PUBLISHED ON : ஆக 06, 2023

''அகிலேஷ்... உனக்காக, 'யூ டியூப்' பார்த்து, சிக்கன் பிரியாணி பண்ணியிருக்கேன். சாப்பிட்டு பார்த்து, எப்படி இருக்குன்னு சொல்லு,'' கணவனுக்கு, ஆசையாக தான் செய்த சிக்கன் பிரியாணியை பரிமாறினாள், ஸ்வேதா. அருகில், கணவனின் தம்பி ராகேஷும், தங்கை ப்ரியாவும் உட்கார்ந்திருந்தனர்.
அகிலேஷுக்கும், ஸ்வேதாவுக்கும் திருமணமாகி ஆறு மாதம் தான் ஆகிறது. இருவரும் ஐ.டி.,யில் வேலை செய்கின்றனர்.
ஸ்வேதாவுக்கு சமைக்க தெரியாது. கல்யாணத்துக்கு பிறகு தான், 'யூ டியூப்'களில் இருக்கும் சமையல் வீடியோக்களை பார்த்து, கற்றுக் கொண்டாள்.
அகிலேஷ், தனக்கு சிக்கன் பிரியாணி பிடிக்கும் என்று சொல்லியிருந்தான். அன்று ஞாயிற்று கிழமை என்பதால், கணவனுக்கு பிடித்த சிக்கன் பிரியாணியை சமைத்து கொடுக்க விரும்பி, 'யூ டியூப்' பார்த்து செய்தாள். என்ன சொல்ல போகிறானோ என, அவன் முகத்தையே ஆவலாகவும், சற்றே பயமாகவும் பார்த்தாள்.
என்னடா, சமைக்க தெரியாதவள் நமக்காக கஷ்டப்பட்டு சமைக்கிறாளே என யோசிக்க மாட்டான். அவள் சமையலில், குறை சொல்லிக் கொண்டே இருப்பான். அவளுக்கு மனது கஷ்டமாக இருக்கும். பாராட்டாவிட்டாலும், திட்டாமலாவது இருக்கலாமே...
பிரியாணியை வாயில் வைத்தவன், முகம் சுருங்கியது.
''ஹூம்... என்ன இது, வாயிலயே வைக்க முடியல. இதா பிரியாணி?'' என்றான் ஏளனமாக.
''தக்காளி சாதமா அண்ணி?'' என, ராகேஷ் கேட்டதும், அனைவரும் சிரித்தனர்.
''பேசாம, 'ஆன்லைன்'லேயே, 'ஆர்டர்' பண்ணி இருக்கலாம் அண்ணா...'' என்றாள், ப்ரியா.
இருவரும் காலேஜ் செல்பவர்கள். அகிலேஷின் அம்மா, அப்பா ஊரில் உள்ளனர்.
நேற்று கூட அப்படித்தான். அவனுக்காக அவள் செய்திருந்த பூரியை, அப்பளம் என்று கிண்டல் செய்து, மூவரும் சிரித்தனர்.
அகிலேஷோ, ப்ரியாவோ அவளுக்கு உதவி செய்ய, கிச்சன் பக்கமே வருவதில்லை. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, ஆபீஸ் போக வேண்டும். மனசு வலிக்க, தன் அறைக்கு வந்தாள், ஸ்வேதா.
அடுத்த நாள் அலுவலகத்தில், 'மூடு அவுட்'டாக இருந்த ஸ்வேதாவின் அறைக்குள் நுழைந்த தோழி ஸ்ரேயா, ''ஹாய் குட்மார்னிங்...'' என, உற்சாகமாக கூறினாள்.
அவள் ஒரு உற்சாக பறவை. எந்த பிரச்னையாக இருந்தாலும், அவளிடம் தான் பகிர்ந்து கொள்வாள், ஸ்வேதா.
ஸ்வேதாவின் முகம் சோர்ந்து போய் இருப்பதை கவனித்தாள், ஸ்ரேயா. அவள் அருகில் வந்து, ''ஸ்வேதா... என்னாச்சு, ஏன் காலையிலயே, 'மூட் அவுட்'டா இருக்க?'' என்று கேட்டாள்.
''ஒண்ணுமில்ல ஸ்ரே...''
''சும்மா சொல்லாத. நீ, எப்பவும் இப்படி இருக்க மாட்ட. என்னன்னு சொல்லு,'' என்றாள், ஸ்ரேயா.
''என்னத்த சொல்றது, வெறுப்பா இருக்குடா.''
''ஏன் என்னாச்சு சொல்லுப்பா...''
''அகிலாஷுக்கு பிடிக்கும்ன்னு, நேற்று ஆசை ஆசையா சிக்கன் பிரியாணி செஞ்சேன். அதை சாப்பிட்ட அகிலேஷும், அவர் தம்பி, தங்கையும் என்னை கிண்டல் பண்றாங்கப்பா.''
