தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இப்படியும் நடக்குது திருட்டு!

சமீபத்தில், நண்பர் ஒருவரின் மகன் திருமணத்திற்காக, ஆந்திரா சென்று, ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். வரும் வழியில், ஒரு ஸ்டேஷனில், பெற்றோருடன் எங்கள் பெட்டியில் ஏறினாள், ஓர் இளம்பெண்.

கையோடு கொண்டு வந்திருந்த, 'பர்த் டே கேக்'கை, இருக்கையில் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி, ஊதி அணைத்தாள்.

அதன்பிறகு, பெட்டியிலிருந்த எங்களுக்கு, 'கேக்'கை வழங்கினாள். பிறந்தநாள் கொண்டாடும் இளம்பெண்ணின் மனம் புண்பட வேண்டாமென, எல்லாருமே அவளிடமிருந்த, 'கேக்'கை வாங்கி சாப்பிட்டோம். அதன்பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து, மயக்கம் தெளிந்து எழுந்த பிறகு தான், எங்கள் அனைவருக்குமே உண்மை புரிந்தது.

போலியான பெற்றோருடன், பொய்யாக பிறந்தநாள் கொண்டாடி, மயக்க மருந்து கலந்த, 'கேக்'கை கொடுத்து மயங்க வைத்து, எல்லாரிடமிருந்தும் நகை மற்றும் பணத்தை திருடிப் போயிருக்கிறாள், அப்பெண்.

உடனடியாக ரயில்வே போலீசில் புகார் செய்தோம். விரைந்து செயல்பட்ட அவர்கள், ரயில் நிலையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, அவர்களை பிடித்தனர். எங்களது நகை மற்றும் பணத்தை மீட்டுக் கொடுத்ததுடன், அந்த திருட்டுக் கும்பலை கைது செய்தனர்.

வாசகர்களே... பயணங்களின்போது, எவரிடமும் எதையும் வாங்கி உண்ணாமல், எச்சரிக்கையாக இருங்கள்!

- ஆர்.ஜெயசங்கரன், வானுார், விழுப்புரம் மாவட்டம்.

'ரீல்ஸ்'க்காக, 'ரிஸ்க்' தேவையா?

சமீபத்தில், குடும்பத்துடன், ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தேன். கொண்டை ஊசி வளைவுகளில், ஆபத்தான கார் பயணம் அது.

ஒரு வளைவில், நடுரோட்டில் இளம்பெண் ஒருத்தி, 'ரீல்ஸ்' என்ற, 'இன்ஸ்டாகிராம் வீடியோ'வுக்காக, சினிமா பாடலுக்கு நடனமாடியபடி, 'போஸ்' தர, அதை மொபைல் போனில், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான், அவளது, 'பாய்பிரண்ட்!'

அதேபோல ஓரிடத்தில், ரோட்டோரமிருந்த சரிவான குன்றின் மீது ஏறி, ஒரு காதல் ஜோடி, இசைக்கு ஏற்றபடி நடனமாடி, அதை, அவர்கள் வந்த கார் ஓட்டுனர் மூலம், மொபைல் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதைவிட கொடுமை, சிறிது சறுக்கினால், பள்ளத்தாக்கில் விழுந்து உயிரை விட வேண்டியது தான் என்ற நிலையில், ரோட்டோர விளிம்பில் நின்றபடி, சினிமா வசனத்துக்கு வாயசைத்து, பிள்ளைகளை விட்டு, மொபைல் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது, ஒரு தம்பதி.

இவர்கள் மட்டுமின்றி, பலரும், பல்வேறு ஆபத்தான இடங்களில், ஆடிப் பாடி, வீடியோ எடுத்து, 'ரீல்ஸ்'க்காக, 'ரிஸ்க்' எடுத்துக் கொண்டிருந்தனர். இவர்களை எல்லாம் நினைத்து, கோபம் வந்ததோடு, ஆபத்தை மறந்து அறியாமையோடு இருக்கின்றனரே என்று, பரிதாபமும் எழுந்தது.

நான் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமின்றி, 'ரீல்ஸ்' வீடியோ எனும் போதைக்கு அடிமையாகிப் போன பலர், மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் வீட்டு மொட்டை மாடி என, பல ஆபத்தான இடங்களில், வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அற்ப பொழுதுபோக்கு விஷயத்திற்காக, விலைமதிப்பற்ற உயிரை பணயம் வைப்பது சரியா? இப்படிப்பட்டவர்கள் தானாக திருந்தினால் தான் உண்டு!

— எஸ்.நாகராணி, மதுரை.

புது வீடு வாங்க போறீங்களா?

சென்னை புறநகர் பகுதியில், ஒரு வீடு வாங்கினார், நண்பர். தரை தள வீட்டில் குடும்பத்துடன் குடியேறினார். மாடி வீட்டை வாடகைக்கு விட்டார். அப்போது தான் பிரச்னையே ஆரம்பித்தது.

மேல் வீட்டார் எப்போதெல்லாம் குளியலறை, கழிவறை பயன்படுத்துகின்றனரோ, அப்போது நண்பர் வீட்டில் துர்நாற்றம் வீசும். ஆரம்பத்தில் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று தெரியாமல் திணறினார்.

கொத்தனாரை அழைத்து வந்து, வீட்டை சோதித்ததில், மேல் வீட்டில் கழிவுநீர், குளியலறை நீர், பாத்திரம் கழுவும் நீர் மற்றும் கீழ் வீட்டு கழிவுநீர், குளியல் அறை நீர் அனைத்தும், ஒரே குழாய் மூலம் வீட்டின் நடுப்பகுதி மற்றும் படுக்கையறை வழியாக வெளியே சென்று வாசல் பக்கம் உள்ள தரை தளத்திலுள்ள பெரிய டேங்கில் போய் சேர்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை சரி செய்ய சுமார், 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என, கொத்தனார் கூற, ஆடிப்போய் விட்டார், நண்பர்.

புது வீடு வாங்க போறீங்களா... முதலில் வீட்டின் கழிவு நீர், குளியல் நீர் மற்றும் பாத்திரம் கழுவும் நீர், தனித் தனி குழாய் மூலம் வீட்டின் வெளிப்புறம் வழியாக வெளியேறுகிறதா என்பதை சரிபார்த்து வீடு வாங்கவும். இல்லையேல், நண்பர் போல், மன உளைச்சலில் சிக்க நேரிடும்.

எம்.எஸ்.வி. அருண், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us