PUBLISHED ON : ஜூலை 24, 2022

முன்கதை சுருக்கம்: பொள்ளாச்சி 'டாப் ஸ்லிப்'பில் தருண் இருப்பது, ஏ.சி.பி.,க்கு தெரிந்து, அங்கு விரைந்தார். வாட்ச்மேன் தாக்கப்பட்ட நிலையில், முகிலா தப்பி ஓடியதாக கருதி, மூவரும் பங்களாவை சுற்றி தேடினர் -
'ஸ்டன்கன்' பொருத்தப்பட்ட நீண்ட டார்ச்களோடு, இக்பால், ஜோஷ் மற்றும் தருண் என, மூவரும் பங்களாவைச் சுற்றிலும் அட்டைக்கரியாய் கொட்டிக்கிடக்கும் இருட்டில், பார்வைகளைச் சுழற்றியபடி, வேகமாய் நடந்தனர். அடர்த்தியான புதர்களுக்குப் பின்னால், டார்ச்களிலிருந்து வெளிப்பட்ட உச்சபட்ச வெளிச்சம் பாய்ந்து, அங்கே யாருமில்லையென்று தெரிந்ததும், உடனே வேறுபக்கம் தாவியது.
வியர்வை மழையில் நனைந்து கொண்டே மூச்சிரைக்கக் கூப்பிட்டான், இக்பால்.
''ஜோஷ்.''
''சொல்லு.''
''முகிலா தப்பிச்சு போயிருக்க மாட்டாளே?''
''வாய்ப்பே இல்லை இக்பால். அவ, இந்த இருட்டுக்குள்ளே ஏதாவது ஒரு புதருக்குப் பின்னாடி தான் ஒளிஞ்சுட்டிருப்பா. நாம மூணு பேரும் இப்படி ஒண்ணா ஒரே பக்கமாய் போய் தேடறதை விட, ஆளுக்கொரு பக்கம் போனா சுலபமா அவளை, கண்டுபிடிச்சு மடக்கிடலாம்,'' என்று ஜோஷ் சொல்ல, இக்பால் நின்றான்.
''நீ சொல்றதும் சரிதான். நான் வீட்டை இடதுப்பக்கமா சுத்திட்டு வர்றேன். நீ வலது பக்கமா போ. தருண், நீ முன்பக்கம் இருக்கிற காம்பவுன்ட் சுவரோரமாய் போய் தேடு. டார்ச்சோடு, 'ஸ்டன்கன்' இருக்கிறதால, பார்த்த உடனேயே சுட்டுடு. யோசனை பண்ணிட்டிருக்க வேண்டாம். முகிலா, இனி நமக்கு உபயோகப்பட மாட்டா.''
தலையாட்டியபடி, கோட்டையின் கதவுபோல் தெரிந்த காம்பவுண்ட் கேட் இருந்த திசைப்பக்கமாய், டார்ச் வெளிச்சத்தை வீசியபடி வேகவேகமாய் போனான், தருண்.
இக்பால், வீட்டின் இடது பக்கமாய் நகர, வலது பக்க இருட்டுக்குள் நுழைந்தான், ஜோஷ்.
ஒரு, 50 அடி துாரம் நடந்த ஜோஷ், மண் பாதையின் வலதுபக்கம் இருந்த அடர்ந்த புதர், ஒரு சின்ன அசைவுக்கு உட்பட்டதும், சட்டென்று நின்றான்.
'டாப் ஸ்லிப்' வனத்துறை அலுவலகம்.
நேரம் நள்ளிரவைத் தொட்டுவிட்டு நகர்ந்து கொண்டிருக்க, பாரஸ்ட் டெப்டி ரேஞ்சர் சத்தியநாதன், 'வாட்ஸ் - ஆப்'பில் வந்திருந்த டிபார்ட்மென்ட் சம்பந்தப்பட்ட செய்தியைப் படித்துவிட்டு, மொபைல்போனை அணைத்த விநாடி, சற்றே பதற்றத்துடன் வேகமாய் அறைக்குள் நுழைந்தார், பாரஸ்ட் வாட்ச்சர் வேல்ராஜ்.
''சார்.''
''என்ன வேலு... சேத்துமடை டாப் ஸ்லிப் ரோட்ல, மறுபடியும் யானைக் கூட்டம் அட்டகாசம் பண்ணுதா?''
''அது இல்ல சார்.''
''அப்புறம்?''
''கோயமுத்துாரில் இருந்து, ஏ.சி.பி., செழியன் வந்திருக்கார்; ஏதோ விசாரணையாம், 'டென்ஷன்'ல இருக்கார். ஜீப்பை விட்டு கூட, அவர் இறங்கலை.''
