PUBLISHED ON : பிப் 19, 2012

அப்பா அடித்தாலும், அழுதாலும் அன்பென்றே அர்த்தம்!
மதுரையிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றின், சுயநிதிப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். சமீபத்தில் முதலாமாண்டு மாணவர்கள் இருவர், கல்லூரிக்குள் மோதிக் கொண்டனர். அடித்த மாணவனையும், அடிபட்ட மாணவனையும் அழைத்து, விசாரித்துக் கொண்டிருந்தோம்.
முதல் நாள் விசாரணை முடிந்திருந்த நிலையில், அடித்த மாணவன், அவன் வகுப்பைச் சேர்ந்த, அவனோடு சம்பந்தமில்லாத ஒரு மாணவிக்கு, 'உனக்காகத்தான் அவனை அடித்தேன்' என, ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்பியிருக்கிறான்.
மாணவி வீட்டில், பெரிய களேபரமாகி, அம்மாணவியை அடித்து, அவளை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு வந்து விட்டனர். மாணவனுடய திருட்டுத்தனத்தைப் புரிந்துகொண்டு, அவனுடைய தந்தையை அழைத்து வரச் சொன்னோம்.
ஆட்டோ ஓட்டும் அவனது தந்தை, கல்லூரிக்கு வந்து, விஷயத்தைக் கேள்விப்பட்டதும், மகனை வெளியே அழைத்து வந்து, எல்லா வகுப்பறைகளும் தெரியும் இடத்தில், அவனை நிறுத்தினார். பின், சரமாரியாக அவனை அடித்து, உதைக்க ஆரம்பித்தார்.
மகனின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அதைவிட அதிகமாக, அவன் தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அழுது கொண்டே அவனை அடித்துக் கொண்டிருந்தார்.
நாங்கள் ஓடிப்போய் அவரிடமிருந்து அவனைப் பிரித்து, அடியிலிருந்து மீட்டோம். தந்தை அழுது கொண்டே வெளியேறி விட்டார்.
'மகனை எல்லார் முன்னாலும், அடிக்கிறோமே...' என்ற தவிப்பிலும், 'தவறு செய்த மகனைக் கண்டிக்கத்தானே வேண்டும்' என்ற பொறுப்புணர்விலும், அழுது கொண்டே மகனை அடித்த தந்தை, எங்கள் எல்லாருடைய மனதிலும் தங்கி விட்டார்.
அன்பான மாணவ நண்பர்களே...
பெற்ற தாய், தகப்பனை, இப்படி எல்லார் முன்னாலும், அவமானப்பட வைக்கும் செயல்களை செய்யத்தான் வேண்டுமா? சிந்தியுங்கள்!
— பி.ஜி.கதிரவன், மதுரை.
தோழியின் தர்ம சங்கடம்!
என் தோழி, குடும்பத் தலைவி; அவள் கணவர், அரசு அலுவலகம் ஒன்றில், நல்ல பணியில் இருக்கிறார். கை நிறைய ஊதியம் வாங்கினாலும், உடை மற்றும் தோற்றத்தில், அவர் கவனம் செலுத்துவதில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தான், 'ஷேவ்' செய்வார். தொள தொள சட்டை, லூசான பேன்ட், சாதாரண செருப்பு என்று, ரசனையே இல்லாமல், உடை அணிவார். அலுவலகமோ, விழாக்களோ, இதே, 'கெட்-அப்' தான்!
தோழியோ, தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துபவள். விழாக்கள் என்றால், பட்டுப்புடவை அணிந்து, நகை போட்டு, கை நிறைய வளையல் மாட்டி, கெத்தாக, கவுரவத்துடன் போக ஆசைப்படுபவளுக்கு, தன் கணவரோடு அப்படி போக இயலவில்லை.
'சம்பாதிக்கிற அவரு, எம்புட்டு சிம்பிளா, சாதாரணமா இருக்காரு. வீட்டுல இருக்கிறது, எப்படி மினுக்கிக்கிட்டு வருது பாரு...' என்று, அவள் காது படவே பேசுவதாக, என்னிடம் சொல்லி வருத்தப்பட்டாள்.
'பேக்கு' மாதிரி வரும் கணவருடன், 'நீட்டாக' உடை அணிந்து, என் தோழி எப்படி போக முடியும்? மனதளவில் மிகுந்த உளைச்சலில் இருக்கிறாள். இவள் போல எத்தனை பெண்களோ?
கல்யாணமான ஆண்களே... உங்கள் மனைவியின் மனதை புரிந்து, சூழ்நிலை அறிந்து, நடந்து கொள்ளுங்களேன். அவர்களுக்கும், ஆசாபாசங்கள் இருக்கும் தானே!
— ஜே.ரூபி ஏஞ்சலின், கோவை.
என்னவென்று அழைப்பது!
என் மகளுடைய திருமணத்திற்கு வந்திருந்த பரிசுப் பொருட்களை, ஆர்வத்துடன் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவற்றில், சில பொருட்களின் பேக்கிங் பழுப்படைந்து காணப்பட்டன.
சில பொருட்களின் தேதி, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டவை என்பதைக் காட்டியது. உச்சக்கட்டமாக, ஒரு எவர்சில்வர் குடத்தில், முன்பிருந்த பெயரை அழித்து, பாலிஷ் செய்து கொடுத்திருந்தது தெரிந்தது.
தானம் கொடுத்த மாட்டை, பல்லைப் பிடித்து பார்க்கக் கூடாது என்பர். இருப்பினும், எப்போதோ நடந்த, தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்த பொருட்களை - தங்களுக்கு உபயோகமற்றவை எனத் தோன்றுவனவற்றை பிறருக்கு அன்பளிப்பாக வழங்குபவர்களை என்னவென்று அழைப்பது?
— த.கண்ணன், உத்தங்குடி.
