PUBLISHED ON : மார் 06, 2022

ம. வசந்தி, திண்டிவனம்: மருத்துவ படிப்பு மோகம் எப்போது குறையும்?
இன்னும் ஐந்து ஆண்டுகளில்... நுாற்றுக்கணக்கானோர் மருத்துவராகி விடுவர்... அப்போது, இன்ஜினியரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது போல, இதற்கும் நடக்கும்!
த. வேல்முருகன், ஈரோடு: வாரமலர் தொடர்ந்து அச்சு இதழாகவே வெளிவருமா அல்லது மின் இதழாக வர வாய்ப்பு உள்ளதா?
ஏன் வேல்முருகன்... மின் இதழ்களை பார்ப்பதில்லையா? பல ஆண்டுகளாக, வாரமலர் மின் இதழாகவும் வெளி வந்து கொண்டு தானே இருக்கிறது... பின் எப்படி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடாவில் இருந்து என் கேள்விகளை படித்துவிட்டு, வாசகர்கள் கடிதம் எழுதுகின்றனர்?
* எம். சுப்பையா, துாத்துக்குடி: கவலைப்படாமல் இருக்க ஒரு மனிதனால் முடியுமா?
மூச்சு விடாமல் இருக்க, வழி இருக்கிறதா என்ன?
கு. அருணாசலம், தென்காசி: குழந்தைகளுக்கு, 'ஹெல்மெட்' என்பதெல்லாம்...
எடுபடாது... அவர்களின், பெற்றோர்களே அணிவது கிடையாது! 'டிராபிக் போலீசாரை' கேட்டால், 'எஸ்.ஐ., தான் பிடிக்க வேண்டும்...' என்கின்றனர்... இது நடக்கக் கூடிய காரியமா?
எஸ். குமார், சென்னை: இப்போதும் உலகில் யோக்கியர்கள் இருக்கின்றனரா?
ஏன் இல்லாமல்... நுாற்றில், 10 சதவீதம் பேர் தான் அயோக்கியர்கள் என்று நம்புகிறேன்!
எஸ். கேசவன், கோவை: 'எதையும் தாங்கும் இதயம் எனக்கு இருக்கிறது...' என்கிறானே, என் நண்பன்...
'வெரி குட்...' அவருக்கு, 'இறுதி' வரை இன்பம் உண்டு!
* ஆர். சாந்திபிரபா, குஞ்சன்விளை, கன்னியாகுமரி: 'ஊழலை ஒழிக்க, தி.மு.க.,வால் தான் முடியும்...' என, கனிமொழி எம்.பி., கூறுகிறாரே...
சினிமாவின் தமாஷ் நடிகர்களை மிஞ்சி விடுவார் போலிருக்கிறதே!
மா. கண்ணா, தென்காசி: 'கடந்த, 55 ஆண்டுகளாக தமிழகத்தில் முன்னேற்றம் இல்லை...' என்று, பா.ம.க., அன்புமணி நொந்து கொள்கிறாரே...
இவரது தந்தை, கட்சி தொடங்கி, 33 ஆண்டுகளாகிறது... மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டது தவிர, என்ன நன்மை செய்துள்ளனர்?
