தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 08, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அமுத சுரபி' பத்திரிகை ஆசிரியர் விக்ரமன் எழுதிய கட்டுரை ஒன்றை படித்தேன்.

'அந்தக் காலத்துக்கு' நம்மை இழுத்துச் செல்லும் கட்டுரை இதோ:

நாற்பதாண்டுகளுக்கு முன் வரை, மின்சார வசதியில்லாத வீட்டில் தான் வசித்தேன். எழுத்து, படிப்பு, என் குழந்தைகளின் படிப்பு எல்லாமே மின்சாரம் இல்லாத கால கட்டத்தில் தான் அதிகம் கழிந்தது.

மின்சார வசதி இல்லாத வீட்டில், எப்படி இருந்தோம் என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இப்போதெல்லாம், சில நிமிடங்கள் மின்சாரம் இல்லாவிட்டால், குடியே மூழ்கி விட்டது போன்ற கவலை, சாபம், கோபம் எல்லாம் பொங்கி வருகிறது.

என் மனைவிக்கு, பிறந்த நாளிலிருந்தே, அவள் வீட்டில் மின்சார வசதி இருந்தது. அதனால், கல்யாணமாகி வந்த சில மாதங்கள் மிகவும் சிரமப்பட்டாள்; பிறகு, எளிதில் பழகி விட்டாள். ஒரு ரேடியோ வசதியில்லை.

இடையில் சில மாதங்கள், மின் வசதியுடைய வீட்டில் குடி புகுந்தவுடன், ஒரு ரேடியோ வாங்க வேண்டும் என்று திட்டமிட்டோம். குறைவான வால்வு கருவியுள்ள ரேடியோ 300, 400 ரூபாய்க்கு கிடைத்தது.

என் அலுவலக சம்பளத்தில் வாங்க முடியாது. பேராசிரியர் சாண்டில்யனை 1949லிருந்தே எனக்குப் பழக்கம். சுதேசமித்திரன் ஞாயிறு இதழ் பொறுப்பை அவர் ஏற்றபோது, பல எழுத்தாளர்களுக்கு ஆதரவு தந்தார்.

எனக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு, 'தொடர்கதை' ஒன்று எழுதுமாறு என்னைத் தூண்டினார். 'இதயபீடம்' சமூக நாவல் ஞாயிறு இதழில் வெளிவரத் தொடங்கியது. அது, என் முதல் நாவல். பதினைந்து வாரங்களோ, அதற்கு மேலாகவோ வெளிவந்தது. 'சன்மானத்தை வாரா, வாரம் தந்தால் செலவு செய்து விடுவீர்கள்... கதை முடிந்தவுடன் மொத்தமாகத் தருகிறேன்!' என்றார் சாண்டில்யன்.

கதை முடிந்ததும் நானூறோ, அதற்கு மேலாகவோ கேஷ் ஆர்டர் வந்தது.

அப்போதெல்லாம் சுதேசமித்திரன் அலுவலகத்தில், 'கேஷ் வவுச்சர்' அனுப்புவர். அதில் ஸ்டாம்பு ஒட்டி, சுதேசமித்திரன் அலுவலகம் சென்று, அதை கேஷியரிடம் கொடுத்து விட்டு சிறிது நேரம் வரவேற்பாளர் அறையில் அமர்ந்திருந்தால், பெயர் சொல்லி அழைப்பர். வவுச்சர் தொகை, ரூபாயாகக் கொடுக்கப்படும்.

இதய பீடத்திற்கு வந்த தொகை அந்தக் காலத்தில் கணிசமான தொகை. என் முதல் தொடரின் அன்பளிப்பை எடுத்துச் சென்று, என் மனைவியிடம் கொடுத்தேன்.

'இந்தத் தொகையை குடும்பத்திற்கு செலவு செய்யக் கூடாது; எதாவது நினைவில் நிற்கும்படியான பொருள் வாங்கலாம்!' என்றாள் என் மனைவி. நீண்ட நாள் தேவையான ரேடியோ வாங்க இருவரும் புறப்பட்டோம்.

விற்பனையாளரிடம், 'ரேடியோவை எடுத்துச் செல்வோம். ஒலி நன்றாகக் கேட்டால் தான் வைத்துக் கொள்வோம்!' என்று நிபந்தனை விதித்து, ரேடியோவை எடுத்து வந்தோம்.

நாங்கள் குடியிருந்த வீட்டில் அதிகாரம் செய்பவர் நடுத்தர வயதுடைய பெண்மணி. மற்றவர் நன்றாக இருந்தால் அவருக்கு பிடிக்காது. ரேடியோவுடன் ரிக்ஷாவில் இருந்து இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தவர், சட்டென்று எழுந்து உள்ளே போய் விட்டார். ரேடியோவைப் பாட வைக்க பிரயத்தனம் செய்து கொண்டிருந்தோம். சில சமயம் அது திடீரென பெரும் சப்தத்துடன் ஒலிக்கும். பிறகு கர்புர்... வீட்டுக் கதவு தட்டப்பட்டது; இரவு ஒன்பது மணி. வீட்டுக்கார அம்மாள் நின்று கொண்டிருந்தார்.

