PUBLISHED ON : ஜன 01, 2012

இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு மதிய நேரம்... எழுத்தாள நண்பர் ஒருவரின் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு... 'பிரதர்... உங்க மச்சான் ஈரோடு பக்கத்துல, ஏதோ ஒரு ஊருல நடக்கிற இலக்கிய கூட்டத்துக்கு
போறேன்னும், திரும்பி வர நாலைந்து நாட்கள் ஆகும்ன்னும் சொல்லிட்டுப் போனாரு... ஒரு வாரமாச்சு... போன் கால் கூட இல்லே...' என, பயந்தபடி கூறினார்.
'கவலைப்படாதீங்க... இன்னும் ரெண்டு நாள் பார்ப்போம்... வரலன்னா, பேப்பர்லயும், 'டிவி' சேனல்களிலும், 'காணவில்லை' விளம்பரம் போடலாம்...' என ஜோக் அடித்தேன். திரும்பி வந்த எழுத்தாள நண்பர், ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கரையாம்பாளையம் என்ற ஊரிலுள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கியதாகவும், அந்த ஊரில் போன் வசதி ஏதும் இல்லாததால் தான், மனைவியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.
அந்த ஊரில் மொத்தமே, 10-15 வீடுகள், அதுவும் குடிசை வீடுகள் தான் என்றும், இயற்கை உந்துதல்களை, வெட்ட வெளியில், பாம்புகளின் நடமாட்டத்தினூடே முடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தவர்,
'ஆவியுடன் பேசினேன்பா...' என்றார்.
அருகே இருந்து இதைக் கேட்ட, வருமான வரித் துறை அதிகாரியான நண்பர், 'ஆ...' என வாயை பிளந்து, 'நானும் ஆவியுடன் பேசணும்... எங்கப்பா சாகும் போது, உயில் எழுதி வச்சிருக்கிறதா சொல்லிட்டு செத்தாரு... அதைக் காணோம்; அதைப் பத்தி கேட்கணும்...' என்றார்.
'ஓ... அதுக்கென்ன தாராளமா பேசலாம்...' என்றார்.
இப்படி சொன்ன நண்பர், கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர் என்பது தான் விசேஷம்... அதற்காக, தி.க., என்று எண்ணி விடாதீர்.
'அடுத்த முறை சேலம் போகும் போது, கண்டிப்பா எங்களையும் கூட்டிட்டு போகணும்... நாங்க அங்கிருந்து ஈரோடு போய்க்கிறோம்...' என, கோரிக்கை வைத்தார், வருமான வரித்துறை அதிகாரியான நண்பர்.
கடந்த வாரத்தில் நான் சேலம் கிளம்பும் போது, ஈரோடு மாவட்ட காவல் துறையினரின் பயிலரங்கம் ஒன்று, ஈரோட்டில் நடைபெறுவதாகவும், அதில், சிறப்பு சொற்பொழிவாற்ற, தன்னை அழைத்திருப்பதாகவும் எழுத்தாள நண்பர் கூறவே, 'அப்போ நாமெல்லாம் சேர்ந்து போய் விடலாம்... நீங்க சொன்ன மாதிரி, தப்பாட்ட இசையையும் கேட்டு விடலாம்...' என்றேன்.
பறை அடித்துக் கொண்டே, நடனமாடுவது தான் தப்பாட்டம் என்பது. கிராம விவசாய கூலிகள், இந்தக் கலையை இன்னும் காப்பாற்றி வருகின்றனர் என்பதை அறிந்த போது, அதைப் பார்க்கும் ஆவல் என்னுள் மேலோங்கி இருந்தது.
வெங்கரையாம் பாளையத்தில் இருந்து போலீஸ் வேனில் நான், எழுத்தாள நண்பர் மற்றும் வ.வ.து., நண்பர் ஆகியோர், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டோம். வழியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இறங்கி, டீ குடித்தோம்.
அங்கிருந்த கிராம மக்களுக்கு, எழுத்தாள நண்பரை பார்த்ததும், இலங்கை தீவிரவாதி என்று தோன்றி விட்டது போலும், அவர் காலில் பெரிய பூட்ஸ், காதில் கடுக்கன், ஜீன்ஸ்... இவற்றை, தீவிரவாதிகளின் யூனிபார்ம் என்று நினைத்து விட்டனர் போலும்...
சற்று தூரத்தில் நின்றிருந்த பொது ஜனங்கள், போலீசையும், எழுத்தாள நண்பரையும் காட்டி, காட்டி, 'தீவிரவாதி... தீவிரவாதி!' என, பேச ஆரம்பித்து விட்டனர்.
