தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

உலக நாடுகளை எல்லாம் சுற்றிப் பார்த்துட்டு வந்தார், ஒரு அன்பர். அவர் தன் அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து:

'மணி... பிரான்சு நாட்டின் கடைத் தெருவில் நடக்கறப்போ, பிரான்சு தெரியுது. ஜெர்மனி நாட்டின் கடைத் தெருவில் நடக்கறப்போ, ஜெர்மனி தெரியுது. ரஷ்யா நாட்டின் கடைத் தெருவில் நடக்கறப்போ, ரஷ்யா தெரியுது.

'ஆனா, தமிழ்நாட்டின் கடைத் தெருவுல நடக்கறப்போ, தமிழ்நாடு தெரியல... இங்கிலாந்து தான் தெரியுது...' என்றார்.

'ஏன் அப்படி சொல்றீங்க?'ன்னு கேட்டேன்.

'எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆங்கிலத்தில் தானே பெயர் பலகைகள் கண்ணில் படுது. தமிழில் யாரும் எழுதி வைக்கிறதில்லையே...' என்றார்.

இதைக் கேட்டதும், தானாக என் தலை குனிந்தது.

'குனியாதீங்க, நிமிருங்க...' என்றார்.

நிமிர்ந்தேன்.

அமெரிக்கா போயிருந்தேன். நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்தேன். அங்கே முகப்புல, 'நல்வரவு'ன்னு தமிழ்ல எழுதியிருந்தது. 'இங்கே ஏன் தமிழில் எழுதி வச்சிருக்கீங்க?'ன்னு கேட்டேன்.

'உலகத்தின் மூத்த மொழி, தமிழ்; உயர்ந்த மொழி தமிழ். உலகத்தின் உயர்ந்த நீர்வீழ்ச்சி - நயாகரா. அதனால, அதை இங்கே எழுதி வச்சிருக்கோம்...'ன்னு சொன்னாங்க.

ஜப்பானிய பல்கலைக்கழக வாயில் முகப்புல, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சங்கத் தமிழ் பாடல் வரியை மொழிபெயர்த்து எழுதி வச்சிருந்தாங்களாம்.

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேம் நகரில் உள்ள ஒலிவ மலையில், கிறிஸ்தவ கோவில் ஒன்றில், இயேசு கற்பித்த உபதேசம் - உலகத்தில் உள்ள, 68 மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அதில், இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

புத்தர், தமிழ் படித்தார்ன்னு மிகப் பழைய வடமொழி நுாலான, 'இலலித விசுதாரம்' சொல்கிறது. மேலும், தமிழை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.

'என் கல்லறையில், 'ஒரு தமிழ் படித்த மாணவன்' என, எழுதி வையுங்கள்...' என்றார், போப்.

'திருக்குறளை படிக்க நான் தமிழனாக பிறக்க விரும்புகிறேன்...' என்றார், காந்திஜி.

- இப்படி அவர் சொல்லிக்கிட்டே வந்தவர், 'அது சரி, தமிழுக்கு வயசு என்ன தெரியுமா?' என்றார்.

உடனே நான், 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி...' என, ஆரம்பிச்சேன்.

'ம்... உணர்ச்சிப்பூர்வமா பேசாதீங்க. அறிவுப்பூர்வமா பேசுங்க...' என்றார்.

நான் அமைதியானேன். அவரே சொன்னார்:

தமிழின் தோற்றம் தோராயமாக, கி.மு., 50 ஆயிரம் என, தமிழ் வரலாறுங்கற நுாலில் குறிப்பிட்டிருக்கார், மொழியியல் அறிஞர் தேவநேய பாவாணர்.

இயேசு பிறக்கறதுக்கு, 500 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியங்கிற இலக்கண நுால் நம்மகிட்ட இருந்தது. இயேசு இறந்து, 500 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய மொழி ஆங்கிலம்.

உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி, தமிழ் மொழி. அது தோன்றிய இடம், குமரிக் கண்டம். அங்கே இருந்து தான் பல நாடுகளுக்கும் போய் குடியேறினாங்க.

மங்கோலிய மற்றும் சீன மொழிகளுக்கும், தமிழுக்கும் உறவு உள்ளதாக கூறுகிறார், கால்டுவெல். இந்தோ - ஐரோப்பிய மொழிகளும், தமிழும் நெருங்கியவை என்கிறார், ஆங்கில அறிஞர் ஜி.யு.போப்.

ஹங்கேரி, துருக்கி, உக்ரியன் மொழிகள் தமிழ்லேர்ந்து பிறந்தவைங்கிறார், கபோர் சென்த் கொதல் நய் என்ற மொழி ஆராய்ச்சியாளர்.

சுமேரிய மொழிக்கும், தமிழுக்கும் உள்ள உறவை சுட்டிக்காட்டுகிறார், லோகநாத முத்தரையர்.

