PUBLISHED ON : நவ 26, 2023

மனைவி மங்களாவிற்கு உடல் நலம் சரியில்லை. அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரைக் கண்டு பதறி, ''என்னம்மா பண்ணுது, மருத்துவமனைக்கு இப்ப போயிடலாம். நான் இருக்கேன்,'' என்றார், கேசவன்.
ஒரு வறண்ட சிரிப்பு அவளிடமிருந்து எட்டிப் பார்த்தது.
''என்ன மங்களா, ஒரு மாதிரி சிரிக்கிற?''
''இந்த முறை, நான் திரும்ப வீட்டுக்கு வர வாய்ப்பு இல்லை. என்னை, மெதுவா பூஜை அறைக்கு கூட்டிக்கிட்டு போங்க,'' என்றாள்.
அவளைப் பரிதாபமாக பார்த்தார், கேசவன்.
பூஜை அறையில் இருந்த எல்லா கடவுளையும் தொழுதவள், ''இங்க பாருங்க, பூ வைக்கிறேன், மாலை போடறேன்னு, 'ஸ்டூல்'ல ஏறாதீங்க. யாரையாவது வரச்சொல்லி, கை எட்டும் துாரத்தில் படங்களை மாட்டி வைங்க. விளக்குல, வேஷ்டி படாம பார்த்துக்குங்க. பசங்களுக்கு சொல்லிட்டீங்களா?'' என்றாள், மங்களா.
''எதுக்கு சொல்லணும், உனக்கு, நான் இருக்கேன். நீ நினைக்கிறாப்ல, உனக்கு ஒண்ணும் ஆகாது,'' என, அவளுக்கு ஆறுதலுக்கு சொன்னாரே தவிர, உள்ளுக்குள் பரிதவிப்பு இருந்தது.
மருத்துவமனைக்குள் கார் நுழையும்போதே மயக்கமானாள். கேசவனுக்கு அழுகை முட்டியது. ஐ.சி.யு.,வில் அனுமதிக்க சொன்னார், டாக்டர்.
மகன்களுக்கு தகவல் கொடுத்தார், கேசவன். ஒருவன், ஆஸ்திரேலியா. இன்னொருவன், யு.எஸ்.,சில் இருக்கிறான்.
இரண்டாம் நாள், மங்களம் கண் விழித்து, கேசவனிடம் பேச ஆசைப்படுவதாக நர்சிடம் கூறினாள். எட்டு வயது சிறுவன் போல ஓடி, மங்களம் அருகில் நின்றார், கேசவன். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
''இங்க பாருங்க, நாம ஆரம்பத்தில், ஆஸ்திரேலியா, யு.எஸ்., போய் வந்துக்கிட்டு தான் இருந்தோம். இனி, நம்மால அங்க போய் இருக்க முடியாதுன்னு ஆயிடிச்சு. இப்ப நானும் போயிட்டா, நீங்க, தனியா அந்த வீட்டில் இருக்காதீங்க.
''துணைக்கு, நமக்கு யாரும் இல்லை. 'ஓல்ட் ஏஜ் ஹோம்' போயிடுங்க. அங்க நிறைய பேர் இருப்பாங்க. உங்களுக்கும், தனியா இருக்கோம்ன்னு தோணாது. வீட்ல, பேச யாரும் இல்லாம வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க வேணாம்.''
''அதெல்லாம் பின்னாடி பேசிக்கலாம். உனக்கு ஒண்ணும் ஆகாது.''
''நான் உங்களுக்கு, அங்கே ஒரு, 'சர்ப்ரைஸ்' வச்சுருக்கேன்.''
''என்னது?''
''நீங்க நான் சொல்லற, 'கங்கா ஓல்ட் ஏஜ் ஹோம்' போய் தங்கணும். இது, என்னோட விருப்பம். 'விசிட்டிங் கார்டு' என் கைப்பையில இருக்கு.''
மகன்கள் வரும் வரை காத்திருந்து, அவர்களிடமும், தன் எண்ணத்தை சொல்லி முடித்த அடுத்த சில நிமிடங்களில், இறந்து போனாள், மங்களம்.
'அப்பா, நீங்க எங்க கூட வந்து இருக்கலாமே... எங்களால தான் வர முடியாதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்...' என்றனர், இரு மகன்களும்.
''தெரியும்பா. உங்க அம்மா எடுத்த முடிவு சரி தான். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னை பார்க்க, ஓடி ஓடி வர வேண்டாம். முடியும் போது வாங்க. வாரம் தவறாம, 'வீடியோ கால்' பண்ணுங்க. அது போதும்,'' என்றார், கேசவன்.
