது. எதுக்காக உங்களுக்குள்ள இந்த பிரச்னை வந்தது?''
''அம்மா... நான் மறுபடியும் சொல்றேன்... என் சந்தேகமோ, பயமோ நரேன் மேல இல்ல... எனக்கு அந்த கவிதா மேலத்தாம்மா பயமும், சந்தேகமும்.''
மதுரிமா சொன்னதை கேட்டு, மென்மையாக சிரித்தாள் அவளது தாய். அவள் சிரித்த விதம் மதுரிமா சொல்வதை அவள் நம்பவில்லை என்பதைப் போல் இருந்தது.
''எதுக்கும்மா சிரிக்கற?''
''சிரிக்காம என்ன பண்றது. கவிதா மேல் மட்டும் தான் பயமும், சந்தேகமும்ன்னு சொல்றியே... இது ஒருத்தர் மட்டுமே ஆசைப்பட்டோ, விருப்பப்பட்டோ நடந்துடுற விஷயம்ன்னு நெனச்சியா மது? இல்லம்மா... இது, ஒரு கை ஓசை விஷயமில்ல... ரெண்டு கைகளும் சேர்ந்து எழுப்புற ஓசைம்மா... இது, உன் புருஷனுக்கு மட்டுமல்ல... எல்லாரோட புருஷனுக்கும் பொருந்துற விஷயம்தான்.''
அம்மா சொன்னதில் மதுரிமாவிற்குள் லேசான பயம் எழுந்தது. 'ஒரு வேளை அம்மா சொல்ற மாதிரி எனக்கும் தெரியாமல், இதில் நரேனின் பங்கு ஏதாகிலும் இருக்குமோ...' அவளது நினைப்பை அவளின் உள்மனம் ஏற்க மறுத்தது.
''இல்லம்மா... நீ சொல்றதை நான் மறுக்கிறேன். நரேன் அப்படிப்பட்டவர் இல்ல...''
''எதைவெச்சு அத்தனை உறுதியா சொல்ற மது?''
அம்மாவின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல், யோசித்து சொன்னாள்...
''வேற எதையும் வெச்சு இல்ல; என்னை வெச்சுத்தான் சொல்றேன்.''
இதை வெகு அழுத்தமாகவும், அதே நேரத்தில் நிதானமாகவும் சொன்னாள் மதுரிமா.
''உன்னை வெச்சா... புரியலையே மது?''
''ஆமாம்மா... என்னை வெச்சுத்தான் சொல்றேன். இந்த விஷயத்துல, நரேனை, நான் ரொம்பவும் சந்தோஷமாவே வெச்சிருக்கேன். என்னிடம் இல்லாத ஒண்ணு, என்னிடம் கிடைக்காத ஒண்ணுன்னு அந்த கவிதாகிட்ட எதுவும் இல்லேன்னு நான் நம்பறேன். என்னை மன்னிச்சிடும்மா... இந்த மதுரிமா தோற்கப் பிறந்தவள் இல்ல. நான் நரேனை ஜெயித்துக் காட்டுகிறேன்.''
''உன்னால் முடியுமா?''
''நிச்சயமாக முடியும்... நீ பார்க்கத்தானே போகிறாய்...''
''எப்படி?''
''நரேன் அனுப்பிய விவாகரத்து நோட்டீசில நான் கையெழுத்துப் போட்டு அனுப்பப் போகிறேன். நீ விரும்பியபடியே நாம் இந்தியாவுக்கு கொஞ்ச நாள் போகலாம். ஆனால், உன் அண்ணன் மகன் பாஸ்கரனை மணப்பதற்காக அல்ல. நரேனே என்னைத் தேடி வரும்படி செய்வதற்காக.''
மதுரிமாவின் நம்பிக்கையும், உறுதியும் அவள் தாயை அதிர வைத்தது.
— தொடரும்.
- தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்
