
வி. சிங்காரம், நெல்லை: எனக்கு, நிறைய பேர் துன்பம் தருகின்றனரே... நான் என்ன செய்ய வேண்டும்?
பதிலுக்கு நீங்களும், அவர்களுக்கு, தீமையை செய்து துன்புறுத்தாமல், விலகி விடுவதே அறிவார்ந்த செயல்கள் யாவற்றினும் தலைசிறந்தது!
சி. மணிமேகலை, புதுக்கோட்டை: யாரைக் கண்டால் உங்களுக்குப் பிடிப்பதில்லை?
சிரித்துப் பேசி, பின்னால் பள்ளம் பறிக்கும் கயவர்களை, முகஸ்துதி செய்யும் குள்ள நரிகளை, உப்புச் சப்பில்லாத விஷயங்களை திரும்பத் திரும்பச் சொல்லி கழுத்தறுக்கும், 'லுாசு'களை, மேதாவிகளாக நினைத்துக் கொள்ளும் மூடர்களை...
* பி.ஜெயலட்சுமி, திண்டுக்கல்: தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
தண்ணீர் பாம்பு போன்றது, தன்னம்பிக்கை; பார்ப்பதற்கு சற்று பயத்தைத் தந்தாலும், அதனால் ஆபத்தில்லை. நாக பாம்பை போன்றது, தலைக்கனம்; அது, ஆளையே தீர்த்து விடும்.
கி.ராமச்சந்திரன், விழுப்புரம்: நல்ல அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும்?
சோற்றை அள்ளி வாய்க்குள், கை போடுகிறதே தவிர, தானே தின்பதில்லை. அரசியல்வாதிகள் இந்த கையைப் போல் இருக்க வேண்டும். ஆனால், இப்படியா இருக்கின்றனர்! அகப்பட்டதைச் சுருட்டி கொள்ளும் நிலையில் தானே உள்ளனர்.
பி. செல்வராஜ், சாத்துார்: நாட்டுக்கு, இன்று நல்ல தலைவர்கள் தேவையா அல்லது நல்ல நடிகர்கள் தேவையா?
நல்ல தலைவர்கள் தான் தேவை. நல்ல நடிகர்களால், நாட்டுக்கு என்ன நன்மை வந்துவிடப் போகிறது. அவர்கள், நன்றாக நடிக்க நடிக்க, 'ரேட்' உயரும்; இன்னும் ஏராளமான பங்களாக்களையும், எஸ்டேட்களையும் வாங்கிப் போடுவர். இதனால், நாட்டுக்கும், நமக்கும் என்ன பயன்!
* ஜி. ராஜேந்திரன், சென்னை: தைரியம் வர என்ன செய்ய வேண்டும்... மருந்து ஏதாவது இருக்கிறதா?
மருந்து - மாத்திரை சாப்பிடுவதால், தைரியம் வந்து விடாது. சிறிது காலம், சுவாமி விவேகானந்தரின் நுால்களை, யாரிடமாவது இரவல் வாங்கி படியுங்கள். தைரியம் தானாக வந்து விடும். பிறகு, புத்தகத்தை இலவசமாக வாங்கியவரிடமே, 'உங்கள் புத்தகத்தை திருப்பி தரமுடியாது... உன்னால் ஆனதை பார்த்துக் கொள்...' என்று சொல்லக்கூடிய அளவுக்கு, தைரியம் வந்துவிடும். ஆனால், அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள்.