PUBLISHED ON : ஜூலை 10, 2022

முருகு. செல்வகுமார், சென்னை: 'வெற்றி, தோல்வி எங்களுக்கு முக்கியமல்ல... மக்கள் பணி ஆற்றுவதே எங்கள் கடமை...' என்கிறாரே, நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான்...
இதுவரை எத்தனை மக்கள் பணிகள் ஆற்றியுள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டியது தானே... அறிக்கைகள் விடுவதே, மக்கள் பணியாக நினைக்கிறார் போலும்!
ரா. வெங்கடேசன், உளுந்துார்பேட்டை: பில்லி, சூனியம், ஏவல்... இவைகள் மீது, உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
நமது நாளிதழில் தினமும் வெளி வரும், 'நாள் பலன்' கூட படிக்க மாட்டேன்... அப்புறம் தானே நீங்கள் கேட்டது எல்லாம்!
* ஆர். சுந்தர், சென்னை: நான் மிகவும் நேர்மையாக இருக்கிறேன்... 'இதனால், என்ன சாதித்துவிடப் போகிறாய்...' என்று கேட்கிறானே, என் நண்பன்; அவனுக்கு, என்ன பதில் சொல்ல வேண்டும்?
உங்களைப் போன்றவர்கள் தான், அடுத்த தலைமுறையின் நெஞ்சில் நிலைத்து நிற்பீர்கள்! இதைச் சொல்லுங்கள், உங்கள் நண்பரிடம்!
எல். ரங்கநாதன், கடலுார்: அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனரே... ஏன்?
அவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளின் தரம் தெரிந்திருப்பதால் தான்!
* எஸ். ராம்குமார், சிவகாசி: 'அ.தி.மு.க., பொதுக்குழுவில் கலந்துகொள்ளும் அனைவரும், கட்டாயம் முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்...' என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறாரே...
முதலில், முதல்வர் ஸ்டாலினிடம் இதை, சுப்பிரமணியன் கூறி இருக்க வேண்டும்... முதல்வர், முக கவசம் அணியாமல் மக்களை சந்திக்கிறாரே...
என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி: 'மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை...' என்ற வைகோவின் குற்றச்சாட்டு பற்றி...
வைகோ இப்போதெல்லாம், நல்ல தமாஷ் அறிக்கை வெளியிட்டுக் கொண்டுள்ளார்! ஜனநாயகம் இல்லை என்றால், இவரது கட்சி காணாமல் போயிருக்குமே!
சூ. அந்தோணிசாமி, நாகர்கோவில்: தமிழகத்தில், பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுகிறதா?
அரசு விளம்பரங்களை கொடுக்காததன் மூலம், நமது நாளிதழை புறக்கணிக்கின்றனர். மற்றபடி தங்கள் படங்களையும், செய்திகளையும் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்துவது இல்லை!