'இதோ பார்... கீழே தலைவலி தாங்கவில்லை. ரேடியோ எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது. கரன்ட் சார்ஜ் அதிகமாகும். மற்ற குடித்தனக்காரர்களுக்கு தொந்தரவு இருந்தாலும், ரேடியோ வைத்துக் கொள்வதென்றால், வாடகை 30 ரூபாய் கூடுதலாகத் தர வேண்டும். கரன்ட் சார்ஜுக்கு 20 ரூபாய் அதிகம் தர வேண்டும்!' என்று கூறி, கதவைப் பட்டென்று சாத்திக் கொண்டு போய் விட்டார். நாங்கள் ரேடியோ வாங்கவில்லை... அந்தப் பணம் வீட்டுச் செலவுக்கு உதவியது.

***

அவர் ஒரு, 'ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்!' — பல இதழ்களிலும் எழுதி வருபவர். போலீஸ் துறையுடன் மிகுந்த நெருக்கம் உள்ளவர். உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் வட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காது. இதனால், ஒருவரைப் பற்றி ஒருவர் இவரிடம் ஆதாரத்துடன், 'போட்டு'க் கொடுப்பர். அவற்றை புலனாய்வு இதழ்களில் அம்பலப்படுத்தி விடுவார்.

கடந்த வாரத்தில் ஒரு நாள், என்னையும், லென்ஸ் மாமாவையும் தம் வீட்டுக்கு அழைத்திருந்தார் அந்த அன்பர்.

அவர் மனைவி வெளியூர் சென்று இருந்ததால், சமையலை கவனித்தபடி ஹாலில் அமர்ந்திருந்த எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென லென்ஸ் மாமா, 'அப்பு... (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவியல் பதமா வெந்து விட்ட வாசனை வருது... தேங்காய் எண்ணையும், தயிரும் ஊற்றி இறக்கி வச்சுட்டு வா...' என்றார்.

'பரவாயில்லையே... இதெல்லாம் கூட படித்து விட்டீர்களே... எனக்கு இப்போ ஜலதோஷம்... வாசனையும் தெரியாது; ருசியும் தெரியாது...' என்றேன்!

'உண்மை தான். ருசி என்பது மூக்கும், நாக்கும் சேர்ந்து பெறுகிற உணர்ச்சி தானே!' என்று லென்ஸ் மாமா சொன்னதும், 'மூக்குக்கும், ருசிக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்டேன்.

'நிறைய சம்பந்தம் உண்டு!' என்று அழுத்தமாகச் சொன்னார் மாமா.

'மூச்சை உள்ளுக்கு இழுத்துக் கொண்டே ஒரு பொருளை சுவைத்துப் பார். அப்போது அதன் ருசி அவ்வளவாகத் தெரியாது. அடுத்து மூச்சை வெளியே விடுகிறாய் பார், அப்போது தான் தெரியும்.

'வெளியே வரும் மூச்சில் ஒரு சூடான ஆவி இருக்கிறது. நாம் மெல்லுகிற பொருளின் மணத்தைக் கிளப்பி, அதன் ருசியை உணர்த்துவது அது தான். சில சமயம், சில பொருளின் ஸ்பரிசமும் சேர்ந்து தான் சுவை ஏற்படுகிறது.

'மணம், இனிப்புச் சுவை, லேசான சொர சொரப்பு – இந்த மூன்றும் சேர்ந்தது தான் ஐஸ் கிரீமின் ருசி!'

'நாக்குக் கூட உடனே கண்டு பிடித்து விடுகிறது என்று சொல்வதற்கில்லை. ஒரு சொட்டுப் பட்ட வினாடியே தெரிவதும் உண்டு; இரண்டொரு வினாடி கழித்துத் தெரிவதும் உண்டு...' என்றார் அப்பு.

'அதற்குக் காரணம், நாக்கில் அந்தக் குறிப்பிட்ட சுவைக்கு உண்டான பகுதியைப் அந்தப் பொருள் தொடவில்லை என்பது தான்...' என்றார் லென்ஸ் மாமா.

'நாக்கிலே கசப்புக்கு ஒரு இடம்; புளிப்புக்கு ஒரு இடம் என்று டிவிஷனா பிரித்து வைத்திருக்கிறது?' என்றேன்.

'ஏன் இல்லாமல்? இனிப்பை உணரும் தன்மை நாக்கின் நுனிப் பக்கத்துக்குத் தான் உண்டு. அடி நாக்கு கசப்புக்கு, பக்கவாட்டில், முன்புறம் உப்பையும், பின்பகுதி புளிப்பையும் உணரும்.

'தேன் துளியை நாக்கு நுனியில் விட்டுக் கொண்டால் உடனே தெரியும். உட்புறம் விட்டுக் கொண்டால், உமிழ் நீரோடு கலந்து பரவி, நுனி நாக்குக்கு வந்த பிறகு தான் தெரியும். அதனால் தான் நாக்கு இனிக்கிறது என்கிறோம்; தொண்டை கசக்கிறது என்கிறோம்...'

'நான்கு சுவைகளை மட்டும் தானே சொன்னீர்கள்; மற்ற இரண்டும் நாக்கின் எந்த போர்ஷனில் இருக்கிறது?'

'மொத்தமே நாலு சுவை தான் – நாக்கு சாஸ்திரப்படி! அறுசுவையல்ல. இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு — இந்த நான்கிலிருந்து தான் மற்ற எல்லாவிதமான சுவைகளும் பிறக்கின்றன...' என்றார் மாமா...

முருங்கைக்காய் சாம்பாருடன், அவியலையும் ஒரு பிடி பிடித்துக் கிளம்பினோம்!

***



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us