PUBLISHED ON : ஆக 06, 2023

* கு. கணேசன், மறைமலைநகர்: எதிர் காலத்தில் தமிழர் ஒருவர், இந்திய பிரதமராக வர வாய்ப்பு உள்ளதா?
வாய்ப்பே இல்லை; தமிழக அரசியல்வாதிகளுக்கு தான் ஹிந்தி தெரியாதே. ஹிந்தி மொழி அதிகம் பேசுவோர் உள்ள, வட மாநில மக்களிடம், இவர்கள் எப்படி, 'கம்யூனிகேட்' செய்வர்!
ப. லட்சுமி, தேனி: பெண்களிடம் உள்ள அதிக சுபாவம் எது?
பாசம், நேசம், பொறுமை. இத்தகைய பண்புகளைத்தான் அதிகம் கொண்டுள்ளனர், பெண்கள். இப்படிப்பட்ட சுபாவம் கொண்ட பெண்களால், சமுதாயம் சீர் அடையும்!
பி. மீனு, சென்னை: தற்போதைய, '26'க்கும் லோக்சபா தேர்தலில் ஜெயிக்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறீங்களா?
இல்லை. அப்படியே ஜெயித்தாலும், பிரதமர் தேர்வில் பிரச்னை ஏற்பட்டு, கூட்டணி உடைந்து விடுமே தவிர, வேறு ஒரு மாற்றத்தையும் பார்க்க முடியப் போவதில்லை!
க. விநாயகம், சேலம்: வாக்காளர்களால் முடிவது எது, முடியாதது எது?
வாக்காளர்களால், சாதாரண மனிதரை மந்திரிகளாக்க முடியும். அதன்பின், மந்திரிகளை, மனிதர்களாக்க முடியாது. இது தான் நிதர்சனம்!
* க. லலிதா, சென்னை: பெண்களுக்கு முன்னேற்றம் வேண்டும் என்று சொல்கின்றனரே...
உண்மை தான்! ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு துாரம் முன்னேறுகின்றனரோ, அந்தளவு, அந்நாடும் முன்னேற்றம் அடையும்!
ப. நாதன், கோவை: என்னைப் பற்றி, சிலர் இகழ்ச்சியாகப் பேசுகின்றனரே... நான் என்ன செய்வது?
கள்ளம் இல்லாத உள்ளம் கொண்டவராக மாறுங்கள். இகழ்ச்சியை பொருட்படுத்தாத மன பக்குவம் வந்து விடும்!