நாற்காலியைத் தள்ளியபடி எழுந்த சத்தியநாதன், 'என்ன பிரச்னையோடு வந்திருக்கார்ன்னு தெரியலையே...' என, தனக்குள் முணுமுணுத்தபடியே அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தார். இருட்டில் ரோட்டோரமாய் நின்றிருந்த ஜீப்பை நோக்கிப் போனார்.
முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த செழியனைப் பார்த்து, புரோட்டோகால் சல்யூட் ஒன்றைக் கொடுத்துவிட்டு, ''உள்ளே வாங்க சார்,'' என்றார்.
''சாரி... உள்ளே வந்து உட்கார்ந்து பேச நேரமில்லை. ஒரு வழக்கு விஷயமாய் சந்தேகத்தின் அடிப்படையில், மூணு பேரைத் தேடிக்கிட்டு இந்த, 'டாப் ஸ்லிப்' பாரஸ்ட் ஏரியாவுக்கு வந்திருக்கேன். அந்த மூணு பேர்ல ஒருத்தன், இந்த ஏரியாவிலிருந்து தான் மொபைல் போனில் பேசியிருக்கான். அவனை, 'ட்ரேஸ் அவுட்' செய்யணும்.''
''அவன் பேர் என்ன சார்?''
''தருண்.''
''போட்டோ இருக்கா சார்?''
''ம்... இருக்கு,'' என்று சொன்ன செழியன், தீப்தியின் மொபைல் போனில், இருந்து, தன் மொபைலுக்கு, 'பார்வோர்ட்' செய்யப்பட்ட தருணின் போட்டோவைக் காட்டினார். போட்டோவைப் பார்த்ததும், சின்னதாய் ஒரு அதிர்ச்சிக்கு உட்பட்டார், சத்தியநாதன்.
''சார்... இவன், இக்பாலோட நண்பன். இவன் கூட இன்னொருத்தனும் இருப்பானே?''
செழியனின் பரந்த நெற்றி வியப்பு வரிகளுக்கு உட்பட்டது.
''இக்பாலை உங்களுக்குத் தெரியுமா?''
''தெரியும்... ஆனா, அவ்வளவாய் பழக்கமில்லை. மாசத்துக்கு ரெண்டு தடவையாவது, இங்கே இருக்கிற அவரோட, 'கெஸ்ட் ஹவுசு'க்கு, ரேங்கலர் ஜீப்ல, இந்த வழியாத்தான் போவார். ஜீப்பை நிறுத்தி, ஒரு, 'பார்மல் செக் - அப்' பண்ணுவோம். சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுப்பார். அதிகம் பேச மாட்டார்.
''சில சமயங்களில் மட்டும், 'யானை நடமாட்டம் அதிகமாய் இருக்கா'ன்னு கேட்பார். அவர் கூட எப்பவுமே ரெண்டு பேர் வருவாங்க. அதுல ஒருத்தர் தான், இந்த தருண். இன்னொருத்தர் பேர் தெரியாது. ஏன் சார் ஏதாவது பிரச்னையா?''
''பிரச்னை தான்... அதனாலதானே, நடுராத்திரியில் இந்தக் காட்டுப் பகுதிக்கு வந்திருக்கோம். இக்பாலோட, 'கெஸ்ட் ஹவுஸ்' எங்கே இருக்கு?''
''இங்கிருந்து, 2 கி.மீ., தள்ளி பரம்பிக்குளம் போற வழியில், புலிகள் காப்பகம் வரும். அந்தப் பக்கம் போனா கேரளா எல்லை. இந்தப் பக்கம் வந்தா, தமிழக எல்லையில, பெரிய, 'கெஸ்ட் ஹவுஸ்' பார்வைக்குக் கிடைக்கும். சுற்றிலும் தேக்கு மரம். உயரமான காம்பவுன்ட் சுவர். சிவப்புப் பெயின்ட் அடிச்ச ஸ்லைடிங் ஸ்டீல் கேட்.
''அக்கம்பக்கத்துல ஒரு வீடு கூட இருக்காது சார். அந்த வீட்டை சுலபமா நீங்க கண்டுபிடிச்சுடலாம். ரோடு கொஞ்சம் சரியாய் இருக்காது. பார்த்துப் போகணும். நான் வேணும்ன்னா உங்க கூட பாரஸ்ட் வாட்ச்சரை அனுப்பி வைக்கட்டுமா?''
''வேண்டாம்... ஜீப்பில் நாலு பேரோடு, 'ஆர்மர்ட் ஸ்குவாட்' இருக்கு. அந்த, 'கெஸ்ட் ஹவுசு'க்கு போக வேற வழி ஏதாவது இருக்கா?''
