PUBLISHED ON : மார் 06, 2022

முன் கதைச்சுருக்கம்: 'லிட்டில் ஸ்டார் கால் டாக்சி'யில் தான் முகிலா பயணம் செய்வாள் என, அவளது தோழி அதுல்யா கூறினாள். இதையடுத்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், டிரைவர் மகுடபதியிடம் விசாரணை நடத்தி, 'டாக்சி'யின் பின்சீட்டில் சோதனை செய்தவர் திடுக்கிட்டார் -
'டாக்சி'யின் உட்புறத்தை வெளிச்சப்படுத்தி, பின் சீட்டுக்குக் கீழே, ஒரு ஓரத்தில் விழுந்து கிடந்த அந்த மினுமினுப்பான பொருளை, உற்றுப் பார்த்து, குனிந்து எடுத்தார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன்.
அது, வெளிர் நீலநிறத்தில் வெள்ளைப் புள்ளிகளோடு பாதியாய் உடைந்து போன கண்ணாடி வளையல் துண்டு.
அதை உயர்த்திப் பிடித்தபடி குரல் கொடுத்தார்...
''மகுடபதி...''
''சார்...''
'டாக்சி'க்கு வெளியே கலக்கத்தோடு நின்றிருந்த மகுடபதி வேகமாய் வந்து கதவுக்குப் பக்கத்தில் நின்றான்.
அந்த அரைவட்ட வளையலை காட்டி, ''இது என்னான்னு தெரியுதா?'' என, கேட்டார், முத்துக்குமரன்.
மகுடபதியின் பார்வை இறுகியது.
''வளையல் மாதிரி தெரியுது சார்.''
''வளையலே தான்... உடைஞ்ச வளையல். இது எப்படி, 'டாக்சி'க்குள்ளே?''
''அ... அது வந்து சார்...''
''சொல்லு.''
''அநேகமாய் இந்த வளையல் துண்டு, நீங்க சொன்ன அந்த முகிலாங்கிற பெண்ணோடதா இருக்கலாம் சார்.''
''அது எப்படி அவ்வளவு நிச்சயமாய் சொல்ற?''
''இ... இந்த வளையல்...'' மகுடபதி தொண்டைக்குழி அவஸ்தையாய் எச்சிலை விழுங்க, பேச்சு வர மறுத்தது. குளிரிலும் முகம் வியர்த்திருந்தது.
''இதோ பார்... நீ பேசற ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாய் இருக்கணும்; ஒரு வார்த்தை பொய்யா இருந்தாலும் சரி, உன்னை, 'லாக் - அப்'புக்கு கூட்டிப் போய், போலீஸ் மரியாதையோடு உன்கிட்டயிருந்து உண்மையை வாங்க வேண்டியிருக்கும்,'' என்றார், முத்துக்குமரன்.
''வேண்டாம் சார்... நடந்த உண்மையைச் சொல்லிடறேன்.''
''சொல்லு.''
''அவினாசி ரோடு மேம்பாலம் ஏறி ரவுன்ட்டானாவுக்கு, 'டாக்சி' திரும்பும்போது, திடீர்ன்னு ஒரு, 'டூ-வீலர்'காரன் குறுக்குல வந்துட்டான். நான் அவன் மேல மோதாம இருக்கிறதுக்காக, 'சடன் பிரேக்' போட்டேன். அப்ப, பின் சீட்ல உட்கார்ந்து மொபைல் போனில் பேசிட்டிருந்த அந்தப் பொண்ணு, நிலை தடுமாறி முன் சீட்ல போய் மோதிகிட்டா...
''மோதின வேகத்துல அவ கையில் போட்டிருந்த வளையல் உடைஞ்சிடுச்சு... 'டூ-வீலர்'காரன் மேல தப்பு இருந்ததால, அந்தப் பொண்ணு என்னைத் திட்டலை... அவனைத்தான் இங்கிலீஷ்ல திட்டினா.''
''அந்த உடைஞ்ச வளையல் தான் இதுன்னு சொல்ல வர்றியா?''
''ஆமா சார்.''
''எத்தனை வளையல் உடைஞ்சுது?''
''தெரியலை சார்... காரை சுத்தம் பண்ணும்போது பார்த்துக்கலாம்ன்னு இருந்துட்டேன்.''
மறுபடியும் குனிந்து, பின் சீட்டுக்கு கீழே வளையல் துண்டுகள் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தார், முத்துக்குமரன். ஒரு நிமிஷ தேடலுக்குப் பின் மகுடபதியிடம், ''ஒரு வளையல் உடைஞ்சிருந்தாலும் ரெண்டு மூணு துண்டுகளாவது இருக்கணும்... ஆனா, ஒரே ஒரு வளையல் துண்டுதானே டாக்சிக்குள்ளே கிடக்கு.''
