PUBLISHED ON : ஜூன் 10, 2012

போலீஸ் என்றாலே ஒருவித அலர்ஜியும், அயர்ச்சியும் இருப்பது உலகப் பொதுமறை. அதிலும், அமெரிக்க, 'அங்கிள்' கேட்கவா வேண்டும்? சகல தெய்வங்களையும் பிரார்த்தித்து, சகல பவ்யங்களையும் வரவழைத்து, காரில் அமர்ந்திருந்தோம்.
சரவணன் உடனே மொபைல் பேசுவதை நிறுத்தி, அவரை எதிர்கொள்ளத் தயாராக, எங்களுக்கு பதற்றம். அமெரிக்க மண்ணில் கால் பதித்த உடனேயே, போலீஸ் மூஞ்சியில்தான் விழிக்க வேண்டுமா?
இதுவரை இருந்த உல்லாச, 'மூடு' காணாமல் போயிற்று. என்ன கேட்பர், என்ன செய்வர்? அப்படியே மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன? பைன் போடுவர் அவ்வளவுதானே!
வந்தவர், குனிந்து ஒரு, 'சைசாய்' எங்களைப் பார்த்துவிட்டு, முன்பக்கம் கதவைத் திறந்து, எங்களுக்கெல்லாம் பக்...பக்...!
'ஹாய்... ஹவ் டு யு டூ...?' என்றார் ரொம்ப அன்யோன்யமாய்.
'பைன்...'
'எனி ப்ராப்ளம்... இன் கார்? டு யு நீட் எனி ஹெல்ப்...?'
சரவணன் வியர்வையை ஒற்றிக் கொண்டு, 'நோ... நத்திங், தாங்க்ஸ்...'
'ஷ்யூர்?'
'யா... ஜஸ்ட் பார் போன் கால்!'
'தென் ஓ.கேய்... என்ஜாய் த டே...' என்று சொல்லிவிட்டு, அவர் பாட்டிற்குத் திரும்பி நடந்து, தன் வண்டியில் ஏறிப் போய் விட்டார்.
எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை. பிரமிப்பு... ஆச்சரியம்.... இப்படியும் கூட இருப்பரா? சர்வீஸ் லேனில் கார் நின்றிருப்பதால், ஏதும் பிரச்னையாக இருக்குமோ, உதவலாமே என்கிற அவசர உதவிக்கு நிஜமான போலீஸ் வந்து விட்டது.
சட்டத்திற்குப் புறம்பாக நடந்தால், வீட்டிற்குப் பத்திரமாய் ஓலை அனுப்பி விடுகின்றனர். நேரம், காலம், எந்த இடம், என்ன தேதி என, ஜாதகம் குறிக்காத குறை... ஆன்-லைனிலேயே அபராதம்!
விசால சாலைகளில், முறைப்படி போக வேண்டும் என்கிற ஒழுக்கம். அபராதம் அல்லது சிறை என்கிற பயத்தால் அங்கு, விபத்துகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
விபத்து அல்லது கார் பழுது என்றால், எல்லாம் இன்சூரன்ஸ் மயம்... அந்த பில்களை நம்மால் தாங்க முடியாது. கண், காது, பல், மூக்கு, கை, கால் எனத் தொட்டதற்கெல்லாம் இன்சூரன்ஸ்...
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல, அங்கே பெயர் போடாமலேயே, 'ஒபாமா காப்பீடு' கள் அதிகம். சாலை விதிகளில், சில வினோதங்களையும் அறிய முடிகிறது. அதிகபட்ச வேகம், 55 மைல், 65 மைல்கள்...
உலகம் முழுக்க கி.மீ., கிலோகிராம் என, மாறிய பின், அமெரிக்காவில் மட்டும் இன்னமும் மைல், பவுண்ட் என்றே கடைப்பிடிக்கின்றனர். அதில், என்ன சவுகரியமோ தெரியவில்லை.
நம்மூரில் போல ஆடு, மாடு, கோழி, சைக்கிள், ஆட்டோ, வண்டி, இரு சக்கரம் என்கிற கசகசப்பு இல்லாதது அங்கு சாதகமாயிருக்கிறது. பைக் ரொம்பக் குறைவு; பைக் வாசிகள் எப்போதும் ஹெட்லைட், பகலிலும் போட்டுத்தான் ஓட்ட வேண்டும்.
பைக் என்றில்லை... வாகனங்கள் எல்லாவற்றிலுமே, 'பார்க்கிங்' லைட் கட்டாயம்... பகலிலும் எரிகிறது. வண்டியை ஸ்டார்ட் செய்தாலே, அது எரியும்படி அமைத்திருக்கின்றனர்.
முக்கிய பகுதிகளில், சாலையின் இருபுறத்தில் வேகமாய் செல்வதற்காக, எச்.ஓ.வி.., லேன் அமைத்திருக்கின்றனர்.
எரிபொருள் சிக்கனம், மாசுக்கட்டுப்பாடு, டிராபிக் நெருக்கடி குறைக்க வேண்டி, அலுவலகம் செல்பவர்கள் தனியாக கார் எடுக்காமல், நான்கு, ஐந்து பேர்கள் சேர்ந்து செல்லும் வாகனங்கள், இந்த டிராக்கில் செல்லலாம்.
இதில் நெரிசல் இருக்காது. வேகமாய் பறக்கலாம். சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்துவதற்காக இந்த ஏற்பாடு.
