PUBLISHED ON : நவ 26, 2023

டி. ராஜன், மதுரை: தினமும் காலையில், 'குட் மார்னிங்' என, 'மெசேஜ்' அனுப்புபவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நம்மை மறக்காதவர்கள், நம் மீது அன்பு கொண்டவர்கள் என்றே நினைக்கலாம். எனக்கு, காலை, 4:15 மணிக்கே, திண்டுக்கல் வாசகி ஒருவர், 'குட் மார்னிங்' போடுவார். தினமும் காலை, சரியாக, 5:00 மணிக்கு, எழுத்தாளர் ஒருவர், 'குட் மார்னிங்' போடுவார். மொத்தம், 20க்கும் மேற்பட்ட, காலை வணக்க, 'மெசேஜ்'கள் வரும்!
கே. பாலா, நெல்லை:என் நண்பன், போலியானவனாக எனக்குத் தெரிகிறானே...
வேண்டவே வேண்டாம் அவரின் நட்பு. போலியான நண்பன், ஆயிரம் பகைவர்களை விட மிக மிக மோசமானவன். எனவே, போலியான நட்பை, 'கட்' செய்து விடுங்கள்!
* க. சித்தார்த், சென்னை: முதல்வர் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லையே... ஏன்?
சிறுபான்மையினர் கோபித்துக் கொள்வரோ என்ற பயம் காரணமாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் ஓட்டு தான் இவரை பதவியில் உட்கார வைத்துள்ளது என்பதையும், அவர், மனதில் கொள்ள வேண்டும்!
கே. உதயகுமார், மதுரை: பதவியா, பணமா, செல்வாக்கா... இவற்றில் எது என்னை உயர்த்தும்?
இவை மூன்றுமே இல்லை. உண்மை, அடக்கம், தனி மனித ஒழுக்கம் மற்றும் உழைப்பு ஆகியவையே, உங்களை உயர்த்தும்!
* கே. சக்ரபாணி, சென்னை: கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர் - நடிகையர், கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். ஆனால், இயற்கை பேரிடர் மற்றும் பெரிய விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, எந்த நிதியும் அளிப்பதில்லையே... இது, எதைக் குறிக்கிறது?
அவர்களுக்கு அரசியலில், 'இன்ட்ரஸ்ட்' இல்லை என்பதையே குறிக்கிறது!
ரெஜினா பேகம், நாகர்கோவில்: அ.தி.மு.க., பழனிசாமி, கடைசியில், 'லெட்டர் பேடு' கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை உருவாகி விட்டதே...
எல்லாம் நேரம் தான் காரணம்! காலம், அவருக்கு தக்க பாடம் கற்பிக்கும்!
ரா. இளங்கோ, மதுராந்தகம்: 'விளையாட்டு பாட வேளையை கடன் வாங்குவதை ஆசிரியர்கள் கை விட வேண்டும்...' என்று, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் வேண்டுகோள் சரியா?
உதயநிதி அமைச்சரானதிலிருந்து, உருப்படியான வேண்டுகோளும், பேச்சும் வெளிவந்திருப்பது, இது தான் முதன் முறை!
கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களே இதைச் செய்கின்றனர். மாணவர்களுக்கு, விளையாட்டும் முக்கியம் என்பதை, அவர்கள் உணர வேண்டும்!