''அடப்பாவமே... என்ன பழக்கம் இது?''
''ஆமாம்பா, எனக்கு சமைக்க தெரியாதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். 'யூ டியூப்' பார்த்து, பிரியாணி பண்ணினதை மூணு பேரும் சேர்ந்து, என்னை கிண்டல் பண்றாங்கப்பா. மனசு ரொம்ப வேதனையா ஆயிடுச்சு, ஸ்ரே. அதான் நேற்றிலிருந்து, 'மூடு அவுட்'டா இருக்கேன்,'' என்றாள்.
''சே, கேட்கவே கஷ்டமா இருக்கு. அகிலேஷ் ஏன் இப்படி பண்றார். உன்னை பற்றி அவருக்கு தெரியும் தானே. ஏன் இப்படி உன் மனசு நோகற மாதிரி பேசறார்?'' என்றாள், ஸ்ரேயா.
''அவரின் தம்பி, தங்கையை விடு. அவங்க கூட சேர்ந்துக்கிட்டு, இவரும் அப்படி பேசலாமா? அவங்க கிண்டல் பண்ணினாலும், இவர் என் பக்கம் தானே இருக்கணும்... இவர் தானே அவங்களை கண்டிக்கணும்...
''அத விட்டுட்டு அவங்க கூட சேர்ந்து இவரே கிண்டல் பண்ணினா மனசு வலிக்கத்தானே செய்யும்...'' அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
''உண்மை தான். நீ சொல்றத கேட்கறப்ப எனக்கே மனசு கஷ்டமா இருக்கு. அவங்களுக்காக செஞ்சத பாராட்டா விட்டாலும் பரவாயில்ல. கிண்டல் பண்ணாம இருந்திருக்கலாம். சரி... நீ வருத்தப்படாதே. காலப்போக்குல எல்லாம் சரியாகிடும்,'' என, அவளுக்கு ஆறுதல் சொன்னாள், ஸ்ரேயா.
''இத்தனைக்கும் சமையல்ல ஒரு உதவியும் பண்றதில்ல. இவளும் நம்மள மாதிரி நாள் பூரா ஆபீஸ்ல வேலை பண்ணிட்டுதானே வர்றா. அவளுக்கும் கஷ்டமா இருக்குமே. உதவலாமேன்னு தோணாதா. செஞ்சத கிண்டல் பண்ண மட்டும் தெரியுது...''
''சரி விடு, கேன்டீன் போய், காபி சாப்பிட்டு வரலாமா? தலைவலியா இருக்கு,'' என்றாள், ஸ்ரேயா.
''சரி வா போகலாம்,'' என, இருவரும் கேன்டீன் நோக்கி நடந்தனர்.
அடுத்த நாள், பொங்கல் செய்திருந்தாள், ஸ்வேதா.
அகிலேஷ், ராகேஷ், ப்ரியா மூவரும், குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு வந்தனர்.
''என்ன ஸ்வேதா, பொங்கலா?'' என்றான், அகிலேஷ்.
''ஆமா, தெரிஞ்ச வரை பண்ணி இருக்கேன்,'' என்றாள், ஸ்வேதா.
சிரித்தபடி, பொங்கலை சாம்பாரில் தொட்டு வாயில் போட்டவன், ''யூ ட்யூப் பார்த்து தானே பண்ணின. இதை பொங்கல்னு சொல்லிடாத. இதுக்கு முன்ன பொங்கல் சாப்பிட்டிருக்கியா நீ?'' என்றான்.
அவன் சொல்ல, கிண்டலாக சிரித்தனர், ராகேஷும், ப்ரியாவும்.
''அண்ணா, வேணும்ன்னா இதுக்கு நாம வேற புது பேர் வைக்கலாமா?'' கேட்டாள், ப்ரியா.
''ம்... அரிசி கூழ்னு வைக்கலாம்,'' என்று அகிலேஷ் நக்கலாக சொல்ல, இருவரும் சிரித்தனர்.
ஸ்வேதாவுக்கு கோபமும், டென்ஷனும் உச்சந்தலைக்கு ஏற, மூவரையும் முறைத்தபடி, தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அறைக்குள் இருந்த ஸ்வேதாவின் காதில் விழும்படி, ''என்னண்ணா, இதை கரைச்சு தான் குடிக்கணும் போல...'' என்றான், ராகேஷ்.
வந்த கோபத்தை அடக்கி, ஆபீசுக்கு தயாரானாள்.
ஒரு வாரம் ஆபீஸ், 'டூர்' போய் முடிந்து வந்தபோது, ஸ்வேதா, ராகேஷ், ப்ரியா மூவருக்கும் டிரெஸ் எடுத்து வந்திருந்தான், அகிலேஷ்.
அதை பார்த்த ராகேஷ், ப்ரியா இருவரும் முகம் சுளித்தனர்.
''என்னண்ணா, நல்லாவே இல்லை...'' என்றான், ராகேஷ்.
