PUBLISHED ON : ஜூன் 10, 2012

'நான் கழுதையான போது...' என்ற நூல் ஒன்றை சமீபத்தில் (ரயில் பயணத்தில் தான்!) படிக்க நேர்ந்தது. எழுதியவர் வலம்புரி ஜான்.
அவர் சொல்கிறார்...
பத்திரிகைத் தொழிலுக்கு நான் வந்து இப்போது, 18 ஆண்டுகள் ஆகின்றன. என் முதல் வேலையே, 'தினமலர்' திருச்சி பதிப்பில் துணை ஆசிரியர் வேலை. மாதம் 100 ரூபா# சம்பளம். ராத்திரி வேலை. என் பேராசிரியர் வளனரசு அவர்களின் சிபாரிசு கடிதத்தோடும், அவர் தந்த ஐம்பது ரூபாய் பணத்தோடும், 'தினமலர்' நிறுவனர் ராமசுப்பையர் அவர்களை சந்தித்தேன்.
அன்று, மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி, 'டைம்' பத்திரிகையில் கட்டுரை வெளிவந்திருந்தது. அதை மொழி பெயர்க்குமாறு ராமசுப்பையர் அவர்கள் கூறி, என்னை சோதித்தனர்.
அதில், 'ஜீனியஸ்' என்று ஒரு வார்த்தை வந்திருந்தது. நான் அதை, 'மேதை' என்று மொழி பெயர்த்திருந்தேன்.
அதைப் பார்த்த ராமசுப்பையர் அவர்கள், 'ஜீனியஸ் என்றால், 'மேதை' என்று எப்படி வரும்? 'கற்றுத் துறை போகியவர்' என்றல்லவா வரும்?' என்று குறிப்பாக கேட்டார்.
நான், பேராசிரியர் வளனரசு அவர்களின் மாணவன் என்பதாலேயே அப்படிக் கேட்டார் என்பது எனக்குப் புரிந்தது.
'சாதாரண மக்களுக்கு விளங்க வேண்டும் என்பதற்காகவே, 'மேதை' என்ற சொல்லை போடுகிறேன்...' என்று சொன்னேன்.
அவர் சிரித்துக் கொண்டார்.
மறுநாளே வேலை கிடைத்தது.
இரண்டாவது முறையாக திருச்சி வந்தேன். முதன் முறை நான் திருச்சி வந்தது, 1953ல், என் சகோதரிக்கு கன்னியாஸ்திரி என்ற அந்தஸ்து கிடைத்தபோது.
திருச்சி தினமலர் நாளிதழில் சேர்ந்த ஒரே மாதத்தில் புலவர் இருதயராஜ் என்பவருக்கு பிழைதிருத்துபவராக வேலை வாங்கித் தந்தேன். இவர், இலக்கணத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறவராக அப்போது இருந்தார். 'ற்' வருகிற இடத்தில்,'ல்' வந்திருக்கிறது என்று, ஓடிக் கொண்டிருந்த மூன்றாவது பதிப்பை இடையில் நிறுத்தி விட்டார். காலையில் விடிந்ததும் எனக்கும், அவருக்கும் சேர்ந்தே போயிற்று — வேலை!
— இப்படியே பல சுவையான அனுபவங்களைக் கொண்டுள்ளது புத்தகம்!
***
வீறிட்டு அலறிக் கொண்டிருந்தது குப்பண்ணாவின் அடுத்த வீட்டுக் குழந்தை. அது, எங்கள் பேச்சுக்கு ரொம்ப இடையூறாக இருந்தது... 'அந்தக் குழந்தை மகா முரடு; ஒன்றுமில்லாததற்கெல்லாம் இப்படித் தான் கத்தும்...' என்று சமாதானம் சொன்னார் குப்பண்ணா.
'அதற்காக? இப்படியா கத்த விடுவர்! பெற்றவர்களுக்குக் குழந்தையை அடக்கத் தெரிய வேண்டாம்? புரொபசர் கூவே சொன்ன வழியை, அந்த வீட்டம்மாளிடம் சொல்லுங்கள்...' என்றேன்.
'அது யார் கூவே?'
'பெரிய மனோதத்துவ நிபுணர். குழந்தையை வழிக்குக் கொண்டு வர ஒரு வழி சொல்லியிருக்கிறார்... ராத்திரி குழந்தை படுத்துத் தூங்கியதும், அதன் படுக்கைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, 'நீ நல்லவனாயிருக்க வேண்டும்; சமர்த்தாய் படிக்க வேண்டும். பிடிவாதம் பிடிக்கக் கூடாது...' என்றெல்லாம் என்னென்ன குறைகள் அதனிடம் உண்டோ, அவைகளை நீக்கிக் கொள்ளும்படி, மெதுவான குரலில் அதன் காதில் சொல்லி, ஓசைப்படாமல் வந்துவிட வேண்டுமாம். குழந்தையை எழுப்பி விடாமல் அப்படி சொன்னால், அதன் உள்மனதில் பதியுமாம், நம் உபதேசம். நாளா வட்டத்தில் குழந்தை திருந்தி விடுமாம்...'
'அவருடைய குழந்தை எப்படி வளர்ந்ததென்று தெரிந்தால் சுவாரஸ்யமாயிருக்கும்...' எனக் கேட்டார் குப்பண்ணா.