ரொம்ப முக்கியமான பொருட்களை, மகன்களிடம் ஒப்படைத்தார். ஏற்கனவே வீட்டை விற்று விட்ட பணத்தையும், மனைவியின் நகைகளையும் மகன்களுக்கு பிரித்து கொடுத்தார்.
ஐந்து பவுன் தாலி செயினை, 20 ஆண்டுகளாக, வீட்டில் வேலை செய்த, கோமதிக்கு கொடுத்தார். கல்யாண வயதில் அவளுக்கு ஒரு பெண் இருந்தாள். மகன்களும், தலா, 50 ஆயிரம் ரூபாய், அவளுக்கு கொடுத்தனர். நிறைய வீட்டு பொருட்களும், கோமதிக்கு கிடைத்தது.
மங்களம் சொன்ன, 'கங்கா ஓல்ட் ஏஜ் ஹோம்' அருமையாக இருந்தது. மனைவியின் பக்தி புத்தகங்கள் மற்றும் அவள் நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த தாலியை எடுத்து வைத்துக் கொண்டார்.
சுடு தண்ணீர் வைத்துக் கொள்ள, சின்ன சமையல் அறை. நேரா நேரத்திற்கு உணவு, அறைக்கே வந்து விடும். பெரிய ஹாலும், அருகிலேயே ஒரு பெரிய படுக்கையறை, கழிவறை எல்லாம் இருந்தன.
ஜன்னலிலிருந்து பார்த்தால், 'பீச்' தெரிந்தது. மங்களம் எப்போ இப்படி ஒரு இடத்தை கண்டுபிடித்தாள் என, அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
'இதைத்தான் ஆச்சரியம் என்று சொன்னாளா!' என, நினைத்துக் கொண்டார், கேசவன்.
அதிகாலை, 'வாக்கிங்' சென்று, அறைக்கு வந்து விடுவார். காபி, டிபன் வேண்டும் என்றால், அறைக்கே கொண்டு வந்து தருவர். இல்லாவிட்டால், 'டைனிங் ஹால்' சென்று சாப்பிடலாம். ஒரு வாரம் போனதும், ரொம்பவே போர் அடிக்க, 'டைனிங் ஹால்' சென்று சாப்பிட்டு வரலானார்.
மூன்றாம் நாள் மதியம், சாப்பிட்டு கை கழுவ சென்றார். அப்போது, அங்கே கையை கழுவிக் கொண்டிருந்த பெண்மணி, தெரிந்தவர் போல தோன்ற, அருகே சென்று பார்த்தார்.
அது, காயத்திரியே தான். அதற்கு மேல் பல்வேறு உணர்ச்சி எண்ணங்கள் அலை மோதியதால், வேக வேகமாக அறைக்கு வந்து விட்டார். வியர்த்துக் கொட்டியது.
கிராமத்தில், ஏழை பெண்ணாக இருந்தாலும், படிப்பில் படு சுட்டியாக இருந்தாள், காயத்திரி. கேசவன் வீட்டிற்கு எதிர் வீடு அவளுடையது. ஒன்றாக விளையாடி, பருவம் வந்ததும், சற்று இடைவெளி விழுந்தது.
இருவருக்கும் இடையே பூத்திருந்த காதல், நின்று நிதானமாக வேர் விட்டு வளர்ந்தது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், அவர்களது காதல், அவர்களை தவிர, வேறு யாருக்கும் தெரியவில்லை.
வேலை தேடி, கேசவன், டில்லி சென்று விட, நல்ல பணக்கார வரன், காயத்திரியை பெண் கேட்டு வந்தது. அடுத்து, இரண்டு பெண்கள் திருமணத்திற்கு காத்திருந்த நிலையில், செலவு முழுக்க மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொண்டனர்.
கேசவனுடனான காதலை, சொல்லவும் முடியாமல், குடும்ப நிலையை நினைத்து, எதிர்த்து பேசவும் முடியாமல், உள்ளுக்குள் உடைந்து போனாள், காயத்திரி.
மூன்று மாதம் கழித்து கிராமத்திற்கு வந்தபோது, அதிர்ந்து போனான், கேசவன். காயத்திரியின் மீது கோபம் வரவில்லை. அவளது நிலைமை புரிந்தது. ஒரு வார விடுப்பில் வந்தவன், அடுத்த நாளே டில்லி சென்று விட்டான்.
காயத்திரி நினைவு வராமல் இருக்க வெறியுடன் படித்து, பதவி உயர்வுக்கான தேர்வுகள் எழுதி, உயர் பதவி அடைந்தான்.
