
படிக்காவிட்டாலும்...
நவீன வசதியுள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில், பிரசவித்த தோழியை காண சென்றிருந்தேன்.
அங்கு ஒரு பெண்மணி, இட்லி, நொய் கஞ்சி, பழ ரசம் என்று, தோழிக்கும்; தோழியின் அம்மாவிற்கு, சாம்பார் சாதம், சுண்டல், மோர் குழம்பு, சப்பாத்தி, சுக்கு காபி கொடுத்து, உபசரிப்பதை கண்டேன்.
முதலில் அப்பெண்மணியை, தோழியின் உறவினர் என்று எண்ணினேன். ஆனால், அப்பெண்மணி, வார்டில் இருக்கும், மற்ற பிரசவித்த பெண்களுக்கும் இதுபோல உணவுகளை வழங்கினார். காரணம் அறிய, அப்பெண்மணியை அழைத்து, விசாரித்தேன்.
'பல வீடுகளில், வீட்டு வேலை செய்கிறேன். வேலை நேரம் போக, நகர மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை பெறுபவர்களின் விருப்பத்திற்கேற்ப, ஆரோக்கியமான, வீட்டு பாரம்பரிய முறை உணவு, டிபன், பழ ரசம் மற்றும் டீ, காபி தயாரித்து, நியாயமான விலையில் வழங்குகிறேன்.
'நான் தயாரித்த உணவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மேலும், பிறந்த குழந்தைகளுக்கு, பருத்தியால் ஆன ஆடைகளையும் தயாரித்து வழங்குகிறேன்...' என்றார், அப்பெண்மணி.
மெத்த படிக்காவிட்டாலும், அப்பெண்மணியின் கைத்தொழில் சாமர்த்தியத்தை மனதார பாராட்டி வந்தேன்.
கே. நாகம்மாள், கடலுார்.
கலாசாரம் காக்கும் கல் பூங்கா!
எங்கள் ஊருக்கு அருகே உள்ள மனநல மருத்துவமனையில் வேலை பார்க்கும் நண்பரை பார்க்க சென்றேன்.
அடர்ந்த மரங்களும், இயற்கை செடிகளும் அமைத்து, வளாகமே அமைதிப் பூங்காவாக இருந்தது. தோட்டத்தின் ஒரு பகுதியில் கல் பூங்கா அமைக்கப்பட்டிருந்ததை பார்த்து அசந்து போனேன்.
அதாவது, நகர் பகுதியில் பயன்படாத நிலையில் உள்ள ஆட்டு உரல், அம்மிக்கல், குந்தாணி, குத்து உரல் மற்றும் திருகை போன்றவற்றை, உரியவர் அனுமதி பெற்று வாங்கி வந்து, மருத்துவமனை தோட்டத்தில், கல் பூங்கா அமைத்துள்ளார், மருத்துவர்.
காயலான் கடையில் பயனற்று கிடக்கும் கிரைண்டரின் வட்டக் கற்களை, குப்புறப் பொருத்தி சுவருக்கு அழகும், மெருகும் ஏற்றியிருந்தார். காலத்தால் எளிதில் அழியாத கலைப் பொக்கிஷமாக பாதுகாப்பதுடன், நம் கலாசாரத்தை பறைசாற்றும் இவ்வகை கல் பூங்கா அமைத்த மருத்துவரின் பணியை எண்ணி வியந்தேன்.
மேலும், நகர், கிராமப் புறங்களில், தெருக்களிலும், வீடுகளிலும் பயனற்றுக் கிடக்கும் கலாசார அடையாளங்களை, பஸ் ஸ்டாப், பொதுமக்கள் அதிகம் வரும் பொழுதுபோக்கு பூங்காக்களில் இதுபோன்று அமைக்கப் போவதாக தெரிவித்த மருத்துவரின் முயற்சியை பாராட்டி விட்டு வந்தேன்.
பி. குமாரவேல், ராஜபாளையம்.
எந்த புற்றில் எந்த பாம்போ!
கொஞ்சம் கையிருப்பு தொகை, மீதி நகையை விற்றும், பற்றாக்குறைக்கு வங்கியில் கடன் பெற்றும், சொந்தமாக ஒரு வீடு வாங்க எண்ணி, புரோக்கர்களிடம் சொல்லி வைத்தோம்.
நான்கைந்து வீடுகளை காட்டினார், புரோக்கர்; ஏதுவுமே பிடிக்கவில்லை. பிறகு, அவரின் தொடர்பில் உள்ள மற்ற புரோக்கர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களும், ஆகாதது போகாததான வீடுகளையே காட்டினர்.
இந்நிலையில், வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், 'பிறகு பார்த்துக் கொள்ளலாம்...' என்று கூறி சென்று விட்டோம்.
திரும்பி வந்து, வீட்டை பார்த்த எங்களுக்கு, அதிர்ச்சி. வீட்டின் பின்பக்க கதவும், பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறிக் கிடந்தன. திருடர்கள் வந்திருப்பர் என யூகித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
வெளியூர் செல்லும் முன், எச்சரிக்கையாக, பணம், நகைகளை வங்கி லாக்கரில் வைத்து விட்டோம். அதனால், அவை தப்பின.
தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் வெளியூர் செல்லும் முன், எங்களோடு யார் யார் தொடர்பில் இருந்தனர் என்பதையும் ஆய்வு செய்தனர், போலீசார். கண்காணிப்பு கேமரா பதிவில், எங்களுக்கு வீடு காட்டிய புரோக்கர் மற்றும் இரண்டு பேரின் உருவம் பதிவாகி இருந்தது.
புரோக்கரை பிடித்து போலீசார் விசாரிக்க, உண்மையை ஒப்புக் கொண்டான். புது வீடு வாங்க உள்ளதால், பணம், நகை நிறைய கிடைக்கும் என்ற நப்பாசையில் வந்ததாக, வாக்குமூலம் அளித்தான்.
எனவே, புரோக்கர் தானே என்று அலட்சியமாக இருந்து, அவர்களிடம் நம் நிலைமையை கூறி, உடமைகளை இழக்க வேண்டாம். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாது.
பி. ராஜேஸ்வரி, மதுரை.