தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பரீட்சை ரிசல்ட் வரும் நேரத்தில், பெயில் ஆகிப்போன பல பிள்ளைகள், வீட்டை விட்டு ஓடி விடுவர்...' என்றேன் குப்பண்ணாவிடம்.

'ஓடிப்போவது தான் போகட்டும்; துரைசாமியைப் போல், ஏதாவது ஒரு லட்சியத்துக்காக ஓடிப்போய் வந்தால் தேவலை...' என்றார்.

'புதிர் நெடி தாங்கலை; புரிகிற மாதிரி சொல்லுங்க...' என்றேன்.

'கோயம்புத்தூருக்குப் பக்கத்திலே கலங்கல், கலங்கல் என்று ஒரு கிராமம். அங்கே வீட்டுக்கு அடங்காத பிள்ளை துரைசாமி. அந்த ஊருக்கு முதன், முதலாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. மற்றவர்களெல்லாம், அந்த வண்டியில் வந்த வெள்ளைக்காரரைத் தான் பார்த்தனர்.

'அவர் ஒரு சர்வேயர்... சிறுவன் துரைசாமிக்கோ, அந்த மோட்டார் சைக்கிளின் மேல் கவனம். அது எப்படி ஓடுகிறது என்று ஆச்சரியம். துரைசாமிக்கு, எப்படியாவது அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்று கொள்ளை ஆசை.

'ஒரு கிராமத்துப் பள்ளிக்கூட பையன், வெள்ளைக்கார ஆபீசரிடம் போய், எப்படி தன் ஆசையை வெளியிடுவான்?

மனதுக்குள்ளேயே நினைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தான். கடைசியில் ஊரை விட்டே புறப்பட்டு விட்டான்...'

'எங்கே?'

'நேரே கோயம்புத்தூருக்குத் தான். அங்கு தான் அந்த வெள்ளைக்கார சர்வேயர் இருந்தார். அவர் எங்கிருக்கிறார் என்பதுதான் சிறுவனுக்குத் தெரியவில்லை. கையில் காசில்லை. வயிற்று பாட்டுக்கு வழி? கடைசியிலே ஒரு ஓட்டலில் டேபிள் கிளீனராக சேர்ந்து கொண்டான்...'

'சவுகரியமாய் போயிற்று. பலகாரங்கள் மிச்ச மீதியெல்லாம் கிடைக்கும்...' என்றேன்.

'மூன்று வருடங்கள் அதே இடத்தில் வேலை செய்தான். அந்த காலத்துக்குள் அவன் சேர்த்து வைத்த மூலதனம், 400 ரூபாய். சர்வேயரின் முகவரி தெரிய வந்தது. பணத்தைக் கொண்டு போய், அவர் காலடியில் வைத்தான். இளைஞனின் விடா முயற்சியைப் பாராட்டி, அந்த துரை, அவனுக்கு மோட்டார் சைக்கிளைக் கொடுத்து விட்டார்.

'உலகத்தையே விலைக்கு வாங்கிவிட்ட பெருமையோடு, மோட்டார் சைக்கிளுடன் துரைசாமி வெளியேறினான். நம்மைப் போன்றவர்கள் என்றால் அத்துடன் திருப்தி அடைந்து விடுவர்; ஆனால், துரைசாமி திருப்தி அடையவில்லை...

'மோட்டார் சைக்கிளை அக்கு வேறு; ஆணி வேறாக பிரிப்பதும், பூட்டுவதுமாக இருந்தான். அதன் நுணுக்கங்களையெல்லாம் தெரிந்து கொண்டான். மெக்கானிக்காக ஆகி விட்டான். பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான

இன்ஜினியர்களைத் தயார் செய்த, ஜி.டி.நாயுடு தான் அந்த துரைசாமி...'

'ஏன் குப்பண்ணா சார்... ஆணி என்றால், தெரிகிறது; அக்கு என்றால்?'

'மறை என்று ஒரு அர்த்தம் இருக்கிறது. போல்ட் வேறு, நட்டு வேறாக ஆக்கி விடுவார் என்று சொல்வதுதான் அது...' என்றார் குப்ஸ்.

***

'நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, சமூக பாடத்தை நடத்த, ஒரு ஆசிரியர் வந்திருந்தார். அவர் கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதிலை மாணவர்கள் சொல்லா விட்டால், 'இந்த குடிசைத் தொழில்கள் இங்கே வேண்டாம்...' என்பார்.

'அவரது பேச்சு எங்களுக்கு வெகு நாட்களாக விளங்காமலே இருந்தது. ஒரு நாள், ஒரு மாணவன், சம்பந்தா சம்பந்தமில்லாமல், வளர்த்து எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துக் காட்டி, 'இது மாதிரி கயிறு விடுதல், சரடு பின்னுதல், கூடை முடைதல்

எல்லாம், கட்டுரை நோட்டில் காட்டக் கூடாது. ஏனென்றால், இதெல்லாம் குடிசைத் தொழில்கள்!' என்று கூறிவிட்டு அவரும் சிரித்து விட்டார்...' என்றார் குப்பண்ணா... அவரே தொடர்ந்தார்...

