
பா - கே
நகரிலுள்ள பிரசித்திப் பெற்ற அம்மன் கோவில் ஒன்றின் ஆடி மாத சிறப்பு பூஜை அழைப்பிதழை, பொறுப்பாசிரியருக்கு கொடுக்க வந்திருந்தனர், கோவில் நிர்வாகிகள்.
அவர்கள் திரும்பி போகும்போது, என்னிடமும், லென்ஸ் மாமாவிடமும், 'கொரோனா காரணமா, ரெண்டு வருஷம், ஆடி மாத சிறப்பு விழா நடத்தப்படவில்லை. இந்த வருஷம், பாட்டுக் கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு என, ஏற்பாடு செய்துள்ளோம். நீங்களும் ஒரு நடை கோவிலுக்கு வந்துட்டு போங்கோ...' என்றனர்.
'ஆஹா... பேஷா வந்துடறோம். சாமியை பார்க்காட்டாலும், கூழ் குடிக்க நிச்சயமா வர்றோம்...' என்றார், மாமா.
போன வாரம் தான், லென்ஸ் மாமாவுக்கு, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருப்பதால், 'டயட்' இருக்க அறிவுறுத்தியிருந்தார், டாக்டர். அதை மனதில் வைத்து, கூழ் குடிக்க ஐடியா செய்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.
அந்த வார இறுதியில், 'மணி... வாப்பா அம்மன் கோவில் வரைக்கும் சென்று வரலாம்...' என்றபடி வலுக்கட்டாயமாக என்னை இழுத்துச் சென்றார்.
கோவில் வளாகமே பக்தர்களால் களை கட்டியிருந்தது. மாவிளக்கு, கூழ் சட்டி மற்றும் பொங்கல் பானை சுமந்தபடி கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தனர், பெண்கள்.
கோவிலின் வெளி பிரகாரத்தில் அமைக்கப்பட்ட மேடையில், ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
'மாமா... நீங்க உள்ளே போயிட்டு வாங்க, நான் இங்கேயே இருக்கிறேன்...' என்று கூறி, அவரை அனுப்பிவிட்டு, சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன்.
அவர் கூறியது:
ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான். அவன் பேரில் ஒரு குற்றச்சாட்டு.
அரண்மனையிலிருந்து, 'உன்னை, விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, அரண்மனை விசாரணை மண்டபத்துக்கு வந்து போ...' என்றது, அரசனின் ஆணை.
'நம்ம பேர்ல எந்த தப்பும் இல்லையே... நாம் எந்தத் தவறும் செய்யலையே...' என்று நினைத்தான், அந்த ஆள்.
ஆனாலும், அரசாங்க உத்தரவு. அதை அலட்சியம் செய்ய முடியுமா? போய்த்தான் தீரவேண்டும். தனியாக போக அவனுக்கு தயக்கமாக இருந்தது.
'துணைக்கு யாராவது வந்து, எனக்காக கொஞ்சம் வாதாடினால் தேவலை. யாரை அழைத்துக் கொண்டு போவது?' என, யோசித்தான்.
அவனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரை அழைத்துப் போகலாம் என, முடிவு செய்தான்.
அந்த மூவரில் மிகவும் நெருக்கமான ஒரு நண்பரின் வீட்டுக்குப் போய் கதவை தட்டினான். திறந்தது. நண்பனின் முகம் தெரிந்தது. அவனிடம், 'நண்பனே, என்னை விசாரிப்பதற்காக அரண்மனைக்கு வரச்சொல்லி உத்தரவு வந்திருக்கிறது. நீ கொஞ்சம் எனக்காக அங்கே வந்து வாதாட வேண்டும்...' என்றான்.
'என்னால வர முடியாது...' என்று சொல்லி விட்டான், அவன்.
இவனுக்கு ஏமாற்றமாகப் போய் விட்டது.
'ரொம்பவும் நெருக்கமா நம்மகிட்டே பழகிட்டிருந்த இவனே இப்படிச் சொல்லிட்டானே...' என்று வருத்தப்பட்டான்.
'சரி, பரவாயில்லை. இன்னொரு நண்பனிடம் போவோம்...' என்று முடிவு செய்து, இரண்டாவது நண்பனை தேடிச் சென்றான். அவனிடம் விபரத்தைச் சொன்னான்.
