PUBLISHED ON : ஆக 07, 2022

முதலிரவு பிரச்னை!
'முதலிரவு பிரச்னை' என்ற தலைப்பில், 'செக்ஸ்' பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என, ஆசிரியர் விரும்புவதாக கூறினார், 'குமுதம்' இணை ஆசிரியர் ரா.கி.,
எனக்கு அப்போது திருமணமாகவில்லை.
'என்ன சார் என்னை போய் எழுத சொல்கிறீர்களே... சீனியர் நிருபர் யாரையாவது எழுதச் சொல்லலாமே...' என்றேன்.
'ஆசிரியர் கூறியதை உங்களிடம் சொல்லி விட்டேன். மேலும், ஒரு நிபந்தனை. குக்கிராமத்தில் வசிக்கும், நடுத்தர வயதுள்ள அம்மாவும், தாவணி போட்ட மகளும் கூட, நீங்கள் எழுதும் கட்டுரையை படிக்க வேண்டும்; முகம் சுளிக்க கூடாது...' என்றார்.
'பாரி கம்பெனி'யில் என்னுடன் பணிபுரிந்த கோபால் என்ற நண்பரின் அப்பா, டாக்டர் மாதவன்; பிரபல மகப்பேறு மருத்துவர். அவரிடம் கேட்டு இந்த கட்டுரை எழுத தீர்மானித்தேன். அனைவரையும் கவரக்கூடிய வகையிலும், கட்டாயமாக படிக்க கூடிய கட்டுரையாகவும் அமைய வேண்டும் என்பதில், மிகவும் தெளிவாக இருந்தேன்.
அது தொடர்பாக டாக்டர் மாதவனை சந்திக்க சென்றேன். 'செக்ஸ்' குறித்த என்னுடைய எல்லா சந்தேகங்களுக்கும் பொறுமையாக பதில் கூறினார்.
நான் எழுதும் கட்டுரைகளை, முதலில் என் அம்மா படிப்பார். அவர் படித்த பிறகு தான், எந்த கட்டுரையையும் பத்திரிகைக்கு அனுப்புவேன். இந்தக் கட்டுரையை அம்மாவிடம் கொடுத்தேன். கட்டுரையை படித்து, 'மேட்டர் நல்லா இருக்கு. உன் பெயரிலேயே வெளியிட சொல்லலாமே...' என்றார், அம்மா.
நான் அனுப்பிய கட்டுரையை திருத்திய ஆசிரியர், மாஸ்டர் ஐடியா ஒன்றை செய்தார்.
அப்போது சென்னை விவேகானந்தா கல்லுாரியின் முதல்வர், அறிவியல் சம்பந்தமான பத்திரிகையை நடத்தி வந்தார். கட்டுரையை அக்கல்லுாரியின் முதல்வருக்கு அனுப்பி படிக்கச் செய்தார்.
அவரும் கட்டுரையைப் படித்து, 'கட்டுரை நன்றாக இருக்கிறது. அனைவரும் படிக்க வேண்டும். கல்லுாரிக்கு செல்லும் என் மகள்களையும் இந்தக் கட்டுரையைப் படிக்க, நான் சிபாரிசு செய்திருக்கிறேன்...' என்று கடிதம் எழுதினார்.
'குமுதம்' இதழில், முதல் பக்கத்தில், 'கல்லுாரி முதல்வர் பாராட்டிய கட்டுரை' என்று வெளியானது. அந்தக் கட்டுரையை படித்த பலரும் பாராட்டு மழையில் என்னை நனைய வைத்தனர்.
லாலேட்டனின் எளிமை!
நடிகர், தயாரிப்பாளர் கே.பாலாஜியை ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவரது மாப்பிள்ளையான நடிகர் மோகன்லால், அறையிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தார்.
நடிகர் மோகன்லாலை அதற்கு முன் நான் சந்தித்ததே இல்லை. அதை, நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியிடம் தெரிவித்தவுடன், மலையாளத்தில் லாலேட்டனை உள்ளே வரும்படி அழைத்தார். என்னை பற்றி கூறி, அவரிடம் அறிமுகப்படுத்தினார்.
அந்த சமயம் மோகன்லாலும், நடிகர் பிரபுவும் இணைந்து நடித்த, சிறைச்சாலை என்ற படம் வெளியாக இருந்தது. 'அந்த படத்தை பற்றி ஒரு பேட்டி அளிக்க முடியுமா?' என்று கேட்டேன்.
மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு, சென்னை, எழும்பூரில் இருந்த அவரது வீட்டிற்கு வரச் சொன்னார். அங்கு ஒரு சிறிய அறையில், ஒரு மேஜை, நாற்காலி இருந்தது.
'நீங்கள் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, உங்களுக்கு சவுகரியமாக நாற்காலியில் உட்காருங்கள்...' என்றார்.
அவரும், பாலாஜியின் மகனும், எனக்கு நல்ல நண்பருமான சுரேஷ் பாலாஜியும் தரையில் உட்கார்ந்து பேட்டி கொடுத்தனர்.
மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படும் மோகன்லாலின் எளிமை வியக்க வைத்தது.
இரண்டு மணி நேரம் பேட்டி அளித்த பின், வீட்டின் வாயில்வரை வழியனுப்ப வந்தவர், 'சார், இரண்டு நாட்கள் மலையாள திரைப்படத்துறையில், 'ஸ்டிரைக்' நடக்கிறது. எனவே, நான், 24 மணி நேரமும் வீட்டில் தான் இருப்பேன்.
'பேட்டி கட்டுரை எழுதும்போது உங்களுக்கு எந்த சந்தேகம் வந்தாலும், என் பர்சனல் நம்பருக்கு போன் செய்யுங்கள். நான் தான் எடுப்பேன். உங்களுக்கு வேண்டிய விஷயங்கள் சொல்கிறேன்...' என்றார், மோகன்லால்.
மோகன்லால் பேட்டி, 'குமுதம்' இதழில், ஐந்து பக்கங்கள் வந்தன; நல்ல வரவேற்பு கிடைத்தது.
விளையாட்டில் ஈடுபாடு கொண்ட, சிவந்தி ஆதித்தன்!
'தினமலர் - வாரமலர்' இதழில், 'மெட்ராஸ் மேட்டர்' பகுதிக்காக, அப்போது சென்னை நகர் ஷெரிப் ஆக இருந்தவரும், 'தினத்தந்தி' அதிபருமான, சிவந்தி ஆதித்தனாரை, அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது அவர், சென்னை துப்பாக்கி சுடும் கிளப்பின் தலைவராக இருந்தார்.
அவர் வீட்டின் மாடி அறையில் கண்ணாடி அலமாரிகளில், 12க்கும் மேற்பட்ட பலவகையான பிஸ்டல்களை வைத்திருந்தார். அவை ஒவ்வொன்றையும் எடுத்து, எந்த வகை பிஸ்டல், எவ்வளவு துாரம் சுடும், அவற்றின் தனி சிறப்புகளை விளக்கிச் சொன்னார்.
சென்னையில் வேறு யாரிடமாவது இத்தனை துப்பாக்கிகள் இருக்குமா என்பது சந்தேகம்... துப்பாக்கி சுடுவதை தவிர, பல்வேறு விளையாட்டுகளிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்தியன் ஒலிம்பிக் சங்கம் உட்பட பல விளையாட்டு சங்கங்களிலும், தலைவராகவும், நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார்.
நடிகை ஷோபா பற்றி பாலுமகேந்திரா கூறியது என்ன...
— தொடரும்
எஸ். ரஜத்