PUBLISHED ON : ஜூலை 10, 2022

அலாதியாக பதிலளிப்பவர் கருணாநிதி!
கடந்த, 1969ல், கருணாநிதி முதன்முறையாக தமிழக முதல்வரான போது, அவரைப் பேட்டி எடுக்கச் சொன்னார், 'தினமணி கதிர்' ஆசிரியர், சாவி.
பேட்டி வித்தியாசமாக அமைய வேண்டும் என்பதற்காக, கேள்விகளை தயாரித்து, அவற்றை சென்னையைச் சேர்ந்த எட்டு கல்லுாரி மாணவ - மாணவியரிடம் கொடுத்து கேட்கச் சொன்னேன்.
கருணாநிதி பதிலளிக்கும் முறை அலாதியானது. கேள்வியை கேட்டு முடிப்பதற்கு முன்பே, பதிலளிக்கும் வேகம் உடையவர்; நகைச்சுவை உணர்வு அவருக்கு இயல்பாக வரும்.
பத்திரிகையாளர்களை மதிக்கும் பண்பு, தமிழ் மீது ஆளுமை ஆற்றல், பேச்சு திறமை, பழந்தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம், சமயோசித புத்தி போன்றவை, அவரின் நேர்காணலில் தனித்தன்மையாக இருக்கும்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மீதுள்ள அக்கறையில், தன் குறலோவியம் என்ற நூலின் மூலம் வெளிப்படுத்தியவர்.
'குறள்களில் உங்களை கவர்ந்த குறள் எது?' என்று கேட்டதற்கு, 'இந்தக் கேள்விக்கு எப்படி பதில் கூறுவது? விலை உயர்ந்த முத்துகளை கீழே பரப்பிவிட்டு, அவற்றிலிருந்து குறிப்பிட்ட முத்தை மட்டும் தனியே எடுக்க முடியுமா?' என்று பதில் கூறினார்.
'முன்னாள் குடியரசுத் தலைவர்களான, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜாகிர்ஹுசேன், தங்களை பள்ளி ஆசிரியர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கின்றனர். தாங்கள் எப்படி?' என்ற கேள்வி முடிப்பதற்குள், 'எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன், நான்...' என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'எதிர்பாராத இடத்தில் எனக்கு சிறிது நேரம் கிடைத்தாலும் கவிதை எழுதுவேன். எழுத்து தான் என்னை கடும் பணிகளுக்கு நடுவேயும் புத்துணர்ச்சி பெற உதவுகிறது...' என்றார்.
இளம் வயதில், 'திராவிட நாடு' பத்திரிகையில், 'இளமை புலி' என்ற தலைப்பில், கருணாநிதி எழுதிய கட்டுரையை, அண்ணாதுரை பாராட்டியுள்ளார்.
'அதுவரை அண்ணாதுரையை எனக்கு தெரியாது. எங்களது நட்புக்கு அடிகோலிய அந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது...' என்று தெரிவித்தார்.
'அண்ணாதுரையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டுமென்றால் எப்படி கூறுவீர்கள்?' என்று கேட்டதற்கு, 'அண்ணாதுரை ஒரு விளங்காத புதிர்...' என்றார்.
இந்திய அரசியலில் பல்வேறு சாதனைகள் புரிந்த கருணாநிதியை, முதன்முறையாக முதல்வராக பதவி ஏற்றபோது, அவரை பேட்டி எடுத்த பத்திரிகையாளன் என்ற முறையில், எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.
'நானும் ஒரு நர்ஸ் தான்!'
பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் கேப்ரே நடனங்கள் தடை செய்யப்பட்டன. கேப்ரே நடனம் நடத்துவது சட்டப்படி குற்றம். அதற்கு முன்பு சென்னை நகரில் சில ஹோட்டல்களில், கேப்ரே நடனங்கள் நடைபெற்று வந்தன.
கேப்ரே டான்சர் ராஜி என்பவரை பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூறுகிறார்:
கேப்ரே நடனம் ஆடுபவர், முழு கவுன் அணிந்து வந்து, ஒவ்வொன்றாக களைந்து விடுவர். நான் அதற்கு பதில், புடவை முழுவதும் கட்டி வந்து, களைந்து விடுகிறேன். இதற்கு, 'சாரி - பிளூஸ்' என்று பெயர்.
சில சமயம் என் தோழிகளின் கணவர்கள், தங்கள் சினேகிதிகளுடன் வந்திருப்பர். அவர்களை பார்க்கும்போது முதலில் மனம் சஞ்சலப்படும். அடுத்த வினாடியே அவர்கள் வாடிக்கையாளர்கள், நான் ஒரு நடன கலைஞர் என்று ஞாபகப்படுத்திக் கொள்வேன்.
கேப்ரே கலைஞர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. கேப்ரே நடனம் ஆடுபவர்கள், தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளக் கூடாது என, அந்த சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. கேப்ரே நடனம் ஆடும் பெண், ஒரு நர்ஸ் போன்றவர் தான் என்பேன்.
நோயாளியிடம் அன்பாக நடந்து, அவரது நோயை குணப்படுத்துவது போல, கஷ்டத்தையோ, கவலையோ மறக்க ஹோட்டலுக்கு வருபவர்களிடம் நடனமாடி உற்சாகப்படுத்துவோம் என்றார், ராஜி.
நான், சபரிமலை செல்வதற்கு முதல்முறையாக மாலை அணிந்து, விரதம் ஆரம்பித்திருந்தேன். மறுநாளே, கேப்ரே நடன ராஜி பேட்டி காண வேண்டி இருந்தது. எனக்குள் பெரிய உறுத்தல்...
'இந்தப் பேட்டிக்கு போவதா, இல்லை இரண்டு மாதங்கள் சென்றபின், பேட்டி வைத்துக் கொள்ளலாமா?' என்று, எங்களது குருசாமியிடம் கேட்டேன்.
'அய்யப்பன் உங்களை வேலையை செய்ய வேண்டாம் என்று சொல்லவே இல்லை. உங்கள் மனதை சுத்தமாக வைத்திருந்தால் போதும். உங்கள் வேலையை தாராளமாக செய்யலாம்...' என்றார். அவர் கொடுத்த தைரியத்தில் தான் இந்தப் பேட்டிக்கு சென்றேன்.
'நானும் ஒரு நர்ஸ் தான்...' என்று, 'குமுதம்' ஆசிரியர் தலைப்பு கொடுத்தார். இந்த பேட்டி கட்டுரை, 'குமுதம்' இதழில், அக்., 7, 1971ல் வெளியானது. பஸ்சில் தொலைத்த கைப்பை, திரும்ப கிடைத்த அனுபவம் அடுத்த இதழில்...
— தொடரும்
கடந்த, 1975ல், சர்வதேச பெண்கள் ஆண்டாக அறிவித்தது, ஐக்கிய நாடுகள் சபை. அதைக் கொண்டாடும் வகையில், 'குமுதம்' இதழ், ஒரு புதுமையை செய்தது. 12 இளம் நடிகையரை அழைத்துச் சென்று, 12 பணிபுரியும் பெண்களை சந்தித்து பேட்டி எடுக்க செய்வது என்று முடிவாயிற்று. இந்த தொடருக்கு, 12 நடிகையரையும், 12 பணிபுரியும் பெண்களையும், வாராவாரம், உத்ராவின் வண்ண படத்துடன் அட்டையில் வெளியிட்டனர். பணிபுரியும் பெண்களிடம் நடிகையர் பேட்டி எடுத்ததை தொகுத்து எழுதினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.
எஸ். ரஜத்
