PUBLISHED ON : ஜன 01, 2012

நூலை போல சேலை!
நண்பருக்கு, பெண் பார்க்க சென்றிருந்தோம். பெண் வீட்டார் நன்கு உபசரித்தனர். பெண்ணின் தாயார் எங்களிடம் பேசும் போது, 'எங்க பொண்ணு மாநிறம் தான். நல்ல முறையில் வளர்த்திருக்கிறோம். புடிச்சா பாருங்க... இல்லேன்னா, எங்க உறவுக்கார பொண்ணுங்க ஜாதகத்தை தர்றோம். அதுல ஏதாவது புடிச்சிருந்தாலும் சொல்லுங்க... மாப்பிள்ளை, அழகாகவும், நல்ல உத்தியோகத்துலயும் இருக்காரு. அதனால தான், நம்ம புள்ளைக்கு இல்லாட்டாலும், நம்ம சொந்தத்துல நல்லது நடக்கட்டுமேன்னு சொல்றேன்...' என்று கூறினார்.
பெண்ணின் தாயார், இப்படி வெள்ளந்தியாக பேசினது, என் நண்பனுக்கு மிகவும் பிடித்து போனது. 'செவத்த பொண்ணு தான் வேணும்...' என, அடம் பிடித்துக் கொண்டிருந்த நண்பன், அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு, 'எந்தப் பொண்ணும் வேண்டாம்; உங்க பொண்ணையே கட்டிக்கிறேன். ஏன்னா, உங்க பொண்ணை நல்ல முறையில் வளர்த்திருப்பீங்கன்னு, உங்க பேச்சில் இருந்தே தெரியுது...' என்று சொன்னார்.
ஒளிவு மறைவில்லாத பேச்சுக்கு, எப்போதும் மகத்துவம் உண்டு என்பது தெளிவாக புரிந்தது.
— ÷ஷாபனா தாசன், நாட்டரசன் கோட்டை.
கற்ற பாடம்!
சமீபத்தில், என் வீட்டுக்கு பார்வையற்ற ஒரு இளைஞர் வந்து, 'நாற்காலி களுக்கு, ஒயர் பின்ன வேண்டியிருந்தால், பின்னித் தருகிறேன்...' என்றார். பார்வையற்ற அவருக்கு உதவியது போலிருக்குமே என்றெண்ணி, வீட்டில் இருந்த, இரண்டு நாற்காலிகளை பின்னுவதற்குக் கொடுத்தேன்; அவர், நாற்காலிகளை தூக்கிக் கொண்டு, வீதிக்கு சென்றார்.
'வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து பின்ன வேண்டியது தானே... ஏன் வீதிக்குப் போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நாற்காலிகளை வீதியில் போட்டு பின்னுவதை பார்த்தால், வீதியில் இருக்கும் மற்றவர்களும் ஒயர் பின்ன தருவர்...' என்று கூறினார்.
ஒயர் பின்னிக் கொண்டிருந்த போது, அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். 'ஒயர் பின்னி சம்பாதிக்கும் தொகையில், என் அண்ணன் வீட்டிலிருக்கும் அம்மாவுக்கு, மாதம், ஐநூறு ரூபாய் அனுப்புவேன். சமயத்தில், நேரில் சென்றும் கொடுத்துவிட்டு வருவேன்...' என்றார்.
பார்வையற்றவராக இருந்தாலும், அவரிடம் உழைத்து சம்பாதிக்கும் உறுதியும், வீதியில் போட்டு வேலை செய்தால், அதிக வேலை வாய்ப்பு வரும் என்ற வியாபார தந்திரமும், தன் வருமானத்திலிருந்து, தாய்க் கும் பணம் கொடுக்கும் பாச உணர்வும் இருந்ததை பார்த்த போது, 'ஒவ்வொரு வரிடமும், ஒரு பாடம் கற்றுக் கொள்ள முடியும்...' என, முன்னோர் கூறியதிலுள்ள உண்மையை உணர்ந் தேன்.
— டி.ஜெட்சன், சோலைசேரி.
சபரிமலை சுற்றுலாத் தலமல்ல!
அந்த காலத்தில், சபரிமலைக்கு செல்வதெனில், பயபக்தி மேலிட விரதம் இருப்பர்; கோவிலிலேயே தங்குவர். மனைவி கையால் கூட, சாப்பிட மாட்டார்கள். அப்படி ஒரு ஆச்சாரம், அனுஷ்டானத்தைக் கடைபிடிப்பர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி வருவதைப் பார்க்கும் போது, வருத்தமே மேலிடுகிறது.
சமீபத்தில், மின்சார ரயிலில் பயணிக்கும் போது, அதே பெட்டியில் பயணம் செய்த, ஐந்து இளைஞர்கள், அங்கிருந்த இரண்டு பெண்களை பற்றி, ஜாடை மாடையாக கமென்ட் அடித்துக் கொண்டிருந்தனர். அந்த இளைஞர்களில் இரண்டு பேர், சபரிமலைக்கு மாலை போட்டிருந்தனர். அவர்களும், அந்த கமென்ட்களை ரசித்தபடி நின்றிருந்தனர். ஒருவேளை, மாலை போடாவிடில், அவர்களும் கமென்ட் அடித்திருப்பர் போலும்!
சபரிமலைக்கு செல்ல, மாலை போடும் இளைஞர்களே...
மனதை கட்டுப்படுத்தும் திறமை இருந்தால், மாலை போடுங்கள்; இல்லையெனில், சபரிமலைக்கு செல்வதை தவிருங்கள். அலை பாயும் மனதோடு சென்று வர, சபரிமலை ஒன்றும் சுற்றுலாத் தலமல்ல!
— ரா.சாந்தகுமார், ஆவடி.