அவனது அலுவலக நண்பரின் தங்கை, மங்களம். இவரை மிகவும் விரும்ப, முதலில் தயங்கியவன், அவளிடம், தன் முதல் காதலி பற்றி, விரிவாக எடுத்து சொன்னான். புரிந்து கொண்டவள், சம்மதம் சொன்னாள்.
வேக வேகமாக தன் அறைக்கு வந்து, கட்டிலில் அமர்ந்தார், கேசவன். பழைய நினைவுகளே மீண்டும் மீண்டும் வந்தது.
மங்களத்தின் புகைப்படத்தை பார்த்தார். மந்தகாச புன்னகையில் இருந்தாள், மங்களம். அவளது தாலியை எடுத்து தடவினார். அவளது நெஞ்சில், 50 ஆண்டுகளாக உரசிக் கொண்டிருந்த உணர்வற்ற பொருளின், உணர்வை உணர்ந்தார்.
மங்களம் விரும்பி படிக்கும், சீரடி சாய்பாபாவின் புத்தகத்தை எடுத்து பிரித்தார். இரண்டு மூன்று பக்கத்திற்கு பின், ஒரு கவர் இருந்தது. பிரித்துப் பார்த்தார். மங்களம், அவருக்கு எழுதிய கடிதம்.
அன்பானவருக்கு —
நான் உங்களுக்கு எழுதும் முதலும், கடைசியுமான கடிதம்...
கடிதம் எழுத வேண்டிய நிலைமை நமக்கு ஏற்படவே இல்லை. நாம் எப்போது பிரிந்தோம் கடிதம் எழுத. அன்பே, உங்கள் அன்பை வாரி வாரி வழங்கி இருக்கிறீர்கள்.
நாளுக்கு நாள் உங்கள் அன்பை பெற்றாலும், உண்மையில் அந்த காயத்திரி விட்டு சென்றதால் தான், உன்னத மனிதரான நீங்கள் எனக்கு கிடைத்தீர்கள்.
உங்களது அடுத்த பிறந்த நாளில், உங்களை, கங்கா முதியோர் இல்லம் அழைத்து வர எண்ணி இருந்தேன். சிறு வயது காதலியான, உங்கள் காயத்திரி என்னவானாள் என்று உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருந்திருக்கலாம். மிக சமீபத்தில், எனக்கு, காயத்திரி பற்றி தெரிய வந்தது.
உங்கள் துர்கா கோஷ்டம் கிராமத்தினர், தனியே ஒரு, 'குரூப் - பேஸ்புக்'கில் வைத்து இருப்பதை பார்த்தேன். அதில், நான், உறுப்பினர் ஆனேன். கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்களை சேகரித்தேன்.
காயத்திரிக்கு பிள்ளைகள் இல்லை. காயத்திரியின் கணவர், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதும், கங்கா முதியோர் இல்லத்தில் அவள் இருப்பதையும் தெரிந்து கொண்டேன்.
அதனால் தான், பழைய காதலியை சந்தித்தால், சந்தோஷம் ஏற்படுமே என்று நினைத்து, உங்களுக்கு, 'சர்ப்ரைஸ்' கொடுக்க நினைத்தேன்.
என் உடல் நிலை சரிவர இல்லாததால், கடிதமாக எழுதி வைத்து விட்டேன். என் உணர்வும் நீங்கள் தானே! கண்டிப்பாக இந்த கடிதம் உங்கள் கையில் கிடைக்கும்.
நான் இல்லாவிட்டாலும், உங்கள் காதலி இருக்கும் கங்கா முதியோர் இல்லத்திலிருந்து, மீதி நாட்களை சந்தோஷமாக கழியுங்கள். உங்களிடம் சொல்ல துடித்தேன். ஆனால், உணர்வு துடித்தாலும், மனது சொல்ல விடாமல் தடுக்க காரணம், நான் உங்கள் மீது வைத்துள்ள அளவு கடந்த காதல்.
— இப்படிக்கு,
என்றும் உங்கள்
மங்களம்.
புகைப்படத்தில், மந்தகாச புன்னகையை வீசிக் கொண்டிருந்தாள், மங்களம்.
ஆர். சுந்தரம்வயது: 62, படிப்பு: பி.காம்., பணி: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். சொந்த ஊர்: கோவை.இதுவரை, இவரது மூன்று சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.இவரது படைப்புகளுக்காக, பல்வேறு தமிழ் வார இதழ்களிலிருந்து பரிசுகள் பெற்றுள்ளார்.திரைப்பட இயக்குனராவது மற்றும் திரைக்கதை எழுத வேண்டும் என்பது, இவரது லட்சியம்.கதைக்கரு பிறந்த விதம்: வயதான கணவன் - மனைவி அன்னியோன்யமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பார்த்ததிலிருந்து உருவான கதைக் கரு இது.
