தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஏப் 08, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*சி.சிவசண்முகம், தொண்டாமுத்தூர்: மொபைல் போன் அவசியமானதா? ஆடம்பரமானதா?

பர்ஸ் கனம் கூடுதலாக உள்ளவனுக்கு அவசியமானது; பர்ஸ் கனத்தை கூட்ட நினைப்பவனுக்குத் தேவையானது; ஓட்டை பர்ஸ்காரர்களுக்கு தேவையில்லாதது - ஆடம்பரமானது.

***

*கி.ராதிகா மணி, பழவந்தாங்கல்: 'பிரமிட்' மற்றும் 'பெங்சுயி' வாஸ்து கருவிகளை வாங்கி, வீட்டில் வைத்தால் எல்லா பிரச்னைகளும் தீரும் என விளம்பரம் செய்கின்றனரே...

எல்லா பிரச்னைகளும் தீரும் அதை தயாரித்து விற்பவருக்கு! எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைந்து கொண்டிருக்கும் நம்மூர் ஏமாளிகள், இவற்றை வாங்க, கொட்டிக் கொடுக்கும் பணத்தால், தம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வர் வாஸ்து கருவி தயாரிப்பாளர்!

***

** வி.பாலாஜி, குறிஞ்சிப்பாடி: சிக்கனமாக இருப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

இதிலென்ன சந்தேகம்? மாதக் கடைசியில் செலவை சமாளிப்பது யார்? 25ம் தேதி தலையைச் சொரியும் கணவனுக்கு, பெருங்காய டப்பாவிலிருந்து பஸ் காசு கொடுப்பது யார்? சிந்தித்துப் பாருங்கள்!

***

*ச.ரமேஷ் குமார், ஞானஒளிவுபுரம்: ஆசையை அடக்க ஏதாவது வழி இருக்கிறதா?

மன உறுதி உள்ளவர்களால், ஆசையை அடக்க முடியும்! மதம் கொண்டு அலையும் யானையை போன்றது ஆசை; யானையை அடக்க மன உறுதி என்ற அங்குசம் இருந்தால் மட்டுமே முடியும்!

***

*கே.நடராஜன், செங்கல்பட்டு: வேலைக்குப் போகும் பெண்கள், வாழ்க்கைத் துணையை வெறுக்கிறார்களே... ஏன்?

வேலைக்கு போகும் பெண், கட்டுப் பெட்டியாக, தம் பேச்சை தட்டாதவளாக, தம் அடாவடிகளை சகித்து கொள்பவராக இருக்க வேண்டுமென கணவன்மார் பார்க்கின்றனர். வேலைக்குப் போய் நாலு, வெளி மனிதருடன் பழகி, உலகை, அதன் நடப்பை அறிந்து கொள்கிற பெண், கணவனின் அடக்குமுறைகளை வெறுப்பது நியாயம் தானே!

***

** எம்.அன்வர் அலி, பல்லடம்: ஏமாற்றங்களை சந்திக்காமல் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாதா?

தத்தி தத்தி நடக்கும் போது கீழே விழாமல் எந்த குழந்தையாவது நடை பழகிக் கொள்கிறதா?

***

*ரா.ராஜேஸ்வரி, மாம்பலம்: வர வர, 'டிவி' தொடர்கள் போரடிப்பது ஏன்?

முடிக்க வேண்டிய நேரத்தில் முடிக்காமல், ஜவ்வாக இழுத்தடிப்பது தான் முதல் காரணம்! மேலும், கதை பஞ்சம் வந்து விட்டது... சிரியல்களுக்கு குறிப்பிட்ட நாலைந்து பேர் மட்டுமே கதை எழுதுகின்றனர்... மிஷின் மாதிரி கதை எழுத கற்பனை ஊற்று வேண்டாமே?

***

** பி.கதிர்வேலன், செம்மண்டலம்: ஒருவனை, 'அறிவாளி' என அடையாளம் கண்டு கொள்வதெப்படி?

அறிவாளி, முட்டாள்களைக் கண்டு சிரிக்க மாட்டான், நல்ல நிலையை எட்டி விட்டதை எண்ணி துள்ள மாட்டான். இலை மறைத்த கனியாக இருப்பான்; முந்திரி கொட்டை போல மூக்கை நுழைத்து அவமானப்பட மாட்டான்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us