
கே
பெரிய பெரிய நிறுவனமாகட்டும், தொழிற்சாலைகள் ஆகட்டும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதில் பணிபுரியும், படித்து, பட்டம் பெற்றவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட, சிலசமயம், பிரச்னைகளுக்கு தீர்வு காண, தத்தளிப்பதுண்டு.
ஆனால், அங்கு பணிபுரியும், அதிகம் படிப்பறிவில்லாத, சாதாரண தொழிலாளி, சுலபமாக பிரச்னைகளை தீர்த்து விடுவார். இதைப் பற்றி ஏற்கனவே, இப்பகுதியில் எழுதியுள்ளேன். படிக்காமல் விட்டுப் போனவர்களுக்காக ஒரு சின்ன, 'ப்ளாஷ் - பேக்!'
கார் தொழிற்சாலை ஒன்றில், புது மாடல் கார் ஒன்றை தயாரித்தனர். அதை வெள்ளோட்டம் விட, நிறுவனத்தின் உள்ளே இருந்து, சாலைக்கு கொண்டு வரும்போது, காரின் மேற்பகுதி, கூரையில் உரசியது. மீறி வெளியே கொண்டு வந்தால், புது காரின் மேற்பகுதி, 'டேமேஜ்' ஆகும் நிலைமை.
நிறுவன முதலாளி முதல், டெக்னிக்கல் மேனேஜர் வரை பலரும் பலவிதமாக யோசனை சொல்லினர். எதுவும் பயன் தரவில்லை.
முடிவில், ஒரு சாதாரண தொழிலாளி, 'காரின் நான்கு சக்கரத்தில் இருந்தும் காற்றை விடுவித்து, காரை வெளியே நகர்த்தி வந்து விடலாம். பிறகு, காற்றை நிரப்பிக் கொள்ளலாம்...' என்று யோசனை கூற, பிரச்னை எளிதில் தீர்ந்தது.
அதே போல், இன்னொன்று:
நண்பர் ஒருவர், ஹைவேசில் படுவேகமாக காரை செலுத்திக் கொண்டு செல்ல, ஒரு டயர் பஞ்சராகி விட்டது. பஞ்சரான டயரை கழட்டி, 'ஸ்டெப்னி'யை எடுத்து மாட்ட முயன்றார். நான்கு நட்டுகளுள் மூன்று உடைந்து விட, நான்காவது நட்டு புதரில் விழுந்து காணாமல் போனது.
என்ன செய்வது என்று தெரியாமல், யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று சாலையோரம் காத்திருந்தார். அப்போது, தலையில் புல்லு கட்டை சுமந்து வந்த ஒரு விவசாயி, இவர் அருகில் வந்து விசாரித்தார்.
'இவரிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது...' என்று அலட்சியமாக நின்றிருந்த நண்பரிடம், மீண்டும் அந்த விவசாயி கேட்க, வேண்டா வெறுப்பாக விஷயத்தை கூறியுள்ளார், நண்பர்.
'இதுக்கு ஏன் இப்படி கவலைப்படுகிறீர்கள், மற்ற மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு நட்டை கழட்டி, இந்த டயரில் போட்டு விடுங்க... போற வழியில் இருக்கும் நகரில் ஏதாவது ஒரு மெக்கானிக் ஷாப்பில் சென்று, புதிய நட்டுகளை வாங்கி போட்டுக் கொள்ளுங்கள்...' என்று, 'அசால்ட்' ஆக சொல்லி, தன் பாட்டுக்கு சென்றுள்ளார், அந்த பாமர விவசாயி.
கம்மிக் பேக் டு த பாயின்ட்...
இதே போன்றது தான் இன்னொரு சம்பவம். இந்த விஷயம் வலைதளங்களில் உலா வந்ததாக, நண்பர்கள் கூறினர்.
ஒரு தொழிற்சாலையில், மிகவும் கனமான பெரிய இயந்திரம் ஒன்றை, 30 அடி பள்ளத்தில் பொருத்த வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு அதிக எடையை துாக்கக் கூடிய கிரேன் அப்போது கிடைக்கவில்லை.
சாதாரண கிரேன்களை கொண்டு, இயந்திரத்தை துாக்கும்போது, ஏதாவது விபரீதம் நேர்ந்தால், இயந்திரம் பாதிக்கப்படும்; பல கோடி ரூபாய் நஷ்டமாகுமே என்று கையை பிசைந்தார், நிறுவன முதலாளி.
நிறுவனத்தில் பணிபுரியும், பட்டம் பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. இறுதியாக, இயந்திரத்தை பள்ளத்தில் இறக்குவதற்கு, 'டெண்டர்' விட்டனர்.
