PUBLISHED ON : மே 28, 2023

* பொ. மாரிமுத்து, நெல்லை: 'திராவிட நிலப்பரப்பில் இருந்து, பா.ஜ., அகற்றப்பட்டு விட்டது...' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரே...
கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக, பா.ஜ., அமர்ந்துள்ளதே... எப்படி திராவிட நிலப்பரப்பில் இருந்து அக்கட்சி அகற்றப்பட்டு விட்டதாக, ஸ்டாலின் கூறலாம். அவர், இன்னும் அரசியலில் நிறைய படிக்க வேண்டியுள்ளது!
ஆர். பிரசன்னா, திருச்சி: கள்ள சாராயம் குடித்து இறப்பவர்கள் என்ன சுதந்திரப் போராட்ட வீரர்களா... அவர்கள் இறப்புக்கு, ஏன் அரசு இழப்பீடு?
சுதந்திர போராட்ட வீரர்களாக நினைத்து விட்டார் போலும், முதல்வர் ஸ்டாலின். அதனால், மக்கள் வரிப்பணத்திலிருந்து, தலா, 10 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். இது போலவே, பீகாரிலும் நடந்தது. அம்மாநில முதல்வர், நிதிஷ்குமார், 'கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு, எந்த இழப்பீடும் தர முடியாது...' என்று கூறியதை, நம்மவர் அறியவில்லை போலும்!
எஸ். கலைச்செல்வி, சென்னை: 'கர்நாடக சட்டசபை வெற்றி, லோக்சபா தேர்தலின் முன்னோட்ட வெற்றி என நினைக்காதீர்கள்...' என்று, காங்கிரசுக்கு, குட்டு வைத்திருக்கிறாரே, அரசியல் ஆலோசகர்?
சரியாக தான் குட்டு வைத்திருக்கிறார். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில், அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர வாய்ப்பில்லை. மீண்டும், பா.ஜ.,வே ஆட்சியைக் கைப்பற்றும்!
தி. மகாராஜன், சின்னமனுார்: ரம்ஜான் விருந்தை நீங்கள் தவற விடுவதில்லை தானே...
உண்மை தான். ஒவ்வொரு ரம்ஜானின் போதும், நண்பர்கள் ஆரூன் மற்றும் மீரான் இருவரும், 100 பிளேட் மட்டன் பிரியாணி, சிக்கன், முட்டை என, அனுப்பி விடுவர். நமது அலுவலகத்தினர் சாப்பிடுவர். எனக்கு தனியாக அனுப்பி வைக்கும், மட்டன் சேர்க்காத பிரியாணியை நான் சாப்பிடுவேன்!
எம்.கே. லதா, சென்னை: 'கல்லெறி' அமைச்சராக இருந்த நாசர், துாக்கி அடிக்கப்பட்டுள்ளாரே...
இவர் மட்டுமல்ல, பெண்களின் அரசு பஸ் இலவச பயணம் பற்றி இழிவாக பேசிய அமைச்சரையும், மாணவியருக்கு, 1,000 ரூபாய் வழங்குவது பற்றி தரக்குறைவாக பேசிய அமைச்சரையும், துாக்கி அடிக்கவேண்டும், முதல்வர் ஸ்டாலின்!
* பி.ஜி.பி. இசக்கி, சென்னை: 'டாஸ்மாக்' கடைகள் இருந்தும், கள்ள சாராயம் பெருக்கெடுத்து, பீடு நடை போடுகிறதே... எப்படி?
'குவாட்டர், ஹாப், புல்' என, எல்லா சரக்குகளுக்கும் அதிக விலை உயர்த்தி விட்டனர். இதுபற்றி கவலைப்படாமல் வாங்கி விடுகின்றனர், பணம் படைத்தவர்கள். ஏழைத் தொழிலாளிகளால், குறைந்த விலையில் கிடைக்கும் கள்ள சாராயம் தானே வாங்க முடியும்!
