தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 16, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க நண்பர் ஒருவரை கவுரவிக்கும் விதத்தில், லென்ஸ் மாமா இல்லத்தில் ஒரு விருந்து.

சென்னையைச் சேர்ந்தவர் தான் அந்த அமெரிக்க நண்பர். அமெரிக்காவில் செட்டிலாகி, 10 வருடங்களுக்கு மேலாகிறது. அமெரிக்க பிரஜா உரிமையும் பெற்று விட்டவர். அவருக்கு மக்கட் செல்வம் இல்லாதது பெரும் குறை.

'கல்யாணமாகி பத்து வருஷமாச்சு... இன்னும் ஒரு புழு, பூச்சி ஜெனிக்கலே... யாரு மேலே குத்தமோ?'

'பையன் வீட்லே... அவங்க ரிலேட்டீவ் சைடுலே எல்லாருக்கும் ஒரு டஜனுக்கு குறைவில்லாமே குழந்த குட்டி இருக்கு... பொண்ணு மேலே தான் ஏதோ மிஸ்டேக்...'

'ஏம்பா... சின்ன வயது தானே உனக்கு... நல்ல வேலைல இருக்கே... அதுவும் அமெரிக்காவுலே இருக்கே... நான்... நீன்னு பொண்ணு தருவாங்க... ரெண்டாவது ஒரு கல்யாணம் செஞ்சுக்கயேன். வாரிசு இல்லாமே பின்னாலே கஷ்டப்படுவே...'

'அந்தப் பையனுக்கு ஆண்மை இல்லையாமே...'

'கோவில், குளம், பூஜை புனஸ்காரம், விரதம் இருந்தா, ஏதானும் பலன் கிடைக்கும்...'

—இப்படி ஆளாளுக்கு ஒரு பேச்சு... அட்வைஸ்!

குழந்தை இல்லையாம்... சின்ன வயசாம்... இன்னொரு கல்யாணம் கட்டிக்கணுமாம்!

—எவ்வளவு வேதனையடையும் அப்பெண் மனது!

அமெரிக்க நண்பரும், அவர் மனைவியும் முடிவு செய்தனர்; ஒரு பெண் குழந்தையை தத்து எடுப்பதென்று! அந்த முடிவுடன் இந்தியா வந்து, மராட்டிய மாநிலம் சென்று, ஆதரவற்@றார் இல்லத்தில் இருந்து, ஐந்தே மாதமான பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தனர்.

— அவர்களுக்குத் தான் லென்ஸ் மாமா வீட்டில் விருந்து!

லென்ஸ் மாமா வீட்டின் மாடி, 'சிட் - அவுட்' பெரிது; 7 - 8 பேர் வசதியாக அமரும் அமைப்பு கொண்டது. அங்கே, நாற்காலி போட்டு, எதிரே, 'டிவி' வைத்து, 'புளு நன்' - ஜெர்மனிய திராட்சை ரசம் - ஒயின் அருந்தியபடியே விருந்தாளிகளுக்காக காத்திருந்தார்!

(வீட்டில் ஒயின் மட்டும் சாப்பிட மாமாவுக்கு அனுமதி அளித்துள்ளார் மாமி.)

நான் சென்று அமர்ந்த சிறிது நேரத்தில் விருந்தினர் வந்தனர். விருந்தினூடே அமெரிக்க நண்பர் சொன்னார்:

குழந்தையை தத்தெடுக்கப் போகிறோம் என்ற முடிவை நாங்கள், எங்கள் உறவினர்களிடம் அறிவித்ததும், ஏகப்பட்ட எதிர்ப்பு! 'யார் பெற்ற புள்ளையோ... எந்த ஜாதியைச் சேர்ந்ததோ... நேர்வழியில் பிறந்ததோ... இல்லே, கள்ளப் புருஷன் மூலம் பிறந்ததோ... உனக்கும், உன் பொண்டாட்டிக்கும் என்ன வயசாகி விட்டதா? கோவில், குளம்ன்னு சுத்தி, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துப் பாருங்களேன்!' என ஒரு சிலரும்; 'யாரோ ஒரு குழந்தையை இவன் தத்தெடுத்துக் கொள்வானேன்... இவனுக்கோ நிறைய சொத்து இருக்கிறது. நம் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளட்டுமே...' என்று சொத்து ஆசையில் வேறு சிலரும் வெவ்வேறு ஐடியாக்கள் கொடுத்து, எங்களை திசை திருப்பப் பார்த்தனர்; ஆனால், எங்கள் முடிவை நாங்கள் மாற்றிக் கொள்ளவே இல்லை.

குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது சுலபமான செயல் அல்ல அமெரிக்காவில்... ஏகப்பட்ட சட்ட திட்டங்கள் உள்ளன. எங்களது முடிவை, இதற்கென உள்ள துறையிடம் (அமெரிக்காவில்) தெரிவித்ததும், துறையில் உள்ள பெண் அதிகாரி ஒருவர், எங்கள் இல்லத்திற்கு வந்து, எங்களின் நோக்கம் நேர்மையானதுதானா என்பது குறித்து துருவி, துருவி விசாரித்து அறிந்து கொண்டார். அத்துடன் விட்டு விடாமல், மூன்று மாதம் தொடர்ந்து எப்போது, எந்நேரம் என்று சொல்லாமல் எங்கள் இல்லம் வந்து, எங்களது அன்றாட நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொண்டார்.

எங்களது மருத்துவ ரிப்போர்ட்களை சோதனை செய்தார். எல்லா விதத்திலும் எங்களது நோக்கம் தவறானது அல்ல என்பதை உறுதி செய்து கொண்ட பின், நாங்கள் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என பரிந்து எழுதினார். அதன் பின்@ப எங்களுக்கு அனுமதி கிடைத்தது.

அத்துடன் மட்டுமல்லாது, தத்து எடுக்கும் குழந்தையை எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் வளர்க்க வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு பாடம் நடத்தினார்.

குழந்தைக்கு ஐந்து வயதாகும் போதே, அக்குழந்தையின் சொந்தப் பெற்றோர் தாங்கள் இல்லை என்பதை புரிய வைக்க ஆரம்பித்து விட வேண்டும் என்றார். அதற்கான, 'சைக்காலஜிகல்' காரணங்களையும் எங்களுக்கு விளக்கினார்.

குழந்தையை தத்தெடுக்க நாங்கள் இந்தியா செல்கிறோம் என்பதை அறிந்த, எங்களுடன் வேலை செய்பவர்கள், குழந்தைக்கு தேவையான துணி முதல் தொட்டில் வரை அன்பாக வாங்கியளித்து, எங்களுக்கு ஊக்கம் அளித்து, 'மேலும் இரண்டு வாரம் வேண்டுமானால் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்!' எனப் பரிவுடன் கூறி வழியனுப்பி வைத்தனர்.

அதே பூரிப்புடன் மும்பை வந்து, குழந்தையை தத்தெடுத்து, அதிகாரப்பூர்வமாக்க கோர்ட்டுக்கு சென்றது முதல் எங்களுக்கு தொல்லைகள் ஆரம்பமாயின. 'என்னய்யா ஒரு சாட்சியோட வந்திருக்க... இரண்டு சாட்சிகள் வேணும் பதிவு செய்ய...' எனச் சொல்லி எழுந்து சென்று விட்டார் கோர்ட் கிளார்க்!

எனக்கு எப்படித் தெரியும் இரண்டு சாட்சி வேண்டுமென? பின், என் மனசாட்சிக்கு விரோதமாக லஞ்சம் கொடுத்து, கோர்ட் வளாகத்திலேயே ஒரு சாட்சியை இழுத்து வந்து கிளார்க்கை தேடினால் ஆசாமியைக் காணோம்!

எங்கெங்கோ அலைந்து அவரைப் பிடித்து, இரண்டு சாட்சியையும் முன் நிறுத்தினால்... வேறு ஏதோ காரணம் சொல்ல ஆரம்பித்தார்... மீண்டும் மனசாட்சியை துரத்தியடித்து, அவர் முன், 500 ரூபாய் தாளை ஆட்டினேன். வேலை முடிந்தது!

பின்னர், குழந்தைக்கான, 'பாஸ்போர்ட்...' அங்கும் இதே பிரச்னை... தலைமை பாஸ்போர்ட் அதிகாரியை பார்த்து பேசியும் பயனில்லை. சோர்வாக வெளியே வரும் நேரத்தில், 'புரோக்கர்' ஒருவர் என்னை அணுகி, 1,500 ரூபாயில் வேலையை முடித்து தருவதாகக் கூறி, மூன்றே மணி நேரத்தில், 'பாஸ்போர்ட்' வாங்கிக் கொடுத்தார்!'