கொரியன் மொழிக்கும், தமிழுக்கும் உள்ள உறவை விளக்கியிருக்கார், ஆல்பர்ட்.

ஜப்பானிய மொழிக்கு தமிழே மூலம் என்கிறார், ஓனோ. ஆப்ரிக்க மொழிகளுக்கும், தமிழுக்கும் உள்ள உறவை சொல்கிறார், செங்கோர்.

ஆஸ்திரேலிய பழங்குடிகள் பேசிய மொழிகள், தமிழோடு கொண்டுள்ள உறவை விளக்கியுள்ளார், சமன்லால்.

- இப்படி பல ஆராய்ச்சியாளர்கள் தமிழின் பெருமையை உலகறிய செய்துள்ளனர் என்று நிறைய செய்திகளை சொல்லிக்கிட்டே போனார், உலக நாடுகளை சுற்றி வந்த நண்பர்.

'அது சரி, ஏன் இப்படி இதையெல்லாம் என்கிட்ட சொல்றீங்க...' என, கேட்டேன்.

'தமிழ் பேசறவங்களுக்கு, தமிழ் மொழியை பற்றி தெரியணும் இல்லையா... அதுக்காக தான்...' என்றார்.

அவர் சொல்வதை ஆமோதித்து விடை கொடுத்தேன்.

அப்போது அங்கு வந்த லென்ஸ் மாமா, 'தமிழை வளர்க்க, யாரெல்லாமோ ஊர்வலம் நடத்துறாங்க... தமிழ் மொழி எப்போதோ வளர்ந்து விட்டதுன்னு நீங்க ஒரு ஊர்வலம் நடத்தலாமே...' என்று கூற, 'பேஷா நடத்தலாம். நீரும் கலந்துக்க வாரும்...' என்றபடி வெளியேறினார், அந்த அன்பர்.



ஜெர்மனி நாட்டு சர்வாதிகாரியான ஹிட்லரை, பார்க்கறதுக்காக போனார், ஆங்கிலேய அரசியல்வாதி ஒருவர்.

அப்போ, ஹிட்லர் ஒரு கப்பலின் மேல் தளத்துல நின்னு பேசிக்கிட்டிருந்தார்.

'நல்லவேளை, நீங்க பின்வாங்கினது நல்லதா போச்சு. இல்லேன்னா, நான் உங்களை அடியோட அழிச்சிருப்பேன். உங்களுக்குத் தெரியுமா, என்னோட ஆட்களை பத்தி... நான் சொல்றதை அப்படியே செய்வாங்க. ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டாங்க...' என, பெருமையா சொன்னார், ஹிட்லர்.

ஆச்சரியத்துடன், 'அப்படியா...' என்றார், ஆங்கிலேய அரசியல்வாதி.

'என்ன இப்படி கேட்கறீங்க... இப்ப நான் அதை நேரிலேயே நிரூபிச்சுக் காட்டுறேன் பாருங்க...' என்ற ஹிட்லர், உடனே, கையை தட்டி ஒருத்தனை கூப்பிட்டார்.

ஒரு வீரன், கம்பீரமா வந்து, அவர் முன் நின்றான். அவனிடம், 'கடலில் குதி...' என்றார், ஹிட்லர்.

அடுத்த வினாடி, அவன் பொத்துன்னு கடலில் குதிச்சு, செத்துப் போனான்.

மறுபடியும் கையைத் தட்டினார், ஹிட்லர். இன்னொருத்தன் வந்தான். குதின்னு சொன்னதும், ஏன், எதுக்குன்னு கேட்காமல், அவனும் கடலில் குதிச்சு மூழ்கி போயிட்டான்.

அரசியல்வாதிக்கு ஆச்சரியம் தாங்கலே. மறுபடியும் கையைத் தட்டினார், ஹிட்லர்.

மூணாவதாக ஒரு ஆள் வந்து நின்னான். 'குதி...' என்றார். குதிக்கப் போனான்.

உடனே, ஓடிப்போய் அவன் கையைப் பிடிச்சு, 'உனக்கு என்ன பைத்தியமா... அவரு சொல்றதுக்காக இப்படி குதிச்சு, உன் உயிரை விடறதா?' என, கேட்டார், ஆங்கிலேய அரசியல்வாதி.

'அட போய்யா... இந்த மனுஷன்கிட்ட வேலை பார்க்கறதை விட, கடலில் விழுந்து செத்துப் போறது எவ்வளவோ மேல். என்னை வுடுய்யா...' எனச் சொல்லி, கையை விடுவித்துக்கிட்டு, கடலில் குதிச்சுட்டான்.

அதனால, எல்லா மவுனமும் சம்மதத்துக்கு அறிகுறின்னு எடுத்துக்க கூடாதுன்னு புரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us