தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நானா போனதும் தானா வந்ததும்! (8)

நானா போனதும் தானா வந்ததும்! (8)

நானா போனதும் தானா வந்ததும்! (8)


PUBLISHED ON : ஜன 01, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் நண்பர் சுப்ரியா சாந்திலால், 'பத்மபூஷணி' என்ற கதாபாத்திரத்தை வைத்து, நிறைய வேடிக்கை கதைகள் எழுதியிருக்கிறார். அவர், முழு நேர எழுத்தாளர் அல்ல. அவரது தொழில் மருத்துவம். ஆனால், அவரது பெயரைச் சொன்னதும், 'ஓ... சுப்ரியா சாந்திலாலா? நகைச்சுவையாக எழுதுவாரே, அவரா?' என்று தான் பலரும் கேட்பர்.

அவரது சிறுகதைகளை தொகுத்து, புத்தகமாக, ஒரு பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

வெளியீட்டு விழா, அவரது ஊரான ராஜபாளையத்தில் நடைபெற்றது. புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பை எனக்கு தந்திருந்தார்.

அந்த வட்டாரத்தில், அவர் பிரபல மருத்துவரானதால், அவரிடம் சிகிச்சை பெற்றவர்களும், 'சிரி'ச்சை பெற்றவர்களுமாக ஏராளமான ரசிகர்கள், விழா அரங்கில் கூடியிருந்தனர்.

எழுத்தாளரின் - மருத்துவரின் இலக்கியத் திறமை, மருத்துவத் தொழில் சிறப்பு மற்றும் அவரது இதர கலை ஆர்வம் பற்றியும், ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், மேடைக்கு வந்து உற்சாகம் கொப்பளிக்க அடுத்தடுத்து பேசினர்.

தங்கள் ஊரைச் சேர்ந்த மருத்துவர், இவ்வளவு சிறந்த இலக்கியவாதியாக இருக்கிறாரே என்ற பெருமை, அவர்களது பேச்சில் கொப்பளிப்பதை என்னால் உணர முடிந்தது.

அன்று வெளியிடப்பட்ட, 'பத்மபூஷணி கதைகள்' புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதியிருந்தேன். சுப்ரியா சாந்திலாலை வெகுவாக அந்த முன்னுரையில் பாராட்டியிருந்தேன். அவரது நகைச்சுவையும், கதை அமைப்பும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

முன்னுரையின் கடைசி பாராவில், 'திரு.சுப்ரியா சாந்திலால் மிகச் சிறந்த நகைச்சுவையாளர். எனக்கு ஒரு வாரிசு கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது...' என்று எழுதியிருந்தேன்.

விழா மேடையில் வாழ்த்த வந்த ஒரு பிரமுகர், சற்று ஆவேசமாகவே வந்தார். அவர் கையில், 'பத்மபூஷணி' புத்தகம். அவர் மைக்கை பிடித்தார். ஆவேசமாக என் பக்கம் பார்த்தார். மைக்கில் பேசினார்; இல்லை கர்ஜித்தார். 'இனிமேல், இந்த பாக்கியம் ராமசாமி கதைகள் எழுதத் தேவையில்லை; எங்கள் மருத்துவரே எழுதித் தள்ளி விடுவார். வாரிசு ஏற்படுத்தி விட்டதாக ராமசாமியே சொல்லி விட்டார் வாரிசு வந்த பிறகு, அதை நியமித்தவருக்கு வேலை கிடையாது...' என்று முழங்கி, பலத்த கைத் தட்டல்களுடன் இறங்கி சென்று விட்டார்.

புத்தகத்தை வெளியிட வந்திருந்த என் பாடு, சங்கடமாகி விட்டது.

அரசியல் கூட்டத்தை போல அல்லவா, ரசிகர்கள் ஆவேசமாக இருக்கின்றனர்.

'டாக்டர் சாந்திலாலை பற்றி ஜாக்கிரதையாக இந்தக் கூட்டத்தில் பேச வேண்டும்...' என்ற பய உணர்வு கூட ஏற்பட்டது.

நகைச்சுவையாளராக மட்டுமல்ல, மண்ணின் மைந்தராகவும் டாக்டர் இருந்து வருகிறார் என்பது எனக்கு புரிந்தது.

***



நான் வேலை பார்த்து வந்த பத்திரிகை அலுவலகத்தில், யார் அதிக சுறுசுறுப்பு என்றால், ஆசிரியரே மகா சுறுசுறுப்பு.

அவரது உடம்பு களைத்தாலும், மூளை களைத்து நாங்கள் கண்டதில்லை. ஐடியாக்கள் ஊறிக் கொண்டேயிருக்கும். அவற்றைச் செயல்படுத்தும் கருவிகளே மற்றவர்கள்.

பொதுவாக பத்திரிகை அலுவலகங்களில், ஆசிரிய இலாகாவிலுள்ளவர்கள், சற்றுக் கர்வமாக நடந்து கொள்வர்.

அதுவும், சில பத்திரிகைகளில் ஆசிரியரே முதலாளியாக இருப்பார். அந்த மாதிரி, டூ இன் ஒன் ஆசிரியரின் கீழ் வேலை செய்கிற இலாகா, சற்று தெனாவட்டாகவே இருக்கும்.