''சீட்டுக்கு அடியில் இருக்கும் சார்.''
''இல்லையே... நான் பார்த்துட்டேன். நீ வந்து தேடு,'' என்ற முத்துக்குமரன், கையில் வைத்திருந்த வளையல் துண்டோடு, 'டாக்சி'யிலிருந்து வெளிப்பட்டார்.
மகுடபதி வியர்த்து வழிந்தபடி நின்றிருக்க, அவனுக்கு பின்புறமாய் இருந்த தருண் கத்தினான்.
''ம்... போய்த் தேடு... என்ன பார்த்துட்டிருக்கே?''
மகுடபதி தயக்க நடை போட்டு, 'டாக்சி'க்குள் நுழைந்து உள்ளே பரவியிருந்த வெளிச்சத்தில் வளையல் துண்டுகளை தேட ஆரம்பித்தான்.
''சார்... இந்த டிரைவர்கிட்டே ஏதோ தப்பு இருக்கு... இவனால் தான் என் முகிலாவுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்கணும். இவனை இப்படியெல்லாம் விசாரிச்சா உண்மை வெளியே வராது சார்...
''நீங்க சொன்ன மாதிரி, 'லாக் - அப்'புக்கு கூட்டிப் போய், 'ரெட் செல்'லில் உட்கார வெச்சு விசாரிச்சாத்தான் அவன் உண்மையை பேசுவான். நாம இந்த விஷயத்துல, 'லேட்' பண்ணக் கூடாது சார்,'' என்றான், கம்மிய குரலில் புவனேஷ்.
பக்கத்தில் இருந்த தருண், புவனேஷின் தோளின் மீது கையை வைத்து, ''கொஞ்சம் பொறு புவனேஷ்... டிரைவர் மகுடபதியை நாம சரியான நேரத்துல, 'கார்னர்' பண்ணிட்டோம். அவன் இனி உண்மையைப் பேசியே ஆகணும். தப்பிக்க வாய்ப்பேயில்லை முகிலாவை எப்படியும் மீட்டுடலாம்.''
டிரைவர் மகுடபதி, 'டாக்சி'க்குள்ளே இன்னமும் தேடிக் கொண்டிருக்க, ''என்ன, மீதி வளையல் துண்டுகள் கிடைச்சுதா?'' குரல் கொடுத்தார், முத்துக்குமரன்.
''இல்ல சார்.''
''நல்லா தேடு.''
''பா... பார்த்துட்டேன் சார்... ஒரு சின்ன துண்டு கூட இல்லை.''
''சரி, நீ வெளியே வா.''
வியர்த்துக் கொட்டும் உடம்போடு, 'டாக்சி'யிலிருந்து மகுடபதி வெளிப்பட, கையசைத்தார், முத்துக்குமரன்.
''இப்படி வந்து என் முன்னாடி நில்லு.''
''சார்... அந்த பொண்ணைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது சார்.''
''அதைப்பத்தி அப்புறமா பேசுவோம். மொதல்ல இந்த வளையல் விவகாரத்தைப் பார்ப்போம்... முகிலா கையில் போட்டிருந்த வளையல் எப்படி உடைஞ்சதுக்கான காரணத்தை நாங்க நம்பற மாதிரி நீ சொல்லிட்டே. ஆனா, உடைஞ்ச வளையலோட மற்ற துண்டுகள் எங்கேங்கிற கேள்விக்கு உன்கிட்டயிருந்து சரியான பதில் வரலையே.''
''அந்தப் பொண்ணு அதை எடுத்து வெளியே வீசியிருக்கும்ன்னு நினைக்கிறேன் சார்.''
''அதாவது, 'டாக்சி' போயிட்டிருக்கும் போதே, முகிலா அந்த வளையல் துண்டுகளை வெளியே எடுத்து வீசியிருப்பான்னு சொல்றே?''
''ஆமா சார்.''
''அப்படி வீசினதை நீ பார்த்தியா?''
''இல்ல சார்.''
''அப்புறம் எப்படி நீ சொல்றதை நாங்க நம்பறது?''
''சார்... நீங்க பேசறதைப் பார்த்தா, நான்தா அந்தப் பொண்ணை ஏதோ பண்ணிட்ட மாதிரி இருக்கு சார்.''
''ஏன் அப்படி இருக்கக் கூடாது?''
முத்துக்குமரனின் பேச்சில், மகுடபதியின் முழு உடம்பும் ஒரு அதிர்வுக்கு உட்பட்டு நடுங்கியது. கைகள் தன்னிச்சையாய் ஒரு கும்பிடு போட்டது.
