PUBLISHED ON : ஜூலை 24, 2022

டி. ரவீந்திரன், சென்னை: தமிழகத்தில், பா.ஜ., ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதா?
அது, அமித்ஷா, அண்ணாமலையாரின் கனவு... லோக்சபா தேர்தலில் வேண்டுமானால், அதிக இடங்களில் ஜெயிக்கலாம்!
* கே. கோப்பெருந்தேவி, சென்னை: அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத சசிகலாவுக்கு ஏனிந்த பதவிப் பேராசை?
மதுரை பஸ் ஸ்டாண்ட் அருகே, 'வீடியோ' கடை வைத்திருந்தவர். ஜெயலலிதா ஆட்சியின்போது, அவரும், அவர் குடும்பத்தினரும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சேர்த்தனர். அதைப் பாதுகாத்துக் கொள்ளவே இப்படி செய்து பார்க்கிறார்!
மு. சாந்தி, கோவை: எந்த கட்சியிலும் இல்லாத, இசை அமைப்பாளர் இளையராஜா, மக்களவை உறுப்பினராக, தேர்ந்தெடுத்துள்ளனரே...
அவர், பா.ஜ., ஆதரவாளர் என்பதால் தான்! அவர் தான், அம்பேத்கர் உடன் பிரதமர் மோடியை இணைத்து அறிக்கை வெளியிட்டாரே!
க. மாலதி, நெல்லை: '100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும்...' என்கிறாரே ராகுல்...
இவர்கள் ஆட்சியில்தானே இத்திட்டம் கொண்டு வரப்பட்டது... அப்போதே, 365 நாள் திட்டம் என, கொண்டு வந்து இருக்க வேண்டியது தானே... விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமல், வெளிநாடுகளில் இருந்து, கோதுமையும், அரிசியும் இறக்குமதி செய்து, 'பையை' நிரப்பிக் கொண்டிருக்கலாமே!
த. நேரு, வெண்கருப்பூர், கடலுார்: என் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்தால், என்ன பெயர் சூட்டலாம்?
அந்த குழந்தையின், தந்தை வழி பாட்டி பெயரை, 'அபீஷியல்' பெயராக சூட்டி விடுங்கள்... கூப்பிடும் பெயருக்கு தான், 'சிறுவர்மலர்' இதழில் நிறைய புதுப்புது பெயர்களாக வருகின்றனவே... அதில் பிடித்த பெயரை சூட்டி விடுங்கள்!
* அப்துல், திருச்சி: 'நான் வென்றால் மாற்றம் நிச்சயம்...' என்கிறாரே, குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா?
வென்றால் தானே... வெல்லா விட்டால், ஆதரித்த கட்சிகள் அனைத்தும் அவரை ஓரம் கட்டி விடும்... இது தான் மாற்றம்!
