PUBLISHED ON : பிப் 19, 2012

*எஸ்.குருலட்சுமி, நரிமேடு: உங்களிடம் என்ன மாடல் கார் இருக்கிறது?
என்னிடம் உள்ளது, ஒரு ஓட்டை, உடைசல் காயலான் கடை அட்லாஸ் மேக் சைக்கிள் தான் என்பது, ஊரே அறிந்த விஷயமாயிற்றே... தெரியாதா உங்களுக்கு!
***
** என்.ராமசாமி, சிவகாசி: மருத்துவத் துறையில், நம் நாடு நன்கு முன்னேறி விட்டது தானே?
நகரங்களை பொறுத்தவரை, 'ஆம்' என்று சொல்லித் தான் ஆக வேண்டும். கிராமப்புறங்களை இது, இன்னமும் எட்டி பார்க்கவே இல்லை. பிறந்து, நான்கு வாரத்திற்குள் உயிர் விடும் தளிர்கள், உலக அளவில் பார்க்கும் போது, மூன்றில் ஒன்று இங்கே நடக்கிறது என்கிறது, மத்திய சுகாதாரத் துறையின் குறிப்பு ஒன்று!
***
*எல்.அபிராமி, பி.என்.பாளையம்: இந்தியர்களின் உணவு பழக்கங்களில், மாறுதல் ஏதும் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளதா?
கடந்த, 25 ஆண்டுகளில், அசைவ உணவுப் பழக்கம் பணக்காரர்களிடம், 100 சதவீதமும், குறைந்த வருமான முள்ளவர்களிடம், 121 சதவீதமும் அதிகரித்துள்ளதாம்! இதே போல, பழ வகைகள் உண்பதும் முறையே, 163 மற்றும் 184 சதவீதமும் அதிகரித்துள்ள தாக, 'புட் பாலிசி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' கூறுகிறது.
***
*கே.ஹேமா, அவினாசி: அமெரிக்கர்களை விட, அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள், அதிகம் சம்பாதிப்பதாக என் தோழி கூறுகிறாளே...
உண்மைதான்... இங்கிருந்து சென்ற, 'புரொபஷனல்'கள், அமெரிக்கர்களை விட, அதிகமாகவே சம்பாதிக் கின்றனர். இந்தியரின் சராசரி ஆண்டு வருமானம், அங்கு, 23 லட்ச ரூபாய்; ஆனால், அமெரிக்கர்கள் சராசரியாக, 16 லட்ச ரூபாயே சம்பாதிப்பதாக அமெரிக்காவின் சென்சஸ் அமைப்பு கூறியுள்ளது!
***
* ஆர்.ராஜா, மதுரை: வேலையில்லாமல், வறுமைக் கோட்டில் உழலும் மக்களுக்கு, மறு வாழ்வு உண்டா?
'வேலை இல்லை' எனக் கூறு வதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை... நாட்டில் கொட்டிக்கிடக்குது வேலை... படிக்காத பாமரர் எல்லாம், தம் வயிற்றை கழுவிக் கொண்டு தான் உள்ளனர். 'பிரஸ்டிஜ்' பார்க்கும் படித்த வர்கள் தான், 'வேலை இல்லை' என புலம்பித் திரிகின்றனர். தாம் நிற்கும் கோபுரத்தை விட்டு, இவர்கள் இறங்கி வந்தால், நிச்சயம் வாழ்வு உண்டு!
***
*ஆர்.கோபால், சோமனூர்: எழுதுவதற்கு ஏற்ற நேரம் அதிகாலையா, இரவா?
இரண்டுமே தான்... ஆனால், இவ்விரு நேரத்திலும் தனிமை தேவை; அருகில் யாரும் இருந்து, 'தொணப்பி' கொண்டிருக்கக் கூடாது. பின்னணியில் அதிக ஒலி இல்லாமல், மேற்கத்திய இசைக் கருவியில், 'சிடி' ஓடிக் கொண்டிருந்தால், இன்னும் இனிமை! இவ்வளவு சுகத்தையும் எதிர்பார்த்தால், செய்தி பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது!
***
** கே.காளைராஜன், பம்மல்: உலகில் பிறப்பு விகிதம், குறைந்து வருவதாக படித்தேனே... அது பற்றி...
ஐரோப்பிய நாடுகளின் பிறப்பு விகிதம், கிடுகிடுவென குறைந்து வருகிறது. திருமணமானவர்கள், குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை; திருமணம் செய்யாமல், 'சேர்ந்து' வாழ்பவர்கள், 'தவிர்த்து' வருகின்றனர். வரும், 2050ம் வருடம், மனித சரித்திரத்தில், குழந்தைகளை விட, முதியோர் அதிகம் இருப்பர் என, ஐ.நா.,வின் மக்கள் தொகை தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.
***
*கே.சுந்தர், திருமழிசை: திருமணமான பின், 'செக்ஸ்' மீது இருக்கும் மோகம், குறைந்து போகும் என்கிறானே திருமணமாகிய என் நண்பன்!
மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள், உங்கள் நண்பரின் ஸ்டேட்மென்ட்டை நிரூபிப்பது போல் உள்ளது. திருமண மாகி, இரண்டு வருடங்கள் மிகுந்த வேகத்துடன் இருக்கின்றனராம்; மாதத்தில் சராசரியாக, 20 முறையும், ஐந்து வருட மாகும் போது, 15 முறையும், ஆறாவது ஆண்டிலிருந்து, 10வது ஆண்டுக்குள், இதுவே, 10 முறை என, தாம்பத்யம் கொள்வது குறைகிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி.
***
