PUBLISHED ON : ஜன 01, 2012

**எம்.மாதவன், பிள்ளையார்பட்டி: 'கோடி கோடியாக பொருள் இருந்தாலும், நிம்மதி வேண்டும் வீட்டிலே!' - அந்த நிம்மதியை அடைவது எப்படி?
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், பொறுப்புகளை இறக்கி வைத்து விட வேண்டும்... குடும்பத்தினரின் அன்றாட வாழ்வில், ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைக்கக் கூடாது. நல்ல நூல்கள் படிப்பதில், ஆன்மிகத்தில், சேவையில் கவனத்தை திருப்ப வேண்டும். முக்கியமாக, மேலும் பணம், மேலும் பணம் என அலையக் கூடாது. மொத்தத்தில், ஒரு ஞானியின் பக்குவத்துக்கு வந்து விட்டால், நிம்மதிதான்!
***
*ஜி.வேலு, கோவிலூர்: தொலைக்காட்சிகளில் காண்பிக்கும் தொடர்கள், விளம்பரங்களுக்கு தணிக்கை உண்டா?
தூர்தர்ஷன் தவிர, வேறு எந்த தனியார் தொலைக்காட்சிக்கும் தணிக்கை கிடையாது. தூர்தர்ஷனிலும், 'இன்-ஹவுஸ்' தணிக்கைதான். தர்மத்துக்கு கட்டுப்பட்டு, அவர்களாகவே தணிக்கை செய்து கொள்வதுதான்! பணம் பண்ணுவதே பிரதான நோக்கமாகி விட்டதால், தனியார் சேனல்கள் நியாய, தர்மங்களை குழித்தோண்டி புதைத்து விட்டன!
***
*தி.பாலசுப்ரமணியன், காரனூர்: ஒரு நாவலாசிரியர், எழுதுவதை குறைத்துக் கொள்வது அவரிடம் உள்ள, 'கரு' பஞ்சமா, நேரமின்மையா?
இரண்டுமே இல்லாமல், மூன்றாவதாக, 'டிமாண்ட்' அற்றுப் போவதும் இயல்பே!
***
**எச்.ராகவன், ஆலங்குளம்: இந்திய அரசியல் சட்டம், வேடிக்கையாக இருப்பதாக நான் கருதுகிறேன்... சரியா?
வேடிக்கை மட்டுமல்ல, வினோத மாகவும், கேலிக் கூத்தாகவும், சில சட்டங்கள் உள்ளன. வெள்ளைக்காரன், 1800களில், தன்னைக் காத்துக் கொள்ள போட்ட தற்போதைய நிலவரத்துக்கு சற்றும் தேவையில்லாத அசட்டுத்தனமான சட்டத்தைக் கூட, இன்னும் பின்பற்றி வருகிறோம்... எந்த மகராசன் கண் திறந்து, விடிவு ஏற்படுத்த போகிறானோ!
***
*க.ரமா பிரபா, திருவல்லிக்கேணி: ஒரு மனிதனுக்கு நல்ல புத்தி எப்போது வரும்?
'தெரிந்தவர், அறிந்தவர், உறவினர்களுக்கு தகவல் சொல்லி விடுங்கள்...' என டாக்டர் சொல்லும் போது!
***
**து.செல்வராஜ், காஞ்சிபுரம்: எந்த காரியத்தையும், ஒத்தி போட்டுக் கொண்டே போகும் மனப்பக்குவத்தில் உள்ளேனே...
வெற்றி பெறுவோமா, தோல்வியை தழுவி விடுவோமா என்ற தயக்கம் தான் இதற்கு காரணம். இது மனக்கோளாறு... இதை மாற்ற, கடைகளில் மருந்து இல்லை! உறுதியான உள்ளத்தால் தான், தயக்கத்தை விரட்டி அடிக்க வேண்டும். தயங்கி தயங்கி செய்யும் செயல், உருப்படுவதில்லை!
***
*செ.ஜீவானந்தம், கோவை: மனிதனுக்கு துன்பமும், இன்பமும் எப்படி வருகின்றன?
தொகை குறையும் போது, துன்பம் வருகிறது; பகை குறையும் போது, இன்பம் வருகிறது!
***