முழுவதையும் கவனமாக கேட்ட அவன், 'வருகிறேன். ஆனால், அரண்மனை வரையில் தான் வருவேன். அங்கே நின்று கொள்வேன். அதற்கு மேல் வரமாட்டேன்...' என்று சொல்லி விட்டான்.
'அப்படி அதுவரைக்கும் வந்து என்ன பிரயோஜனம்? கடைசி வரைக்கும் நம்ம கூட வந்து, நமக்காக வாதாடணுமே... அதுதானே முக்கியம்...' என்று நினைத்தான்.
எனவே, அடுத்தபடியாக மூன்றாவது நண்பனிடம் போனான்.
அவன் அதிக நெருக்கம் இல்லை. இருந்தாலும் போனான்: விபரத்தைச் சொன்னான். அவன் உடனே, சட்டையை மாட்டிக் கொண்டு, 'வா போகலாம்...' என்று புறப்பட்டு விட்டான்.
விசாரணையின்போது, தன் நண்பனுக்காக வாதாடி, பரிந்து பேசினான்; விடுதலை வாங்கிக் கொடுத்தான்.
இதில் உள்ள கருத்து என்ன தெரியுமா?
ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று நண்பர்கள் உண்டு. முதல் நபருக்கு என்ன பெயர் தெரியுமா... பணம். இரண்டாவது நபர், சொந்தம். மூன்றாவது நண்பன், அவன் செய்த நற்செயல்கள்.
இறுதி பயணத்தின் போது, பணம் கூட வராது. சொந்தம், கல்லறை வரைக்கும் வரும். நற்செயல்கள் தான் கூடவே வரும். அதாவது, நமக்குப் பின்னாலும் நம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருக்கும்.
'மனிதன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக சொல்லப்பட்ட கதை இது.
- இவ்வாறு சொற்பொழிவாளர் கூறி முடிக்கவும், மாமா வருவதற்கும் சரியாக இருந்தது.
'என்ன மாமா... கூழ் குடித்தீர்களா?' என்றேன்.
'பூஜை முடியாம, கூழ் கொடுக்க மாட்டாங்களாம்...' என்றார், சோகமாக.
'இன்னொரு நாள் வரலாம் மாமா...' என்று சமாதானப்படுத்தி, அங்கிருந்து நகர்த்திக் கொண்டு சென்றேன்.
ப
அமிதாப் பச்சன், ஹிந்தி திரைப்பட உலகில், புயலாக நுழைந்து, இளம் கலைஞராக உருவாகிக் கொண்டிருந்த நேரம் அது. 1971ல், அவர் நடித்த, ஆனந்த் படம் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
அமிதாப்பின் தந்தை, அபிஷேக் பச்சன். (தந்தை பெயர் அபிஷேக் பச்சன் தான். தன் அப்பா பெயரைத் தான், தன் மகனுக்கு வைத்திருக்கிறார், அமிதாப்.)
அந்த காலகட்டத்தில், ஒருமுறை, அபிஷேக் பச்சனின் வீட்டிற்கு, தமிழகத்தை சேர்ந்த மூத்த எழுத்தாளரான, க.ந.சுப்ரமணியம் போயிருந்தார். அபிஷேக் பச்சனும், க.ந.சு.,வும் நண்பர்கள். ஹாலில் அமர்ந்து எதைப் பற்றியோ சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உள் அறையிலிருந்து ஹாலுக்கு வந்திருந்தார், அமிதாப்.
உடனே, தன் நண்பருக்கு, மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறார், அபிஷேக் பச்சன்.
'இதுதான் என் மகன், அமிதாப் பச்சன்...'
'ஓ அப்படியா...' என்றவர், அமிதாப்பை நிமிர்ந்து பார்த்தபடியே, 'என்ன தம்பி பண்ணிக்கிட்டிருக்க...' என கேட்டிருக்கிறார், க.ந.சு.,
'என்னது, நம்மைத் தெரியவில்லையா?' என, அதிர்ந்து போனார்.
'ஒரு சவுத் இண்டியன் ரைட்டர், வேட்டி கட்டிக் கொண்டிருந்தவர். என்னைப் பார்த்து, என்ன செய்கிறாய் என்று கேட்டு விட்டார்...' என்று, பின் ஒருநாள்,
இந்த சம்பவத்தை அமிதாப்பே நினைவு கூர்ந்தார்.
இது எப்படி இருக்கு?