
* அ. ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி: வீழ்ந்த காங்கிரசை துாக்கி நிறுத்த, ராகுல் நடை பயணம் கிளம்புவது பலன் தருமா?
அவருக்கே பலன் தரும்... உடல் எடை குறையும்... ரத்த கொழுப்பும், 'லெவலுக்கு' வரும்... அவர் உடல் நலனுக்கு பாதுகாப்பானது, இந்த நடை பயணம்!
ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி: ஆண்டுக்கு, எத்தனை, 'பேன்ட்' மற்றும் சட்டைகள் எடுப்பீர்கள்?
என் பிறந்த நாளான, ஜூலை 1ம் தேதிக்கு முன் வாங்குவேன்... ஒவ்வொன்றையும், மாதம் ஒன்று வீதம், ஆண்டுக்கு, 12 முறை தான் அணிவேன்... மொத்தம் எவ்வளவு என்பதை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்!
கு. சரவணன், கோவை: முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
மின் மினிப் பூச்சி பார்த்திருக்கிறீர்கள் அல்லவா... அது, பறக்கும்போது தான் பளபளக்கும்... அதேபோல் எந்த மனிதனும் சுறுசுறுப்போடு இயங்கும்போது பிரகாசிக்கிறான்!
* ராம.சுப்பு, விருதுநகர்: 'பேனா, நினைவு சின்னம் வைக்க முடியாது... அதை நிறுவ, நான் விடப்போவதில்லை...' என்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளாரே...
அவர் அத்துடன் விட்டாரா... அடுத்து, கண்ணாடியையும் வைப்பர் என்று கூறியுள்ளாரே... இப்போதெல்லாம் ரொம்ப தைரியமாக அறிக்கை விடுகிறார்... பாராட்டுவோம்!
தி.சே. அறிவழகன், திருப்புலிவனம், காஞ்சிபுரம்: தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலினின் சாதனை என்ன?
பேனா சிலை. மக்களின், 81 கோடி ரூபாய் பணத்தில், கருணாநிதி நினைவிடத்தில் பேனா சிலை அமைக்கப் போவது தான்!
வி. லோகாம்பாள், தாராபுரம்: நமது நாட்டின் புதிய ஜனாதிபதி, வழக்கமான ஜனாதிபதியாக இருப்பாரா அல்லது மக்கள் வாழ்த்தும் ஜனாதிபதியாக இருப்பாரா?
ஆளும், பா.ஜ.,வால் தேர்வு செய்யப்படுபவராச்சே... 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆகத்தான் இருப்பார்!
அ. மணி, சென்னை: நம் நாட்டில் மீண்டும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதா?
பிரதமர் மோடியின், 8 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் புகார் எதுவுமே இல்லை... தங்கள் ஆட்சியில், லட்சக்கணக்கான கோடிகள் ஊழல் செய்துள்ள காங்கிரசை, இந்திய மக்கள் ஆதரிப்பரா என்ன!
கே.கே. வெங்கடேசன், செங்கல்பட்டு: வருமான வரி, சரியான அளவு செலுத்தியதற்காக, ரஜினிகாந்துக்கு விருது கிடைத்திருக்கிறதே...
நேர்மையானவர்... பாராட்டுக்குரியவர்! ஆனால், இவரைப் போன்ற மற்ற நடிகர்களுக்கு பாராட்டு கிடைப்பதில்லையே... அத்துடன் அவர்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு கார்களுக்குக் கூட, இறக்குமதி வரி செலுத்தாமல் ஏமாற்றி அல்லவா வருகின்றனர்!