'வெகு காலத்திற்குப் பின், அவரை ஒரு முறை சந்தித்த போது, நான் தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திய பிறகு, 'அடடே, நீதானா? சரி; இப்போது என்ன செய்கிறாய்?' என்று கேட்டார்.

'பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றேன். 'இப்போதும் குடிசைத் தொழில் தானா?' என்றார், சிரிக்காமல்...' சொல்லிவிட்டு சிரித்தார் குப்பண்ணா!

***

லென்ஸ் மாமாவின் மனைவி, தம் பிறந்த வீடு சென்று விட்டார்... மாமி இருக்கும்போது வெகு ஆச்சாரமாக நடந்து கொள்ளும் மாமா, அவர்

இல்லாத போது, வீட்டிலேயே அசைவம் சமைத்து விடுவார்.

மாமி வந்தபின் அசைவ வாசனை, பாத்திரங்களில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, கிச்சன் பரணில் மண்சட்டி பாத்திரங்கள் ஒரு செட், தனியாக, மாமிக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருப்பார்... மாமி ஊருக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், அப்பாத்திரங்கள், மீண்டும் பரணில் வாசம் செய்யச் சென்று விடும்!

அன்று அப்படித்தான்... 'மணி... வா... மீன் வாங்கி வரலாம்!' என அழைத்தார். தயக்கத்துடன் அவர் கூட சென்றேன்.

சென்னை மெரீனாவில், குயின்மேரிஸ் பெண்கள் கல்லூரியை ஒட்டி உள்ள சாலையில், அனைத்து வகை மீன்களும் பிளாட்பார கடை களில் கிடைக்கும்... அங்கு மீன் வாங்க, பென்ஸ் காரில் வரும் பார்ட்டிகளும் உண்டு.

மாமா, தனக்குப் பழக்கமான மீன்காரியின் பிளாட்பாரக் கடை முன் குந்தி, 'மீன் எப்படி செலக்ட் பண்ணணும் தெரியுமா?' எனக் கேட்டார் என்னிடம்.நான், 'திரு... திரு...' வென விழிக்க, அவர் சொன்னார்:

மீன்களின் கண்கள் நம்மையே முறைத்துப் பார்ப்பது போல் தெளிவாக இருக்க வேண்டும். மங்கலாகவோ, இயல்புக்கு மாறாகவோ காணப்பட்டால், அவை கெட்டு விட்டன என்று அர்த்தம்.

நல்ல பதமான மீனின் மாமிசம், அழுத்திப் பார்த்தால் கெட்டியாக, உறுதியாக இருக்கும்.

கெட்டுப் போன மீனோ, கொழ, கொழ என்று குழையும் தன்மை கொண்டிருக்கும்.

மீனின் முதுகெலும்பையொட்டிய மாமிசம் வெளிறித்தான் இருக்க வேண்டும்; சிவப்பாக இருக்கக் கூடாது. அது கெட்டுப் போன மீன். துண்டு துண்டாக வெட்டிய மீனில் இதைக் காணலாம்.

நல்ல மீனின் உடல் மேல், நாம் கை வைத்து அழுத்தி எடுத்தோமானால் அதன் மேல் ரேகைகள் பதியாமல் இருக்கும்.

நல்ல மீனின் அடிவயிறு பாகம் உறுதியாக இருக்கும்.

மீனின் செவுள்கள், செந்நிறமாக இருக்க வேண்டும்; நிறம் மாறியிருப்பின், மீன் கெட்டுவிட்டது என்று அர்த்தம்... என்று கூறியபடி, ஒரு கிலோ மீன் வாங்கினார்.

அதன் பின், அவர் வீட்டுப் பக்கம் இரண்டு நாள் நான் போகவே இல்லை!

***

என்சைக்ளோ பீடியா (தகவல் களஞ்சியம் அடங்கிய நூல்) பிரிட்டானிகாவில் பணியாற்றி வந்த ஒரு துணையாசிரியரை வேலை நீக்கம் செய்து விட்டனர். பழிக்குப் பழி வாங்கத் தீர்மானித்த அவர், வெகு சுலபமாக அதைச் செய்து விட்டார். எப்படி?

கம்ப்யூட்டரிடம் போனார். என்ஸைக்ளோ பீடியாவில், 'அல்லா என்று இருக்கும் இடத்தை எல்லாம் ஜீஸஸ் என்று மாற்று...' என்று ஓர் உத்தரவு பதிவு செய்து விட்டுப் போய் விட்டார்.

அவ்வளவுதான்! இந்தத் தவறுடனேயே கலைக் களஞ்சியம் அச்சாக ஆரம்பித்து விட்டது.

சில ஆயிரம் பிரதிகள் அச்சாகி விட்டன... யாரோ யதேச்சையாகக் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்ய, இயந்திரம் நிறுத்தப்பட்டது; ஆய்வில் விபரீதம் தெரிய வந்தது!

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us