''இல்ல சார்... இந்த ஒரு வழி மட்டும் தான்.''
சத்தியநாதனுக்கு நன்றி சொல்லி, தனக்கு முன்புறம் இருந்த ஜீப் டிரைவரின் தோளைத் தொட்டார், செழியன்.
''வண்டியை எடு, சபாபதி.''
அடுத்த விநாடி, நியூ ஜென் மஹிந்திரா ஜீப், சிக்கனமாய் புகையைக் கக்கி வேகமாய் கிளம்பி, அடுத்த வளைவில் திரும்பி, மறைந்தது.
'டாப் ஸ்லிப்'பின் ஒட்டு மொத்த பிரதேசமும் வீசிக் கொண்டிருந்த குளிர்காற்றில் உறைந்து போயிருக்க, வீட்டை இடதுபக்கமாய் சுற்றி வந்து கொண்டிருந்த இக்பாலின் உடம்பு மட்டும் வியர்வை மழையில் குளித்துக் கொண்டிருந்தது. 'ஸ்டன்கன்' பொருத்தப் பட்டிருந்த டார்ச்சின் வெளிச்சம் கீழே விழுந்து இருட்டை ஒற்றியெடுத்து வழி காட்ட, வேக நடை போட்டான். 'முகிலா தட்டுப்பட மாட்டாளா...' என்று பார்வை பரபரவென்று அலைந்தது.
வீட்டின் இடதுபக்க வளைவில் திரும்பிக் கொண்டிருந்த போது, இக்பாலின் மொபைல்போன் முணுமுணுப்பாய் அழைத்தது. எடுத்துப் பார்த்தான்.
மறுமுனையில் ஜோஷ்.
''சொல்லு ஜோஷ்...'' என்றான், இக்பால்.
''வீட்டுக்கு வலதுபக்கமாய் போற வழியில், மண்மேட்டை ஒட்டியிருக்கிற புதருக்குப் பின்னாடி ஏதோ, 'மூவ்மென்ட்ஸ்' தெரியுது. முகிலா அங்கே ஒளிஞ்சிருக்கலாம்ன்னு நினைக்கிறேன்.''
''உடனே போ, போய்ப் பாரு. அவளாயிருந்தா ஒரு விநாடி கூட யோசிக்காம சுட்டுத்தள்ளு.''
''இக்பால்... அது வந்து...''
''என்ன பயப்படறியா?''
''பயமில்லை... கொஞ்சம் தயக்கமாயிருக்கு. நீயும் இங்கே வந்துட்டா பரவாயில்லை. ஒரே நேரத்துல ரெண்டு பேர் சேர்ந்து மடக்கினா, அவளால ஒண்ணும் பண்ண முடியாது. நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா?''
''புரியுது, இதோ வர்றேன்.''
பாதையை மாற்றி வேகவேகமாய் ஓட்டமும், நடையுமாய் வீட்டின் வலதுபக்கத்தை நோக்கிப் போனான், இக்பால்.
அரை நிமிட நடை.
அந்த மண்மேடும், அடர்த்தியான புதரும், டார்ச் வெளிச்சத்தில் நனைந்து அசைவுகளோடு பார்வைக்குத் தட்டுப்பட்டது. அருகே ஜோஷ் நின்றிந்தான். அவனை நெருங்கி குரலைத் தாழ்த்தினான், இக்பால்.
''ஜோஷ், சந்தேகமே இல்லை... முகிலா, இந்த புதருக்குள்ளேதான் ஒண்டிக்கிட்டு இருக்கா. ரெண்டு பேரும் திடீர்ன்னு ஒண்ணா போய், அவ முன்னாடி நிப்போம். அவளாலே ஒரே நேரத்துல ரெண்டு பேரை தாக்க முடியாது. அவ உன்னைத் தாக்கினா, நான் சுடறேன். என்னைத் தாக்கினா, நீ சுடு.''
பய வியர்வை மினுமினுக்கும் முகத்தோடு தலையசைத்தான், ஜோஷ்.
இருவரும் டார்ச்சின் ஒளி வெள்ளத்தை முன்னே பாயவிட்டு, அடிமேல் அடி வைத்து, புதரை நெருங்கினர். சிறிது கூட சத்தம் எழுப்பாமல் மூச்சை அடக்கி, எட்டிப் பார்க்க முயன்ற விநாடி, புதருக்குள்ளிருந்து நான்கைந்து காட்டு முயல்கள், மின்னல் வேகத்தில் வெளிப்பட்டு நாலாபக்கமும் சிதறி ஓடியது. திடுக்கிட்டு பின்வாங்கிய இக்பால், பெருமூச்சொன்றை வெளியேற்றி, ஜோஷைப் பார்த்து அவஸ்தையாய் சிரித்து வைத்தான்.