'எப்பாடுபட்டாவது பெரிய கிரேனை வரவழைத்து, இயந்திரத்தை பொருத்தி விடலாம்...' என்று நினைத்து, பலரும், 'டெண்டரில்' கலந்து கொண்டனர். பணியை முடிக்க, 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை கேட்டனர். அவ்வளவு தொகை செலவழிக்க வேண்டுமா என தயங்கியுள்ளார், முதலாளி.
அப்போது, ஒருவர், முதலாளியை சந்தித்து, தான் அந்த பணியை முடித்துத் தருவதாக கூறி, அதற்கு, ஐந்து லட்சம் ரூபாய் மட்டும் கேட்டுள்ளார். முதலாளிக்கு ஆச்சரியம். அதேசமயம், 'இவரை நம்பி இப்பணியை கொடுக்கலாமா...' என்று யோசித்தார்.
பின், அவரிடம் தென்பட்ட தன்னம்பிக்கையை பார்த்து, அரை மனதாக ஒப்புக்கொண்டார்.
முதலாளியிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார், அந்நபர்.
'இந்த மெஷின் தண்ணீரில் நனைந்தால், ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?' என்றார்.
'அதெல்லாம் ஒன்றும் ஆகாது...' என்றதும், வேலை ஆரம்பிப்பதற்கான நாளும், நேரமும் குறிக்கப்பட்டது.
அந்த நாளில், நிறுவன ஊழியர்கள், மேலாளர், நிறுவன முதலாளி மற்றும் சுற்றியிருந்தவர்கள் என, பலர் ஆர்வமுடன் குழுமியிருந்தனர்.
வரிசையாக பல லாரிகள் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்தன. அந்த லாரிகள் அனைத்திலும், பாளம் பாளமாக பனிக்கட்டிகள் நிரம்பியிருந்தன. முதலில் பனி பாறைகளை, குழிக்குள் நிரப்பினர். கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரத்தை நகர்த்தி, பனி பாறைகள் மீது, நிலை நிறுத்தினர்.
அதன்பின், குழிக்குள், பி.வி.சி., பைப் ஒன்று செருகப்பட்டது. குழிக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற மின் மோட்டார் பொருத்தப்பட்டது. வெயிலில் பனி பாறைகள் உருக, உருக மோட்டாரை இயக்கி, குழிக்குள் இருந்து தண்ணீரை வெளியேற்றத் துவங்கினர்.
கொஞ்சம் கொஞ்சமாக, இயந்திரம் கீழே இறங்கத் துவங்கியது. ஏழெட்டு மணி நேரத்துக்குள், குழிக்குள் இயந்திரம் கச்சிதமாக பொருத்தப்பட்டது. இதற்கான செலவு வெறும், 1 லட்ச ரூபாய் மட்டுமே.
கூடியிருந்த அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். முதலாளி மகிழ்ந்து, அந்நபரை பாராட்டி, பேசிய தொகையை கொடுத்து அனுப்பினார்.
இச்செய்தி உண்மையா, பொய்யா என்று உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், சமயோசிதமாக பிரச்னைக்கு தீர்வு கண்ட யுக்தி, பாராட்டுக்குரியதுதானே!
ப
நள்ளிரவு நேரம். ஒரு டாக்டரின் வீட்டு கதவை யாரோ தட்டினர். பாதி துாக்கத்திலிருந்த அந்த டாக்டர், எழுந்து வந்து கதவை திறந்தார். வெளியே ஒருவர் நிற்பதை பார்த்து, 'என்ன வேண்டும் உங்களுக்கு... என் உதவி ஏதாவது தேவையா?' என்றார்.
'ஆமாம், டாக்டர்...'
'சொல்லுங்கள்...'
'இதோ, இந்த முகவரிக்கு நீங்கள் வரவேண்டும்... ரொம்ப அவசரம்...'
'அப்படியா, இதோ வருகிறேன்...'
அவசரமாக புறப்பட்டார், டாக்டர். இருவரும் வெளியே வந்தனர்.
தன் காரை டாக்டர் எடுத்து வர, அழைக்க வந்தவர், ஏறி உட்கார்ந்தார். வேகமாக விரைந்து, அவர் சொன்ன இடத்திற்கு வந்ததும், இருவரும் இறங்கினர்.
'டாக்டர், உங்க, 'விசிட்டிங் பீஸ்' எவ்வளவு?' என்றார், அந்த நபர்.
'ஐம்பது ரூபாய்...'
'இந்தாருங்கள், 50 ரூபாய். ரொம்ப நன்றி டாக்டர். அங்கிருந்து வர, டாக்சிக்காரர், 100 ரூபாய் கேட்டார்...' என, பணத்தை கொடுத்து விட்டு, அந்த ஆள் போய் விட்டான்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.