என்னதான் ஏற்பாடு செய்தாலும், நியூயார்க், வாஷிங்டன் போன்ற நகரங்களில், டிராபிக்கை சகிக்க முடியவில்லை. நியூயார்க் டவுனுக்குள், வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து, 20 கி.மீ.,க்கு அப்பாலேயே பார்க்கிங் போட்டு விடுகின்றனர்.
அமெரிக்கா முழுக்க பார்க்கிங், தவிர்க்க முடியாத அவஸ்தை. அவுட்டரில் பார்க் செய்துவிட்டு, சப்வே ரயிலை பிடித்து நமச்சலில்லாமல் பயணிக்கின்றனர்.
புறரயில்கள் அங்கு அத்தனை பிரபலமாய் தெரியவில்லை. ஊர்விட்டு ஊருக்கு பஸ், ரயிலைவிட, விமானங்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன. பஸ், ரயிலை விட விமானக் கட்டணம் கொஞ்சம் தான் அதிகம்.
பஸ், ரயிலாவது போகட்டும் எனலாம். டாக்சி கட்டணம், விமானத்தைவிட அதிகம்... பஸ், ரயில் எல்லாவற்றிலும் செல்ப் சர்வீஸ்தான். நாமே காசு போட்டு டிக்கட் எடுத்து பயணிக்க வேண்டும்.
ரயில்களும் அடிக்கடி தடக்...தடக்...கின்றன. அனைத்துப் பெட்டிகளிலும், அது எந்தப் பகுதி; எந்த நிறுத்தம், எந்தெந்தப் பகுதிக்குச் செல்ல இன்னும் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன; போய் சேர எவ்ளோ நேரம் பிடிக்கும் என்பதும் டிஜிட்டலில் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.
பிட்ஸ்பர்க் டவுனுக்குள் பிரவேசிக்கும்போது, விஜய், 'நாய் வண்டி தெரியுமா?' என்றார்.
'அது என்ன நாய் வண்டி? நாய் பிடிக்கிற வண்டியா?'
'இல்லை... இது ஒரு பஸ் சர்வீஸ்...'
எதிரே எங்களைக் குறுக்கிட்டுப்போன பஸ்சின் பக்கவாட்டில் பெரிய அளவில் நாய் படம் போட்டிருந்தது. அமெரிக்கர்களுக்கு நாய் என்றால் ரொம்ப பிடிக்குமாம். அதன் மேல் பிரியம்... மரியாதை... அதனால், நாய் வண்டி. அமெரிக்காவில் இன்னார்தான் உள்ளூர்காரர்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு, வேலை, பிசினஸ், படிப்பு, பொழுதுபோக்கு என்று உலகத்திலிருக்கிற, அத்தனை நாட்டவரும் வந்து, 'குப்பை' கொட்டுகின்றனர்.
அதில், சமீபகாலமாய் சீனர்கள் அதிகம்.
மலிவு விலை (தரமில்லா) பொருட்களை உலகம் முழுக்க அள்ளிவிட்டு, உலக மார்க்கெட்டையே சிதைத்து வெற்றி கண்டவர்களின் ஆக்கிரமிப்பு, அமெரிக்காவிலும் அதிகரித்திருக்கிறது. மலிவுப் பொருட்கள் என்றில்லாமல், தொழிலிலும் கூட, களத்தில் இறங்கியிருக்கின்றனர்.
அவற்றில் ஒன்று, 'அதிமலிவு' பஸ்கள். நம் அரசு விரைவுப் பேருந்துக்குப் போட்டியாய் இயங்கும் தனியார் கோச்சுகள் இங்கு அபார விலை போடுவதுண்டு.
ஆனால், இவர்களிடம் அரசு பேருந்துகளைக் காட்டிலும், மலிவான கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பஸ்சிலேயே டாய்லெட் வகதி உண்டு.
'சீனர்களைக் கண்டு அமெரிக்கா பயப்படுகிறது; பயப்பட்டாக வேண்டும். அவர்களால் அமெரிக்காவிற்கு என்றும் ஆபத்துதான்...' என்று சமீபத்தில் முன்னாள் அதிபர் புஷ், (காலம் கடந்து) அறிக்கை விட்டிருந்தார்.
அது உண்மை.
பஸ் என்றில்லை... அனைத்துத் துறையிலும் சீனா, அமெரிக்கத் தொழில், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் கால் பதித்திருக்கிறது.
நெடுஞ்சாலைகளில் அங்கங்கே, வாகனங்களும், வாகனப் பயணிகளும் இளைப்பார, பசியார பிரமாண்டமாய், 'சப்' களை அமைத்திருக்கின்றனர்.
நம்மூர் ஓட்டல்கள் போலத்தான். ஆனால், படு சுத்தம், அருகிலேயே பெட்ரோல் பங்க், பொழுதுபோக்கு அம்சங்கள், ஷாப்பிங், ரெஸ்ட் ரூம்கள்.
அமெரிக்கா முழுக்க, டாய்லெட்கள் இலவசம்... ஆனால், என்ன... ஒரே ஒரு பிரச்னை கழுவ தண்ணீர் பைப்போ, குவளையோ கிடையாது.
வெளியே பயணிக்கும்போது, டிஷ்யூவில் துடைத்து, திரும்ப உடை உடுத்திக்கொண்டு... மகா அவஸ்தை!
அந்த அவஸ்தையை எதிர்கொள்ள, சமாளிக்க அந்துமணி கொடுத்திருந்த ஐடியாதான் பயணம் முழுக்க கைகொடுத்தது. அது...
— தொடரும்.
என்.சி. மோகன்தாஸ்
