தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நானா போனதும்; தானா வந்ததும்! (15)

நானா போனதும்; தானா வந்ததும்! (15)

நானா போனதும்; தானா வந்ததும்! (15)


PUBLISHED ON : பிப் 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடக்கமாக இருப்பது ரொம்ப உயர்ந்த குணம் என்று, எல்லாராலும் பாராட்டப்படுகிறது.

ஒரு காரியாலயத்தின் தலைவர் அல்லது முதலாளி அடக்கமானவராக, அதாவது ரொம்ப ஆடம்பரமோ, படாடோபமோ இல்லாமல் இருந்து தொலைத்து விட்டால், கீழே உள்ள சிப்பந்திகளின் பாடு, ரொம்ப பேஜாராகி விடும்!

பெரியவர் ரொம்ப எளிமையாக, காலில் செருப்புக் கூட இல்லாமல் நடப்பவராக இருந்தால், அவர் கீழே வேலை பார்க்கும், அவரது காரியதரிசி, அவரை விட எளிமையாக நடந்து கொண்டால் தான் நன்றாயிருக்கும்.

ஆனால், பரிதாபத்திற்குரிய அந்த சிப்பந்திக்கு, சம்பளம் என்னவோ அதிகமாய் இருக்கும். ஆனாலும், அவரால் பேன்ட், ஷூ போட்டு, டக் டக் என்று சத்தத்துடன், ஆபீசுக்குள் நடக்க முடியாது. அவரும் வேட்டி கட்டி, காலில் செருப்பில்லாமல் தான் வர வேண்டியிருக்கும். முதலாளி, எட்டு முழ வேட்டி கட்டினால், அந்தச் சிப்பந்தியோ, காரிய தரிசியோ, நாலு முழ வேட்டி கட்டி வருவதே, தன் வேலைக்குப் பாதுகாப்பு என்று நினைப்பர்.

அடக்கமாக இருப்பது நல்ல குணம். ஆனால், அந்த நல்ல குணத்தால், ஒருத்தருக்குக் கிடைக்க வேண்டிய புகழும், பாராட்டும் கிடைக்காமல் போய் விடுவதும் உண்டு.

என் கடைசி மைத்துனன் திருமணத்திற்கு, பல பிரமுகர்கள் வந்திருந்தனர். அவர்களுடைய வருகையெல்லாம், எனக்குப் பெருமை தரவில்லை.

என்னுடைய ஆசிரியரும், வெளியீட்டாளரும் என் அழைப்பை மதித்து, மணமக்களை ஆசீர்வதிக்க வந்திருந்தனர். அவர்களுடைய வருகை, எனக்கு மிகுந்த பெருமையையும், கர்வத்தையும், மதிப்பையும் தந்தது.

ஒரு மாபெரும் பத்திரிகையின் ஆசிரியரும், வெளியீட்டாளரும், இந்த சாதாரண சிப்பந்தியின் அழைப்பை ஏற்று, வருகை தந்திருக்கின்றனர். நான் பூரித்துப் போனேன். அது சாதாரண பூரிப்பா... சோளா பட்டூரா அளவு பிரமாண்ட பூரிப்பு.

'எடிட்டர் வந்திருக்கிறார்... எடிட்டர் வந்திருக்கிறார்!' என்று எல்லாரிடமும், ஓடி ஓடிச் சென்று கூவினேன்.

ரிசப்ஷனுக்கு சற்று முன்னதாகவே எடிட்டரும், பப்ளிஷரும் வந்திருந்தனர். ஆகவே, அவர்களை நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, என் குதூகலத்தை, மற்றவர்களுக்கு வேகமாக பரப்பிக் கொண்டிருந்தேன்.

என் பெருமை, முக்கியமாக, என் புது சம்பந்திக்கு தெரிய வேண்டுமே... ஆகவே, அவர் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்று, 'எங்க எடிட்டர் வந்திருக்கார். வாங்க... வாங்க...' என்று பதறினேன்.

அவர், என் பதற்றத்துக்கு உரிய மரியாதை கொடுத்து, (புது சம்பந்தியாச்சே) என்னுடன் விரைந்து வந்தார்.

பாவம், அவர் கற்பனையில் எடிட்டர் என்றால், ஒரு ஜெக ஜோதி, தேவ புருஷனாக நின்று கொண்டிருப்பார் என்று நினைத்தார் போலும்.

எங்க எடிட்டர், ஒரு எளிய அரைக்கை கதர் சட்டையும், நாலு முழ வேட்டியுமாக நின்று கொண்டிருந்ததை, அவரது கண்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. வேறு எங்கோ, யாரையோ கற்பனை செய்து கொண்டு தேடினார்.

நான் சும்மா இருக்கக் கூடாதா... அவர் கையைப் பற்றி இழுக்காத குறையாக, எடிட்டருக்கு முன்னால், ஒண்ணரை அடி தூரத்தில், இட்டாந்து நிறுத்தினேன்.

அவர் எடிட்டரைப் பார்த்து, எந்தவித வியப்போ, மகிழ்ச்சியோ படவில்லை. நான் பரபரப்புடன், 'எங்க எடிட்டர்... எங்க எடிட்டர்!' என்றேன்.

தன் பிரமையிலிருந்து விடுபட்டவர் போல, எடிட்டரைப் பார்த்து சாதாரணமாக, 'நமஸ்காரம்!' என்றார் சம்பந்தி.