''சார், அந்தப் பொண்ணு யார்ன்னே எனக்குத் தெரியாது. என்னப் பொறுத்த வரைக்கும் ஒரு வாடிக்கையாளர் அவ்வளவுதான். வளையல் எப்படி உடைஞ்சதுங்கிறதுக்கான காரணத்தையும் சொல்லிட்டேன். டி.பி., ரோட்ல இறங்க வேண்டிய பொண்ணு, பூ மார்க்கெட்ல ஏன் இறங்கினாள்ன்னு எனக்குத் தெரியாது.''
''இதோ பார், இப்படியெல்லாம் கும்பிடு போட்டு அப்பாவித்தனமா மூஞ்சியை வெச்சுகிட்டு பேசிட்டா, தலையாட்டிட்டு போயிடுவேன்னு நினைச்சியா? இப்ப மணி, 6:30. உனக்கு இன்னும் ஒரு மணி நேரம் அவகாசம் தர்றேன். 'லாக் - அப்'புக்குள்ளே உட்கார்ந்து நல்லா யோசனை பண்ணு.
''முகிலாவுக்கு என்னாச்சுங்கிற உண்மையை நீயாவே முன் வந்து சொல்லிட்டா, அந்த நிமிஷமே நீ, 'லாக் - அப்'பிலிருந்து வெளியே வந்துடலாம். இப்ப சொல்லிட்டிருக்கிற பொய்யையே திரும்பவும் சொல்லிட்டிருந்தா, அப்புறம் நடக்கறதே வேற.''
மகுடபதி லேசாய் கோபப்பட்டு, ''சார்... நான் இப்ப சொல்லிட்டிருக்கிறதே உண்மை தான். இதுக்காக, 'லாக் - அப்'புக்குள்ளே போய் உட்கார்ந்துகிட்டு யோசனை பண்ண வேண்டியதில்லை... என்னை விசாரிச்சு நேரத்தை, 'வேஸ்ட்' பண்ணாம அந்தப் பொண்ணைப் போய் தேடுங்க சார்...
''அவகிட்ட ஏதோ தப்பு இருக்கு... இன்னும் சொல்லப் போனா அந்தப் பொண்ணே தப்பான பொண்ணு மாதிரி எனக்குத் தெரியுது. வேளை கெட்ட நேரத்துல முகத்துக்கு பவுடர் பூச்சும், தலைக்கு மல்லிகைப்பூவும்...''
மகுடபதி அலட்சியான குரலில் பேசிக் கொண்டிருக்கும் போதே, முத்துக்குமரன் இரண்டடி முன் வந்து, தன் வலது கைக்கு முழு பலத்தையும் கொடுத்து, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
மகுடபதி நிலைகுலைந்து போய், 'டாக்சி'யின் மேல் போய் மோதி விழுந்தான். அவன் சட்டையின் காலரை கொத்தாய் பிடித்து துாக்கிய முத்துக்குமரன், ''முகத்துக்கு பவுடர் பூசி, தலைக்கு மல்லிகைப்பூவை வெச்சுகிட்டா அவ தப்பான பொண்ணா?''
''சாரி சார்.''
''என்னடா சாரி... நீ ஒரு குடிகாரன். காலங்காத்தால தண்ணியைப் போட்டுகிட்டு துாங்கிட்டிருக்கே. நீ போலீசுக்கு, 'அட்வைஸ்' பண்றியா?'' சொன்ன முத்துக்குமரன் இடது கையை மூர்க்கமாய் வீச, மகுடபதி கன்னத்தில் அந்த வீச்சு, இடியாய் இறங்கியது.
பொறி கலங்கிய மகுடபதி, அப்படியே மண்டியிட்டு கைகளைக் கூப்பினான். கண்களில் நீர் நிரம்பி தத்தளித்தது.
''அடிக்காதீங்க சார்.''
''அப்ப உண்மையைச் சொல்லு... முகிலாவை என்ன பண்ணினே... அந்தப் பொண்ணு இப்ப எங்கே?''
''சத்தியமாய் எனக்கு ஒண்ணும் தெரியாது சார். அந்தப் பொண்ணு பூ மார்க்கெட் முனையில, 'டாக்சி'யை நிறுத்தச் சொல்லி இறங்கிப் போயிட்டா.''
''நீ பேசற இந்த பொய், ரொம்ப நேரத்துக்கு உயிரோடு இருக்காது. என்ன நடந்திருக்கும்ன்னு நான் சொல்றேன், நீ, 'டாக்சி'யை ஏதோ ஒரு இடத்துல நிறுத்தி, முகிலாகிட்ட தப்பாய் நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கே. அப்ப நீ குடிபோதையில் இருந்திருக்கணும். அந்தப் போராட்டத்துல தான் வளையல்கள் உடைஞ்சிருக்கணும்.''