அருகே உயரமாக நின்றிருந்த, வ.வ.து., நண்பரை காட்டி, 'தீவிரவாதியுடைய வக்கீல்...' என பேசிக் கொண்டனர். நம்ம ஜனங்களுக்குத் தான் என்ன அதீத கற்பனை என நினைத்துக் கொண்டேன்.
பயிலரங்கத்தை அடைந்ததும், அதற்கு தலைமை வகித்த டி.எஸ்.பி., எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், 'ஆ... ஆங்... உட்காருங்க...' என, கடைசி வரிசையில் இருந்த ஒற்றை சேரை காட்டினார்.
பின்னர், எழுத்தாள நண்பரை பேச அழைத்தனர்.
'போலீஸ் என்றாலே எனக்கு பயம். காரணம், சிறுவயதில் சைக்கிளில் டபுள்ஸ் போகும் போது, பல போலீஸ்காரர்கள் துரத்தி இருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட போலீஸ் பயம், அப்படியே மனதில் உறைந்து விட்டது.
'நல்லவேளை, எம்.ஜி.ஆர்., தான், 'சைக்கிளில் டபுள்ஸ் போகலாம்...' என சட்டம் கொண்டு வந்து காப்பாற்றினார்...' என எழுத்தாள நண்பர் பேசிக் கொண்டிருந்ததை, அசிரத்தையாக கேட்டபடி உட்கார்ந்திருந்தனர் போலீஸ்காரர்கள்.
தொடர்ந்து பேசினார்... 'பெண்களுக்கு இழைக்கப்படும் பற்பல கொடுமைகள் பற்றி, என்னிடம், ஒரு பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கூறி, அதையெல்லாம் எழுதவும் சொல்வார்...'
அந்த பெண் போலீஸ் அதிகாரி பெயரைக் கேட்டதும் அசிரத்தையாக அமர்ந்திருந்த போலீஸ்காரர்கள், டி.எஸ்.பி., உட்பட விறைப்பாகி விட்டனர். அதன் பின், எழுத்தாள நண்பரது பேச்சு முழுவதையும் மிகச் சிரத்தையுடன் கேட்டனர்.
ஒரு வழியாக பேசி முடித்ததும் அலட்சியமாக, 'ஆ... ஆங்... உட்காருங்க...' என கூறிய டி.எஸ்.பி., ஓடி வந்து, 'உட்காருங்க ஐயா...' என்று படு மரியாதையாக அவரிடம் சொன்னாரே பார்க்கலாம்; பெயர் செய்த மாயம் இது என நினைத்துக் கொண்டேன்.
பிறகு, தப்பாட்டம் ஆரம்பித்தது. மொத்தம், ஐந்து பேர், ஒன்றரை மணி நேரம் பறையடித்துக் கொண்டே, 32 வகையான அடியும், அடவுகளும் நிகழ்த்தி காட்டினர். தப்படியால், அந்த பிராந்தியமே அதிர்ந்தது. சேரில், சும்மா உட்கார்ந்திருந்த நம்மையும், சேரில் ஆட வைத்தது.
திடீரென சாமி வந்தது போல ஆட ஆரம்பித்தார் ஒரு போலீஸ்காரர். தப்பாட்ட கலைஞர்களுக்கு, 'குஷி' பிறந்து விட்டது. பறையை பிளந்து கட்ட துவங்கினர். அதன் பின், பல போலீஸ்காரர்களும் எழுந்து ஆடத் துவங்கி விட்டனர்.
காதைப் பிளக்கும் இசையைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர், திடீரென நெஞ்சு வலி என கூறி மயங்கி சாய்ந்தார். 'ஹார்ட் அட்டாக்!' முதலுதவி அளிக்கப்பட்டு, அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தக் கூத்துகள் முடியும் போதே இரவு மணி, 8:00 ஆகி விட்டது. இனிமேல் தான், வெங்கரையான் பாளையம் சென்று, ஆவியுடன் பேச வேண்டும். ஆவியுடன் பேச, என்னையும் அழைத்தார், வ.வ.து., நண்பர்.
'உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேனே... அது போதாதா... எனக்கு, ஒரு ஆவி மீது தான் நம்பிக்கை... அது, இட்லியை அவிக்க பயன்படும் ஆவி...' எனக்கூறி, அவர்களை அனுப்பி வைத்தேன்.
எனக்குப் பேச்சு துணையாக பக்கத்து ஊர் வாத்தியார் ஒருவரை விட்டுச் சென்றனர். பரீட்சை நேரம் என்பதால், தேர்வுகள் பற்றி, அவருடன் பேச்சு கொடுத்தேன்...
