PUBLISHED ON : ஜூலை 10, 2022

பா - கே
அன்றைய தபாலில், கேள்வி - பதில் பகுதிக்கு வந்திருந்த வாசகர்களின் கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். 'இன்டர்காம்' தொலைபேசி மணி ஒலிக்க, ரிசீவரை எடுத்து காதில் வைத்தேன்.
'மணி... பெயரை குறிப்பிட்டு - உன்னோடு பேசணுமாம்...' என்றார், டெலிபோன் ஆபரேட்டர்.
'ஹலோ...' என்றதும், 'மணி, நல்லாயிருக்கியா. குற்றால சீசன் களை கட்டியுள்ளது. நீ, லென்ஸ் மாமா, மற்ற நண்பர்களும், ரெண்டு நாள் என், 'கெஸ்ட் ஹவுசில்' வந்து தங்கிட்டு, குற்றால அருவிகளில் ஆசை தீர குளிச்சுட்டு போங்க...' என்று அழைப்பு விடுத்தார், தென்காசியை சேர்ந்த, வி.ஐ.பி., நண்பர் ஒருவர்.
அடுத்த கேபினில் அமர்ந்திருந்த, லென்ஸ் மாமா, என்னையே குறு குறுவென பார்த்தவர், எழுந்து வந்து, ரிசீவரை வாங்கி, பேச ஆரம்பித்தார்...
'ஹலோ பிரதர், சவுக்கியமா... என்ன விசேஷம்?' என்று கேட்க, எதிர்முனையில் இருந்தவர், என்னிடம் கூறியதையே சொல்லியிருப்பார் போலும். 'அப்படியா... ரொம்ப சந்தோஷம். நிச்சயம் வந்துடறோம்...' என்று அவராகவே முடிவை கூறி, ரிசீவரை வைத்து விட்டார்.
'மாமா... இந்த முறை, வாசகர்களுக்கான குற்றால டூருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாசகர்களுடன் நான் போக வேண்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்...' என்றேன்.
'நல்லதா போச்சு... வாசகர்கள் டூருக்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது என்று கூறி, பொறுப்பாசிரியரிடம் அனுமதி வாங்கு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இரண்டு நாள்தானே... போயிட்டு வந்துருவோம்...' என்றவர் தொடர்ந்து, 'மணி... சாயந்திரம் கடைக்கு சென்று, நாலைந்து
டீ - ஷர்ட், பெர்முடா டவுசர்ஸ் மற்றும் டவல் எல்லாம் வாங்கிடணும்...' என்று பரபரத்தார். கூடவே, மொபைலில் மற்ற நண்பர்களை அழைத்து, தகவல் கூறி, தயாராக இருக்கச் சொல்லி விட்டார்.
'மாமாவின் ஆசையை கெடுக்க வேண்டாம்; மற்ற ஏற்பாடுகளையும் செய்துட்டு வரலாம்...' என்று நினைத்து, பொறுப்பாசிரியரிடம் கூறி, அனுமதி பெற்றேன்.
குறிப்பிட்ட நாள், ரயிலில் மதுரை சென்று, ஸ்டேஷனில் இறங்கியதும், தயாராக இருந்த வி.ஐ.பி.,யின் காரில் ஏறி, தென்காசியில் உள்ள அவரது, 'கெஸ்ட் ஹவுசு'க்கு சென்றோம்.
வாசலிலேயே நின்றிருந்த வி.ஐ.பி., எங்களை ஆரவாரமாக வரவேற்றார்.
'வெந்நீர் தயாரா இருக்கு. குளிச்சுட்டு வாங்க, டிபன் சாப்பிடலாம்...' என்றார்.
அடுத்து, டைனிங் டேபிளில், நான்கு வகையான டிபன், 'சைடு டிஷ்' ஆக, சைவ - அசைவ ஐட்டங்கள், ஆவி பறக்க அணிவகுத்திருந்தன. அவரவருக்கு வேண்டியதை எடுத்து போட்டு, ஒரு பிடி பிடித்தோம்.
'கொஞ்ச நேரம், 'ரிலாக்ஸ்' செய்துட்டு, அப்புறமா அருவியில் குளிக்கப் போகலாம்...' என்று, தென்காசி நண்பர் கூற, அறையில் விரிக்கப்பட்டிருந்த திண்டுகளில் இடம்பிடித்துக் கொண்டோம்.
அந்த அறையில் மெல்லியதாக ஹிந்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. 'இயற்கையை ரசித்தபடி, மனதுக்கு பிடித்த பாடல்களை கேட்பதே தனி சுகம் தான்...' என்றார், அன்வர்பாய்.
'ஓய்... இது எந்த படத்தில் இடம்பெற்ற பாடல் தெரியுமா?' என்றார், குப்பண்ணா.
'தெரியாதுப்பா... ஆனால், முன்பு, 'டிவி'யில், 'ரங்கோலி' நிகழ்ச்சியில் கேட்டிருக்கிறேன்...' என்றார், அன்வர்பாய்.
'திலீப் குமார் - மதுபாலா நடித்த, மொகல் இ ஆசம் படத்தில் இடம்பெற்ற, ஒரு காலத்தில் மிகவும், 'பாப்புலர்' ஆன பாட்டுபா...' என்ற குப்பண்ணா தொடர்ந்து, லென்ஸ் மாமாவிடம், 'இப்படத்துக்கு இசையமைத்தவர் யார் தெரியுமா?' என்று கேட்டார்.