விளம்பரம், சர்க்குலேஷன், அக்கவுன்ட்ஸ் இலாகா என்று பல இலாகாக்கள் இருந்தாலும், ஆசிரிய இலாகாவினரே அதிக முக்கியம் வாய்ந்தவர்களாக, தங்களை எண்ணிக் கொள்வர். (அவர்களாக எண்ணிக் கொள்வதை யார் தடுக்க முடியும்? கற்பனை வேறு ஏராளமாக இருப்பதால், சற்று அதிகமாகவே உயர்வாக நினைத்துக் கொள்வர்.) இதனால், மற்ற இலாகாக்களோடு, சிறு சிறு மோதல்கள் அடிக்கடி ஏற்படுவது உண்டு.

சர்க்குலேஷன் இலாகாதான், பத்திரிகை வினியோகத்துக்கு பாடுபடுவது. என்ன தான் மணக்க மணக்க மசால் வடை தயாரித்து விட்டாலும், அவற்றை விற்றால் தானே, மறுநாள் அதைத் தொடர்ந்து தயாரிக்க முடியும். ஆகவே, சர்க்குலேஷன் இலாகா தலைவர், தன் கையில் தான் ஆபீசே இருப்பது போல எண்ணி, எத்தனை பிரதிகள் விற்பனையாகிறது என்பதை தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைத்து மகிழ்வார்.

வெளியீட்டாளர், ஆசிரியர், மற்றப்படி தான், ஆகிய மூவருக்கு மட்டுமே அந்த ரகசியம் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்பி, சர்க்குலேஷன் விவர நோட்டை யாருக்கும் (முக்கியமாக உதவி ஆசிரியருக்கு) தெரிவிக்க மாட்டார்; நோட்டைக் காட்ட மாட்டார்.

'இதழை நாங்கள் தயாரிக்கிறோம். எங்களுக்கு சர்க்குலேஷன் விவர நோட்டைக் காட்டாமலிருப்பது அநியாயம்...' என்று, உதவி ஆசிரியர்கள் எரிச்சல் படுவது உண்டு.

ஆசிரியரே முதலாளியாக இருப்பதால், ஒரு நாள் அவரிடமே முறையிட்டு விட்டோம்.

சர்க்குலேஷன் நோட்டை (எத்தனை பிரதி விற்பனை என்பதை) எங்களிடமும் காட்ட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

ஆசிரியர் மென்மையாக சிரித்து, 'காட்டச் சொன்னால் போயிற்று...' என்று மேற்படி இலாகாவுக்கு உத்தரவு இட்டு விட்டார்.

தபால் வந்தவுடன், அனைத்து இலாகாக்களுக்கு உரிய தபால்களை அனைவரும் எடுத்துக் கொண்ட பிறகு, ஏஜன்ட் பெருமக்கள், தங்களுக்கு தேவையான பிரதிகள் எத்தனை என்பதை குறித்து எழுதியுள்ள கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஏற்ற இறக்கம் கணக்கெடுக்கப்பட்டு, மொத்தத்தில் இன்று பிளஸ்சா, மைனசா எத்தனை பிரதிகள் என்பது, கணக்கு எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.

ஆசிரியரின் உத்தரவுப்படி சர்க்குலேஷன் நோட்டு, எங்கள் பார்வைக்கு வரத் துவங்கியது.

முதல் நாள் ஒரே குதூகலம். அன்று, 1,400 பிரதிகள் அதிகம் தேவை என்பது பதிவாகியிருந்தது.

ஐஸ்கிரீம் வரவழைத்து உதவி ஆசிரியர்கள் குதூகலமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம், எதிர்பாராதவிதமாக, எங்கள் இலாகாவுக்கு வந்து விட்டார் ஆசிரியர்.

'என்ன செலிப்ரேஷன்?' என்றார்.

'ஹி... ஹி!' என்று பெருமையாக சர்க்குலேஷன் உயர்வு பற்றிச் சொன்னோம்.

ஒரு வாரம் கழித்து, சர்க்குலேஷன் நோட் வந்தது.

முதல் வாரத்தை விட, எழுநூறு பிரதி இறக்கம்.

எங்கள் உற்சாகமே போய் விட்டது. 'எதனால் இந்த இறக்கம்?' என்று முகத்தில் கவலையோடு, 'டல்' அடித்து இருந்தோம்.

ஆசிரியர் எங்கள் இலாகா வழியாக, தம் அறைக்குச் சென்றார். 'என்ன ஒரே டல்... விளக்கு கூட போட்டுக்கலை?' என்றார்.

மழுப்பினோம்... ஆனால், இலாகா மேஜையிலிருந்த சர்க்குலேஷன் நோட்டு காட்டித் தந்து விட்டது.

ஆசிரியர் மென்மையாகச் சிரித்தார்... 'ஓ... கொஞ்சம் மைனசா? போன வாரம் பிளஸ்; அதனால் ஐஸ்கிரீம். இந்த வாரம் மைனஸ்; அதனால் இருட்டோ? உங்க உற்சாகம் பாதிக்கப்படக் கூடாது என்று தான், சர்க்குலேஷன் இலாகா நோட்டை, உங்களுக்கு அவர்கள் காட்டாமல் இருந்தனர். நாம் பாட்டுக்கு எப்பவும் உற்சாகமாக வேலை செய்ய வேண்டுமே தவிர, பிளஸ், மைனசால் பாதிக்கப்படக் கூடாது...' என்று, எங்களுக்கு சமாதானம் கூறிச் சென்றார்.

வாழ்க்கை கூட பிளஸ், மைனஸ்களால் ஆனது தான். அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பவர்களே, வெற்றிகரமானவர்கள்.

— தொடரும்.



பாக்கியம் ராமசாமி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us