தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 10, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்!

நாங்கள், அலுவலக சகாக்கள் நான்கு பேர், அவரவர் குடும்பத்துடன், கார்களில் சுற்றுலா கிளம்பினோம். வழியனுப்பி வைத்த சகாக்களில் ஒருவரது தகப்பனார், 'அவங்க அவங்க ஒரே கார்ல குடும்பத்தோட உட்காராதீங்க. நாலு குடும்பமும், நாலு கார்ல பிரிஞ்சு, பிரிஞ்சு உட்காருங்க' என்றார். 'ஏன்?' என்றதற்கு, 'போயிட்டு வாங்க சொல்றேன்...' என்றார்.

அவரது அறிவுரைப்படியே பயணம் செய்து, திரும்பி வந்து, 'இப்ப சொல்லுங்க... ஏன் ஒவ்வொரு குடும்பத்தையும், பிரிச்சி பிரிச்சு பயணம் செய்யச் சொன்னீங்க?' என்றேன்.

'அது ஒண்ணுமில்லே... நாட்டுல Œõலை விபத்துக்கள் அடிக்கடி நடக்குது. அதுவும் தேசிய நெடுஞ்சாலைகள்ல சொல்லவே வேண்டியதில்லை. அப்படி ஏதாவது விபத்து நடந்தா, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லாருக்கும் பாதிப்பு ஏற்பட்டா, அவங்களுக்கும் கஷ்டம். கூட போனவங்களுக்கும் மனக் கஷ்டம்...

'இப்படி பரவலா பிரிஞ்சு பயணம் போகும் போது, தப்பித் தவறி ஏதாவது விபத்து நடந்தா, ஒவ்வொரு குடும்பத்திலேயும், ஒருவர் தான் பாதிக்கப்படுவார். மத்தவங்களுக்கு ஒண்ணும் ஆகாது...' என்றார். அனுபவஸ்தர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும், ஏதாவது அர்த்தம் இருக்கும் என்பது அப்போது தான் புரிந்தது.

பி.எஸ்.மாதேஸ்வரன், சிந்தாதிரிப்பேட்டை.

இளம் பெண்களே... உஷார்!

சமீபத்தில் நான் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு இளம்பெண், திடீரென்று சாலையை தவறான இடத்தில் கிராஸ் செய்த போது, சமயோசிதமாக பிரேக் பிடித்து, நடக்கவிருந்த விபத்தை, வயது முதிர்ந்த ஓட்டுனர் தவிர்த்தார். அந்த பெண்ணை கடிந்து திட்டாமல், 'சாலையை கடக்கும் போது, மொபைல் போனில் பேசக் கூடாது...' என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

'நீங்க போக வேண்டிய இடம் இன்னும், 6 கி.மீ., தூரத்தில் உள்ளது. அது வரை தயவுசெய்து எனக்காக சாலையை கடக்கும்போது, எத்தனை பேர் மொபைல் போனில் பேசிக்கொண்டு செல்கின்றனர். அதில், எவ்வளவு பேர் இளம் பெண்கள் என்று கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். இறுதியில், அதில் பெரும்பான்மை@யார், இளம் பெண்களாகத் தான் இருப்பர்...' என்று உறுதியாக சொன்ன டிரைவர், ஆட்டோ ஓட்டுவதில், தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

நான் கணக்கெடுத்தவரை, மொபைல் போன் பேசியபடியே சாலையைக் கடந்த பனிரெண்டு நபர்களில், பத்து பேர் இளம்பெண்கள். அனுபவம் மிகுந்த ஆட்டோ ஓட்டுனரின், புள்ளி விவரக் கணக்கு தப்பவில்லை. உயிரை பணயம் வைத்தாவது, மொபைல் போனில் பேசித்தான் ஆக வேண்டுமா என்பதை, இந்த இளவயதுக்காரர்கள் சற்று யோசித்து பார்க்க வேண்டும். சாலைகள் மற்றும் ரெயில்வே லைன்களை கடக்கும் போதும், டிராபிக் மிகுந்த பகுதிகளில் நடந்து செல்லும் போதும், மாடிப்படிகளில் ஏறும்போதும், இறங்கும்போதும், மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது என்று, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தினமும் அறிவுரை சொல்லி அனுப்பினால், இளவயதில் ஏற்படும் உடல் மற்றும் உயிர் சேதங்கள் தவிர்க்கப்படும்.

எஸ்.ராமன், சென்னை.

முழுமையான தகவலை தாருங்களேன்!

என் எதிர் வீட்டில் குடி இருந்த, ஒரு குடும்பத்தினரின் Œமீபத்திய அனுபவம் இது. அந்த வீட்டில் தாத்தா, பாட்டி, பேத்தி, வேலைக்கு செல்லும் மகன், மருமகள் உள்ளனர். ஒருநாள் திடீரென்று பேத்தி படிக்கும் பள்ளியிலிருந்து போன். 'உங்கள் வீட்டு பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை. உடனே வரவும்...' என்று செய்தி.

அப்போது பாட்டி மட்டும் தான் வீட்டில் இருந்தார். துணைக்கு என்னையும் கூட்டிக் கொண்டு, ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். அங்கு போய் பார்த்தால், பேத்தி நலமாக இருந்தார். பள்ளி நிர்வாகத்தினர் மிகவும் அலட்சியமாக, 'உங்கள் வீட்டு பெண், வயதுக்கு வந்து விட்டாள். எனவே, வீட்டுக்கு கூட்டி செல்லுங்கள்...' என்றனர்.

இந்த விஷயத்தை போனிலேயே சொல்லி இருக்கலாமே என்று, எங்களுக்கு ஒரே கோபம். பள்ளி வந்து பேத்தியை பார்க்கும் வரை, பாட்டியும், நானும் தவித்த தவிப்பு சொல்லிமாளாது. தேவையில்லாமல் டென்ஷன். ஒருவேளை, அதிர்ச்சியில் பாட்டிக்கு ஏதாவதாகியிருந்தால் என்ன ஆவது?

மேலும், பேசுபவர், கேட்பவர் இருவரும் பெண்கள் தான். இதில் என்ன மூடு மந்திரம். இப்படிப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் திருந்துவரா? (இதே போல் பல பள்ளிகளில் நடக்கிறது என்று பின்னர் தெரிந்துக் கொண்டேன்.)

வி.ராஜேஸ்வரி, நங்கநல்லூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us