'நான் என்ன... உன்னை மாதிரி வயசானவனா... உம்ம காலத்து படத்தை பற்றி கேட்கற. ஐஸ்வர்யாராய் நடித்த, ஜோதா அக்பர் படத்தைப் பற்றி கேளு... சொல்றேன்...' என்று லென்ஸ் மாமா எகிற, அங்கு, 'குபீர்' சிரிப்பு எழுந்தது.
'தெரியலைன்னா, தெரியலைன்னு சொல்றதுக்கென்ன, எதுக்கு இந்த, சமாளிப்பிகேஷன்...' என்று குப்பண்ணா கூறியதும், 'நீங்க சொல்லுங்க குப்ஸ்... எனக்கும் தெரியாது. பழைய பாடல்கள் விரும்பி கேட்பேனே தவிர, யார் நடித்தது, இசையமைத்தது எல்லாம் தெரியாது...' என்று வி.ஐ.பி., சொன்னதும், கூற ஆரம்பித்தார், குப்பண்ணா:
இசையில் ஆர்வம் கொண்ட, வறுமையோட போராடிய அந்த இளைஞன், அன்றைய பம்பாய் வீதிகளில் அலைந்து, ஓர் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தான். அந்த உணவகத்தின் எதிரே சாலைக்கு அப்பால் இருந்த திரையரங்க இசைப் பாடல்கள் தான், அவனுக்கு இரவு நேரத் தாலாட்டு.
ஒருநாள் அந்த உணவகத்திற்கு, ஹிந்தி திரைப்பட இசைக் குழுவை சேர்ந்தவர்கள் சாப்பிட வர, அவர்களோடு சேர்ந்து, இசைக் கருவிகளை சுமக்கும் பையனாக அவன் திரையுலகம் நோக்கி நடக்கத் துவங்கினான்.
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இசையமைப்பாளராக உயர்ந்து, பல படங்களுக்கு இசையமைத்து, பேரும், புகழும் பெற்றான்; அவன் தான், நவ்ஷத் அலி.
ஒரு படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி, முன்பு இவன் தங்கியிருந்த உணவகத்தின் எதிரே இருந்த அதே திரையரங்கில் நடைபெற்றது.
வெள்ளி விழா கேடயத்தை பெற்றுக் கொண்ட நவ்ஷத் அலி, பேசத் துவங்கினார்...
'நண்பர்களே... இதோ இந்த கேடயத்தை, இந்தத் திரையரங்கில் பெறுவதை நான் பெருமையாக கருதுகிறேன். ஏன் தெரியுமா, இதோ இந்த தியேட்டருக்கு எதிரே இருக்கும் உணவகத்தில் தான், என் வாழ்க்கையை துவங்கினேன்.
'அந்த உணவகத்திற்கும், இந்த திரையரங்கிற்கும் இடையில்,
20 அடிகள் தான் இடைவெளி. ஆனால், இந்த, 20 அடியைத் தாண்டி, இந்த மேடையை அடைய எனக்கு, 18 ஆண்டுகள் ஆயிற்று...' என்று, அவர் நெகிழ்ச்சியுடன் சொன்னபோது, திரையரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
தாஜ்மகால், அன்மோல்கடி, மதர் இந்தியா மற்றும் மொகல் இ ஆசம் போன்ற ஹிந்தி படங்களின் வெற்றிக்கு காரணமாக விளங்கிய இசைச் சக்கரவர்த்தி அவர். தமிழிலும், வானரதம் என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழிலிருந்து ஹிந்தியில், 'ரீ - மேக்' செய்யப்பட்ட, ஆலயமணி, பாலும் பழமும் போன்ற படங்களுக்கும் இசை அவரே...
-- இப்படி, குப்பண்ணா கூறி முடித்ததும், 'அடடா... நம்மூர் எம்.எஸ்.விஸ்வநாதன் கதை போல் உள்ளதே. அவர் கூட சினிமா கம்பெனி ஒன்றில், 'ஆபிஸ் பாயா' இருந்து, மிகப்பெரிய இசையமைப்பாளராக ஆனவர் என்று படித்துள்ளேன்...' என்றார், வி.ஐ.பி.,
'வயிற்றுக்கும், செவிக்கும் உணவு கிடைத்து விட்டது. அடுத்து, அருவியில் குளிக்க போகலாமே...' என்று அன்வர்பாய் கூறியதும், 'இன்று வேண்டாம், 'டயர்டா' இருக்கு. நாளை பார்த்துக்கலாம்...' என்று அவசரமாக மறுத்தார், லென்ஸ் மாமா.
'இவர்கள் கச்சேரி ஆரம்பிக்கட்டும். நான் போய் குற்றால சாரலை ரசித்து விட்டு வருகிறேன்...' என்று, கிளம்பினேன்.
'நானும் உன்னோடு வர்றேன் மணி...' என்ற வி.ஐ.பி., மாமாவிடமும், மற்றவர்களிடமும், 'உங்களுக்கு வேண்டியவைகளை, சமையற்காரர் செய்து கொடுப்பார்...' என்று கூறி, தன் காரிலேயே அழைத்துச் சென்றார்.