எனக்கு ஒரே ஏமாற்றம்.

'குமுதம் ஆசிரியர்...' என்றேன்.

சம்பந்தியிடம், எந்த ஆச்சரியமும் இல்லை. அதை விட அபத்தமாக, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். 'குவார்ட்டர்சிலே உங்களோட தானே குடியிருக்கார்?' என்றார்.

எனக்கு மூச்சே நின்று விட்டது போல ஆயிற்று.

தமிழகத்திலேயே புகழ்பெற்ற வாரப் பத்திரிகையின் ஆசிரியர்; கோடீஸ்வரர்! அவரை சர்வ சாதாரணமாக, ஒரு வினாடியில் எங்கள் குடியிருப்பில் கொண்டு வந்து, குடித்தனம் வைத்து விட்டார்.

ஹூம்... அடக்கத்துக்குக் கிடைத்த மரியாதை; என்ன செய்வது?

நான் விடவில்லை; புரியாதவர்களுக்குப் புரிய வைக்கத் தானே வேண்டும். ஆகவே, சம்பந்தியிடம் கொஞ்சம் அழுத்தமான குரலில், 'எங்க எடிட்டர் சார்!' என்றேன்.

அவரிடம் எந்த மாறுதலு<ம் இல்லை. 'அதான் சொன்னீங்களே!'

அவருக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. 'குமுதத்துக்கே எடிட்டர்... எங்கள் அத்தனைப் பேருக்கும், வீடு கட்டி கொடுத்திருக்கார். நாங்க இருக்கிற, எங்கள் குவார்ட்டர்சிலே இவர் இல்லை; இவருடையது வேப்பேரியில பெரிய பங்களா!' என்றேன்.

என் சம்பந்தி, அதற்கும் ஆச்சரியப்படவில்லை.

ஒரு, 'ஓஹோ...' மட்டும்.

நான் விடுகிறவனாய் இல்லை. 'மொத்த குமுதமும், பிரஸ்சும் இவரோடதுதான்...' என்றேன்.

அதற்கும் சம்பந்தி ஆச்சரியப்படவில்லை.

அடுத்த அஸ்திரத்தை, பிரம்மாஸ்திரத்தை, உபயோகப்படுத்தினேன்.

'பர்மாவிலே, பாதி பர்மா இவருடைய முன்னோர்கள்ட்டே தான் இருந்தது!'

அதுக்கும், சம்பந்தி ஆச்சரியப்படவில்லை.

'பதினைந்து நாவல் எழுதியிருக்கிறார்...' என்று இலக்கிய அஸ்திரம் விட்டேன்.

அதற்கும் சம்பந்தி அசரவில்லை. 'ஓஹோ...' என்றார்.

ஏண்டாப்பா, இவரிடம் எடிட்டரை அறிமுகப்படுத்தினோம் என்றாகி விட்டது எனக்கு.

அதற்குள் யாரோ கூப்பிட்டனர் என்று, சம்பந்தி பரபரப்புடன் நகர்ந்தார்.

சில நிமிஷம் சென்றதும், வயசான ஒரு ஆசாமியை, முக்கால் செ<ஞ்சுரி அடித்தவரை, கைப்பிடியாக அழைத்துக் கொண்டு, என்னிடம் வந்தார். முகமெல்லாம் பெருமிதம், வழிந்தோடியது குதூகலம்!

வந்தவர், 'தேமே' என்று நின்று கொண்டிருந்தார்.

அவரை சம்பந்தி, என்னிடம் நெருக்கமாக அழைத்து வந்து, பரபரப்பான குரலில், 'எங்க ஆடிட்டர்... மதுரையில் கோ - ஆபரேடிவ் சொசைட்டியில், நான் வேலை செய்து கொண்டிருந்தப்போ, சார் தான் எங்க இன்டர்னல் ஆடிட்டர்...' என்று, படு மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்தார்.

நான் பல்லைக் கடித்துக் கொண்டு, 'ஹும்...' கொட்டி விட்டு, வெடுக்கென்று அப்பால் சென்று விட்டேன்.

இப்படியாக என் முதலாளி கோடீஸ்வரராக, புகழ்பெற்ற பத்திரிகை ஆசிரியராக இருந்தாலும், அவரது மதிப்பை உணராத சம்பந்தி மேல் எனக்கு ரொம்ப எரிச்சல்.

ரொம்பவும் அடக்கமாக இருக்கக் கூடாது போலிருக்கு. எங்க எடிட்டர் வரப் போகிறார் என்பதை, காலை முதலே சம்பந்தியிடம் சொல்லி, அவரிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மாலை மரியாதை, கொட்டு முழக்கம் இவைகளுடன், அவரை வரவேற்றிருந்தால், சம்பந்திக்கு, 'ஓஹோ... இவர் ரொம்ப மதிக்கப்பட வேண்டியவர்...' என்று புரியுமோ என்னவோ!

பல பிரமுகர்களை பூரண கும்பத்துடன், மாலை, மரியாதை, மேள, தாளம் வைத்து வரவேற்பது, 'மேற்படி பிரமுகர் மரியாதைக்கு உரியவராக்கும், அவரை எல்லாரும் மதியுங்கள்' என்று, பிறருக்குத் தெரியப்படுத்துவதற்கே என்று, எண்ண வேண்டியிருக்கிறது.

தொடரும்.
பாக்கியம் ராமசாமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us