''ரொம்பவே பயந்துட்டோம்.''
''முகிலா விஷயத்துல கொஞ்சம் அலட்சியமாய் இருந்ததோட விளைவு, இப்போ எப்படியெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு பார்த்தியா?'' என, ஜோஷ் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, காம்பவுண்ட் கேட் பகுதியிலிருந்து தருணின் குரல் கேட்டது.
''இ... இ... இக்பால்.''
தருணின் குரலைக் கேட்டதும், இருவரின் ரத்த ஓட்டங்களும் வேகம் எடுத்தன.
''ஜோஷ்.... நாம இப்ப கேட்டது, தருணோட குரல்தானே?''
''ஆமா.''
''எதுக்காக கூப்பிடறான்? குரல்ல ஒரு, 'டென்ஷன்' வேற தெரியுது. முகிலாவைப் பார்த்துட்டான்னு நினைக்கிறேன்,'' இக்பால் சொல்லிக் கொண்டே தருணின் குரல் வந்த திசையை நோக்கி ஓட, ஜோஷும், டார்ச் வெளிச்சத்தோடு பின் தொடர்ந்து ஓடினான்.
இருவரும் வாயிலும், மூக்கிலும் மூச்சு வாங்கியபடி, கேட் இருந்த பக்கம் வந்து நின்றனர். சுற்றிலும் கடுமையான நிசப்தம். காதறுத்தான் வண்டுகள் மட்டும் ரீங்காரத்தில் இருந்தது.
'தருண் எங்கே?' என, இக்பால் தனக்குள் கேள்வி எழுப்பி, டார்ச் வெளிச்சத்தால் இருட்டை அவசர அவசரமாய் அழித்து தேட, நடுக்கமாய் இக்பாலின் முதுகைத் தொட்டான், ஜோஷ்.
''என்ன ஜோஷ்?''
''சுவரோரமாய் பாரு.''
இக்பால் பார்த்தான். தண்டுவடத்தில் மின்சாரம் பாய்ந்த உணர்வு. காம்பவுண்ட் சுவரை ஒட்டினாற் போல் இருந்த திட்டில், தன் கைகளையும், கால்களையும், 'எக்ஸ்' குறி போல் பரப்பி, வாய் பிளந்து மல்லாந்திருந்தான், தருண்.
சலனமற்ற உடல். கழுத்திலும், முகத்திலும் திட்டுதிட்டாய் ரத்தம்.
போலீஸ் ஜீப் தன் எஃகு உலோக உடம்பை உதறி, கோணல் மாணலான மலைப்பாதையில் பயணித்து, புலிகள் காப்பகம் எல்லையைத் தொட்டது. அந்த காட்டுப் பிரதேசம் முழுவதும், கறுப்பு கம்பளிப் போர்வையால் போர்த்தியிருப்பது போல் தெரிய, ராத்திரியில் கண் விழித்து இரை தேடும் பறவைகள் மட்டும் அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டிருந்தன.
ஜீப் டிரைவர் ஸ்டிரியங்கை கவனமாய் கையாண்டபடி, செழியனைத் திரும்பிப் பார்த்தார்.
''சார்.''
''என்ன?''
''இக்பாலோட, 'கெஸ்ட் ஹவுஸை' நெருங்கிட்டோம்ன்னு நினைக்கிறேன். துாரத்துல லேசா வெளிச்சம் தெரியுது, சார்.''
ஜீப்பின் முன்புற கண்ணாடி வழியே குனிந்து பார்த்தார், செழியன். அடர்த்தியான தேக்கு மரங்களின் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருட்டின் சாயம் போயிருந்தது.
''சபாபதி, நீ சொல்றது சரிதான். பாரஸ்ட் ரேஞ்சர் சொன்ன இடத்துக்குத்தான் நாம வந்துருக்கோம். இன்னும் கொஞ்ச துாரம் போனா, இக்பாலோட, 'கெஸ்ட் ஹவுஸ்' வந்துடும்ன்னு நினைக்கிறேன். சீக்கிரமா போ.''
ஜீப் இரண்டாவது கியரிலிருந்து மூன்றாவது கியருக்கு மாறி, வேகம் பிடித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம், 'கெஸ்ட் ஹவுசின்' ராட்சஸ சைஸ் காம்பவுண்ட் கேட்டுக்கு முன் போய் நின்று, தன்னுடைய இயக்கங்களை நிறுத்தி, நிசப்தமானது.
— தொடரும்
ராஜேஷ்குமார்