'உடம்பை எப்படி காப்பது, உள்ளத்தை எப்படி வளர்ப்பது, பணத்தை எப்படிப் பெருக்குவது என்றெல்லாம் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வந்து கொண்டிருக்கின்றன.
'லட்சாதிபதியாவது எப்படி, கோடீஸ்வரனாவது எப்படி என்று புத்தகம் எழுதிக் கொண்டிருப்பவர்கள், அந்த ரகசியத்தின் மூலம் கோடீஸ்வரனாகாமல் எதற்காக இவர்கள் பிறத்தியாருக்கு புத்தகம் எழுதிக் கொடுக்கின்றனர்?'
'நீ அப்படி ஒரேயடியாகப் பேசக் கூடாது...' என்றார் குப்பண்ணா.
'அப்படி வாருங்கள் வழிக்கு... கற்பிக்கிறவர்கள் வகை வேற; கற்றுக் கொள்கிறவர்கள் வகை வேற. மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதிலும், அதன் மூலம் மற்றவர்கள் பயனடைவதைப் பார்த்து சந்தோஷப்படுவதும் தான் கற்பிக்கிறவர்கள் வாழ்க்கை. அதையும், இதையும் கலக்கக் கூடாது. பெண்களுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் நட்டுவனாரே ஆடினால், யார் ரசிப்பர்?' என விளங்க வைத்தேன் குப்பண்ணாவுக்கு.
***
'சேலத்துக்காரர் ராஜாஜியைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டிருப்பீர்களே... ஆனால், அவரே கள்ளை ருசி பார்த்திருக்கிறார் என்று சொன்னால், நம்புவீரா?' என குப்பண்ணாவிடம் சொன்னார் லென்ஸ் மாமா.
'சீ... பெரியவர்களைப் பற்றி அப்படியெல்லாம் அபாண்டமாகச் சொல்லாதீரும்...' என்றார் குப்பண்ணா.
'உண்மைதான்... கேளுங்கள்... ராஜாஜியே இதை ஒப்புக் கொண்டதாக படித்திருக்கிறேன். சேலத்தில் மதுவிலக்குப் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, 'இந்தக் கள்ளில் அப்படி என்ன தான் ருசி இருக்கிறது?' என்று பார்ப்பதற்காக ஒரு சொட்டு நாக்கில் விட்டுக் கொண்டாராம். ஒரே புளிப்பாயிருந்ததாம்...' என்றார் லென்ஸ் மாமா.
'பெரியவங்களே அப்படிச் செய்தார்களே... இப்படிச் செய்தார்களே... நாமும் செய்தாலென்ன என்று சொல்கிறவர்கள், ஒன்றை மறந்து விடுகின்றனர்... விவேகானந்தர், ஹூக்கா பிடித்தார். சரி, நாமும் பிடிக்கலாம் என எண்ணினால், சுவாமி விவேகானந்தரால் செய்ய முடிந்த மற்ற அற்புதங்களையெல்லாம் நம்மால் செய்ய முடியுமா?' என ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டேன்.
'உண்மை தான்...' என்றபடியே, அடுத்த, 'ரவுண்டு' உ.பா., ஊற்றி கலக்க ஆரம்பித்தார் லென்ஸ் மாமா!
***
கும்பகோணத்தில் பராந்தக மன்னன் (கி.பி., 911) காலத்திய கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், சிவயோகி ஒருவருக்கு நாளும், 'உத்தம ஆகாரம்' அளிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட செய்தியைக் கூறும்போது, உத்தம ஆகாரம் என்பது என்னென்ன உணவு வகைகள் அடங்கியது என்பதை, பின் வரும் வகையில் குறித்து உள்ளது...
அரிசி இரு நாழி. கும்மாயம்.புளிக்கறி. ஓர் ஆழாக்கு நெய். ஓர் உரி (2 ஆழாக்கு) தயிர். வெல்லக்கட்டி இரண்டு. இரண்டு வாழைப்பழம்.
— அந்த பராந்தகன் இப்போது உயிருடன் இருந்தால் கூட இப்படி எல்லாம் கொடுக்க முடியுமா?
***
ஸ்காட்லாந்தில் தான் உலகப் புகழ் பெற்ற விஸ்கி ஐட்டங்கள் தயாராகின்றன. இந்த மக்கள் தம் கஞ்சத்தனத்திற்கும் உலகப் புகழ் பெற்றவர்கள்.
ஒரு அமெரிக்கருக்குத் தலை வழுக்கையானது. மறுபடியும் முடி வளர்வதற்காக ஏராளமாக செலவு செய்தார். இதே போல, ஸ்காட்லாந்துகாரர் ஒருவருக்கு தலை வழுக்கையாயிற்று.
அவர் என்ன செய்திருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? யூகிக்க முடிந்தால் அவரது கஞ்சத்தனத்தை எண்ணி சிரியுங்கள்... முடியாதவர்கள் புத்தகத்தை தலைகீழாக திருப்புங்கள்.
***
விடை: தலை வழுக்கையான ஸ்காட்லாந்துகாரர் தம்முடைய சீப்பை, 'சீப்' ரேட்டுக்கு விற்று விட்டார்!