மாமா ஏற்றிக் கொண்டிருந்த திராட்சை ரசம், அவரது முகுளத்தைத் தாக்க தொடங்கியிருந்தது. அரசு ஊழியர்களை அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்.

அமெரிக்க நண்பரின் மராட்டிய தத்துக் குழந்தையின் பொக்கை வாய் சிரிப்பில், நம் அவலங்களை சிறிது மறந்தேன் நான்!

***

நெற்றியில் விபூதி, குங்குமம், நாமம் முதலியவற்றை இடுவது பற்றி... இதுபற்றி திருச்சி கல்லூரி பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தபோது கேட்டேன்... அவர் சொன்னார்...

நெற்றியில், புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞாசக்கரத்தைச் செயல்படுத்தத்தான் அங்கு குறியிடப்படுகிறது என்று சக்தி உபாசகர்கள் கூறுவர்! சின்னங்கள் சிவ, வைணவ, சாகத, மாத்வ சின்னங்கள் என்று எப்படி இருந்தாலும், அவற்றை ஆன்மிகத்துடன் பிணைத்துத்தான் பார்க்கின்றனர்.

சில முக்கியமான செய்திகளை இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டும்:

முதலாவதாக, இங்கே எங்கு சென்றாலும் குறைந்தது பத்துக்கு ஐந்து பேரையாவது, நெற்றிக்கிட்டவரைப் பார்க்கலாம். பட்டையாக விபூதியணிந்து செல்பவரை வடக்கே காண முடியாது. ஏதோ ஒரு கீற்று சந்தனம், விபூதி அல்லது சிறு குங்குமப் பொட்டுதான் - அதுவும் கோவிலில் தான்.

இரண்டாவதாக, பிரபல ஆன்மிகவாதிகள் வெற்று நெற்றியுடன்தான் காட்சியளித்தனர். சுவாமி விவேகானந்தர் கூட! இன்றும் விபூதி வரவழைத்து பக்தர்களுக்கு வழங்கும் பெரியோர், தாங்கள் தரிப்பதில்லை. வள்ளல் ராமலிங்கர் கூட, கடைசியில் விபூதி பூசினதும் கிடையாது, வழங்கினதும் கிடையாது என்கின்றனர் அவரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்தவர்கள். 'நாதன் அணி திருநீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே' என்ற உயர்ந்த நிலை பற்றி மணிவாசகர் கூறுவதையும் நினைவு கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, சிறந்த ஆன்மிகவாதி ராஜாஜி என்பதை யாரும் மறுக்க முடியாது. மறைந்த ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனும் உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி. இருவரும் நெற்றிக்கிட்டுக் கொண்டது கிடையாது. 'கல்கி' இதழில் வெகு ஆண்டுகளுக்கு முன் ராஜாஜி நெற்றியில் நாமம் இட்டுக் கொண்ட படம், 'அதிசயம்' என்ற தலைப்பில் வெளியாகிஇருந்தது.

அண்ணல் காந்தியடிகளின் படத்திற்கு நாம் தான் பொட்டு வைத்துப் பார்க்கிறோம். பூஜையை தான் விலக்கியதைப் பற்றி சத்திய சோதனையில் எழுதியுள்ளார்; அதை சவுகரியமாக யாரும் ஞாபகப்படுத்திக் கொள்வதில்லை.

ஆங்கிலேயரான நீதிபதி ஆவ்லன் ஆஷ்லர், சக்தி உபாசகர் - நெற்றியில் குங்குமம் இடாமலிருக்க மாட்டாராம். இன்றைக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சர்ச் உள்ளே நுழைந்ததும், அங்கு வைக்கப்பட்டிருக்கும் கலயத்தில் உள்ள புனித நீரை, விரலால் எடுத்து நெற்றி நடுவில் வைத்துதான் பிரார்த்தனைக்கு அமர்கின்றனர்...' என நீண்ட, 'லெக்சர்' கொடுத்தார்.

— என்ன சொல்ல வருகிறார் - நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்கலாமா? வேண்டாமா என்பது கடைசிவரை புரியவில்லை எனக்கு!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us