''இல்ல சார்... அப்படியெல்லாம் எதுவுமே நடக்கலை.''
''பேசாதே... 'டாக்சி'க்குள்ளே இருந்த உடைஞ்ச வளையல்களை எல்லாம் நீதான் வெளியே எடுத்துப் போட்டுருக்கணும். அப்படி எடுத்து போடும்போது ஒரு வளையல் துண்டை மட்டும் எப்படியோ, 'மிஸ்' பண்ணிட்டே. இப்ப நான் சொன்னதெல்லாம் உண்மையா இல்லையா?''
''இல்ல சார்.''
''உன்னை இங்கே வெச்சு விசாரிச்சா இப்படித்தான் இல்ல இல்லன்னு சொல்லிட்டிருப்பே...'' என்ற முத்துக்குமரன், சற்றுத்தள்ளி நின்றிருந்த வேனைப் பார்த்து, ''சிவராமன்,'' என, குரல் கொடுத்தார்.
''சார்...'' என்றபடியே வெளிப்பட்டார், சிவராமன்.
''இவனை வேன்ல ஏத்து... 'டாக்சி'யையும், 'சீஸ்' பண்ணி ஸ்டேஷனுக்கு கொண்டு போயிடு. நாங்க மூணு பேரும், 'சைபர் க்ரைம் செல்'லுக்குப் போய் புகார் கொடுத்துட்டு, அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடறோம்.''
''எஸ், சார்...'' சொன்ன சிவராமன், வேகமான நடையில் மகுடபதியை நோக்கிப் போனார்.
'சைபர் க்ரைம் ப்ராஞ்ச்!'
'இன்பர்மேஷன் ஷேரிங் அண்ட் அனாலிஸ் சென்டர்' கட்டடத்தின் உள்ளேயிருந்த, 'சைபர் செல்'லில், இன்டர்வென்ஷன் ஆபீசர் நேத்ராவுக்கு முன், முத்துக்குமரன், தருண் மற்றும் புவனேஷ் மூவரும் பதட்டம் பரவிய முகங்களோடு உட்கார்ந்திருந்தனர்.
நாற்பது வயதைத் தொட்டிருந்த நேத்ரா, 'நைட் ஷிப்ட் டியூட்டி' பார்த்த களைப்பு சிறிதும் இல்லாமல் சிறு புன்னகையோடு அவர்களை ஏறிட்டாள்.
''முகிலாவை எப்படியும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே கண்டுபிடிச்சுடலாம்... பதற்றப்படாதீங்க... முகிலாவோட போன், 'ஆண்ட்ராய்ட்' தானே?''
வியர்வை மினுமினுக்கும் முகத்தோடு தலையாட்டினான், புவனேஷ்.
''போன் நம்பரைச் சொல்லுங்க.''
சொன்னான்.
''இந்தப் போனோட ஐ.எம்.ஈ.ஐ., நம்பர் தெரியுமா?''
''ஐடென்டி நம்பர்தானே... தெரியும், மொத்தம், 15 நம்பர்.''
''அதேதான் சொல்லுங்க.''
''ஒரு நிமிஷம் மேடம்,'' என்ற புவனேஷ், தன் மொபைல்போனை எடுத்து, 'மெமரி கார்டு'க்குள் நுழைந்து, அங்கே பதிவு செய்து வைத்திருந்த, முகிலாவின் மொபைல்போனுக்குரிய ஐ.எம்.ஈ.ஐ., எண்ணை சொன்னான்.
அந்த எண்ணை குறித்துக்கொண்ட நேத்ரா, தனக்கு முன்பிருந்த, கம்ப்யூட்டரை வெளிச்சப்படுத்தி, 'கீ போர்டில்' விரல்களை ஓட விட்டாள். சில நிமிடங்களுக்குப் பிறகு இன்ஸ்பெக்டரை ஏறிட்டு, ''சார்.... முகிலாவோட போனின் ஐ.எம்.ஈ.ஐ., நம்பரை செல்லுலார் நெட்வொர்க்குக்கு அனுப்பியிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அவளோட போன் எந்த இடத்துல இருக்குன்னு தெரிஞ்சுடும்.''
''எவ்வளவு நேரமாகும் மேடம்?''
''சொல்ல முடியாது... முகிலாவோட போன் இப்போ எந்த இடத்தில் இருக்கோ அந்த இடத்தைப் பொறுத்து, ஜி.பி.எஸ்., மொபைல் டவர் நமக்கு தகவல் கொடுக்கும்.''
நான்கு பேரும் கனத்த மவுனத்தோடு காத்திருக்க ஆரம்பித்தனர்.
— தொடரும்
ராஜேஷ்குமார்