''ஸ்கிரீன் துணி மாதிரி இருக்கு. உனக்கு, 'டிரெஸ் சென்ஸ்' சுத்தமா இல்ல அண்ணா...'' என்றாள், ப்ரியா.
''எங்களுக்காவது பரவால்ல. அண்ணியோட கலருக்கு இது செட்டே ஆகாது. நல்லாவே இல்ல, ரொம்ப மோசமா இருக்கு அண்ணா,'' என்றான், ராகேஷ்.
அகிலேஷுக்கு மனது வருத்தமாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து வாங்கி வந்திருந்தான். விலையும் அதிகம்.
''என்ன அண்ணி, நீங்க ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க. உங்களுக்கு டிரஸ் பிடிச்சிருக்கா?'' என்றாள், ப்ரியா.
''ம் ரொம்ப நல்லாருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன், உங்க டிரஸ்சுக்கு என்ன... அதுவும் சூப்பரா தானே இருக்கு. ஏன் பிடிக்கலைன்னு சொல்றீங்க?'' என்றாள், ஸ்வேதா.
''அண்ணி என்ன சொல்றீங்க?'' புரியாமல் கேட்டான், ராகேஷ்.
''ஆமா ராகேஷ், பச்சை கட்டம் போட்ட சட்டை டிசைன், உன் கலருக்கும், உயரத்துக்கும் அட்டகாசமா இருக்கும். அதுக்கு, 'மேட்சிங்'கா கருப்பு பேன்ட் பக்கா காம்பினேஷன்ல அசத்தும். வேணும்ன்னா நீ போட்டுப் பாரேன்,'' என்றாள்.
''அப்படியா சொல்றீங்க?''
''அட ஆமா. ப்ரியா, இந்த ரோஸ் கலர் சுடி உனக்கு பாந்தமா இருக்கும். போட்டுப் பாரேன்,'' என்றாள்.
அவர்களின் முகங்களில் ஒரு நம்பிக்கை தெரிந்தாலும், குழப்பத்துடனேயே டிரஸ்களை எடுத்து, தங்களின் அறைகளுக்கு சென்றனர்.
அவர்கள் போன பின், அவளை அணைத்து, ''ரொம்ப தேங்க்ஸ் ஸ்வேதா... நீ மட்டும் நல்லா இல்லைன்னு அவங்களுக்கு, 'சப்போர்ட்'டா பேசி இருந்தா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். அவங்க சொன்ன பின்பு தான் அது நல்லா இல்லைன்னு எனக்கே படுது. ஆமா, உனக்கு பிடிச்சிருக்கா?'' என்றான்.
''உண்மைய சொல்லவா?''
''ம் தாராளமா.''
''அவங்க சொன்னது தான் கரெக்ட். சுத்தமா ஒண்ணு கூட நல்லா இல்ல. பணம் வேஸ்ட்...'' என்றாள்.
''எனக்கும் இப்பதான் புரியுது. ஆனா, அவங்க முன் ஏன் அப்படி சொன்ன?''
''அவங்க ரெண்டு பேரும் அதை துணியா தான் பார்த்தாங்க. ஆனா, நான் அதுல, உங்க அன்பை பார்த்தேன். நமக்காக ஒருத்தங்க கஷ்டப்பட்டு ஒண்ணு செய்யறப்ப, அதை பாராட்டலைன்னாலும் பரவாயில்ல. குறை சொன்னா, அது எவ்வளவு வலிக்கும்ன்னு எனக்கு தெரியும்.
''நம்ம பாசம், அக்கறை, அவங்க கண்ணுக்கு தெரியலையேன்னு எவ்வளவு வேதனைப்படும்ன்னு எனக்கு தெரியும். அவங்க குறை சொல்லலாம். ஆனா, அடுத்தவங்க முன்ன, என் புருஷனை நான் விட்டுக் கொடுக்க கூடாது; விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்.''
கன்னத்தில் நாலு அடி அடித்திருந்தாலும் அகிலேஷுக்கு அவ்வளவு வலித்திருக்காது. அந்த கணமே இறந்து விட்டதைப் போலிருந்தது அவனுக்கு.
இரண்டு நாட்களுக்கு பிறகு, பொங்கலுடன் சட்னி, சாம்பார் சாப்பிட்டனர்.
''அண்ணி, சாம்பார்ல உப்பு அதிகம் போட்டுட்டிங்க. வாயிலயே வைக்க முடியல,'' என்றாள், ப்ரியா.
''அண்ணிக்கு ஆபீஸ்ல வேலை அதிகம் ப்ரியா. சாம்பார்ல உப்பு அதிகம்னா, சட்னி சூப்பரா இருக்கு. அதை போட்டு சாப்பிடு,'' என்றான், அகிலேஷ்.
இப்படி சொன்னபோது, தன்னையே அவ்வளவு பிடித்திருந்தது அகிலேஷுக்கு.
க. ஆதவன்