'கிராமத்து சிறுவர்களின் கல்வியறிவு எவ்வளவு தூரத்தில் உள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு தப்பில்லாமல் தமிழ் எழுத வருகிறதா?' எனக் கேட்டேன். அதற்கு, 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தமிழை பிழையில்லாமல் எழுதுகின்றனர் என்று கூறினார்.
வீட்டினுள்ளே ஆவியை அழைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்க, வ.வ.து., நண்பர் வெளியே வந்து, எங்களுடன் பேச்சில் கலந்து கொண்டார்.
'அது சரி சார்... இது பரீட்சை நேரம்... காப்பியடிக்கும் பசங்களை பிடிக்காதீங்க சார்... ஏதோ அவங்க, +2 முடிச்சி, டிகிரி படிச்சாங்கன்னா, ஒரு குடும்பமாவது பிழைத்துக் கொள்ளும்...' என, அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே, தம் சட்டையின் உள் பையில் கையை விட்டு கத்தையாக, 'பிட்' பேப்பர்களை வெளியே போட்டார் வாத்தியார்...
'உங்க பாலிசி தான் சார் எனக்கும்... ஆனா, பிட் அடிச்சே, நூறு மார்க் வாங்க முயற்சி பண்ணும் மாணவர்களிடம் இருந்து, பிட்டுகளை பிடுங்கி விடுவேன். ஏதோ, பாஸ் மார்க் வாங்குகிற அளவிற்கு பிட் அடிக்க விடுவேன்...' என்றார்.
இதை கேட்கவே கேவலமாக இருந்தது எனக்கு. வாத்தியார் எடுத்துப் போட்ட, 'பிட்'டுகளை பார்த்தேன். குட்டி, குட்டியாக எழுதியிருந்தார், ஒரு பிட்டாளர்... இன்னொருவர், சிரமமே படாமல், பாட புத்தகத்தை ஜெராக்ஸ் மிஷின் மூலம் சுருக்கி, ஜெராக்ஸ் எடுத்திருந்தார்.
இதற்கு செலவழித்த நேரத்தை, உருப்படியாக படிக்க செலவிட்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே, வீட்டினுள் இருந்து ஒரு விதமான ஒலி கேட்கவே, நான் இடத்தை காலி செய்ய, வ.வ.து., நண்பர், வீட்டினுள்ளே ஓடினார்.
அப்போது மணி நள்ளிரவு, 12:00ஐ தாண்டி இருந்தது. நான் ரோட்டோரம் இருந்த டீ கடையில் அமர்ந்திருந் தேன். ஒரு மணி அளவில் வ.வ.து., நண்பரும், எழுத்தாள நண்பரும் அங்கு வந்தனர். நான் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. இருவர் முகமும் மெச்சிக் கொள்ளும் படியாக இல்லை.
அடுத்த நாள் காலை, நடந்தவற்றை விவரித்தார் வ.வ.து., நண்பர்.
ஆங்கில எழுத்துக்கள், 26ம் சாக்பீசால் கட்டம், கட் டமாக தரையில் எழுதப்பட்டிருந்ததாம். அது தவிர, 'எஸ்' -'நோ' என்ற இரண்டு கட்டமும், ஒன்று முதல், 10 வரை சில கட்டங்களும் இருந்தனவாம். எழுத்தின் மேல், ஒரு டம்ளரை கவிழ்த்து வைத்திருந்தனராம்.
ஏதோ ஒரு ஆவியை, மேற்படியார் வரவழைத்திருக்கிறார். அந்த ஆவியிடம், நண்பர் கேள்விகளை கேட்க, அந்த டம்ளர் நகர்ந்து, 'எஸ்' என்றோ, 'நோ' என்றோ அல்லது ஆங்கில எழுத்துக்களில் ஒவ்வொரு கட்டமாகச் சென்று பதில் கூறியதாம்.
இவரது தந்தை உயில் எழுதி வைத்தது உண்மை என்றும், அதை, எவரோ திருடி விட்டார் என்றும் கூறியதாம். ஆனால், திருடிய நபர் பற்றிய கேள்விக்கு பதில் வரவில்லையாம்.
கேள்வி கேட்ட இன்னொரு நபர், அவரது தாத்தாவின் ஆவியை கூப்பிட்டாராம். அந்த ஆவி வரவே இல்லையாம். பின்னர், அவரது தந்தையின் ஆவியை கூப்பிட்டாராம். அந்த ஆவி வந்து, கேள்விகளுக்கு பதில் கூறியதாம்.
இதையெல்லாம் கேட்கவே தமாஷாக இருந்தது.
***
