தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வெற்றியின் ரகசியம் (3)

வெற்றியின் ரகசியம் (3)

வெற்றியின் ரகசியம் (3)


PUBLISHED ON : செப் 16, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.

பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து குழைத்ததில் கிடைத்த வண்ணக் கலவையை, சமூக அக்கறை என்னும் தூரிகையால் வரைந்த ஓவியம் தான், 'வெற்றியின் ரகசியம்' எனும் தொடர்.

(இந்த தொடரில் சொல்லப்பட்டவை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்து)

குறிக்கோளை அடைவதில் தீவிர ஆசை!

நாம் என்னவாக வேண்டுமோ, அதில் மனம் லயித்து, நம்மை யாராகப் பார்க்க விரும்புகிறோமோ, அவராக கற்பனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். கலெக்டராக, டாக்டராக, இன்ஜினியராக, தொழில் அதிபராக, அரசியல் தலைவராக, நாம், நம்மைப் பற்றி செய்து வைத்துள்ள கற்பனைதான், நம்மை அந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது.

நம்முடைய கனவு மற்றும் கற்பனைக்கு தெளிவான செயல் வடிவம் கொடுக்கும்போது அது குறிக்கோளாகிறது. 'என் குறிக்கோள் இதுதான்' என நமக்கு நாமே பிரகடனம் செய்யும்போது, அதை அடைவதில் முனைப்பும், மன உறுதியும் பிறக்கும்.

விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு, பல நூறு மைல்கள் தூக்கிச் செல்ல, ராக்கெட்டில் உள்ள எரிசக்தியை பயன்படுத்துவது போல, நம் குறிக்கோளை அடைவதற்கு உந்து சக்தியாக இருப்பது, அதன் மேல் வைத்து இருக்கும் தீவிர ஆசை தான்.

வரலாற்றில் நிகழ்ந்த உன்னத சாதனைகளை உற்றுப் பார்த்தால், அதை அடைவதில், சரித்திர நாயகர்களுக்கு இருந்த தீவிர ஆர்வம் புலப்படும். மகா அலெக்சாண்டர், தம் இளம் வயதில், உலகை ஒரே பேரரசின் கீழ்க் கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் புறப்படுவதற்கு முன், தாயாரிடம் ஆசி பெறும்போது, 'தாயே நான் உலகத்தின் மறு எல்லையைப் பார்க்கப் போகிறேன், விடை கொடுங்கள்...' என்று சொன்னாராம்.

குறிக்கோளின் மீது வைத்திருக்கும் ஆசை, நம்மை ஓய்வெடுக்க விடாது, உறங்க விடாது. நாம் எடுக்கும் முயற்சியில் அலுப்புத் தட்டவிடாது. எத்தனை மணி நேரம் உழைத்தாலும் சோர்வடைய விடாது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அவமானப்படுத்தினாலும், இளக்காரமாகப் பேசினாலும் மனதைத் தளர விடக் கூடாது.

கடந்த 1960களில், அமெரிக்காவும், ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலக்கட்டம். ரஷ்யா ஸ்புட்னிக் என்ற விண்கலத்தை, விண்ணுக்கு அனுப்பி வைத்தது. அந்த நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி, 1969க்குள் அமெரிக்கா, சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் என அறிவித்தார். அதன் பின், அவர் துரதிர்ஷ்ட வசமாகச் சுட்டுக் கொல்லப்பட்டாலும், அடுத்து வந்த ஜனாதிபதியும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் கென்னடியின் கனவை அமெரிக்க நாட்டின் குறிக்கோளாக ஏற்று, 1969ல், அமெரிக்கர் இருவரை, சந்திரனுக்கு அனுப்பி வைத்து, பத்திரமாக பூமிக்கும் கொண்டு வந்தனர். அமெரிக்கர்கள் தங்கள் குறிக்கோள் மீது வைத்திருந்த தீவிர ஆசைக்கு, இது ஒரு எடுத்துக்காட்டு.

எவரெஸ்ட்டை அடைய வேண்டும் என்ற தன் கனவை நனவாக்க களம் இறங்கிய, எட்மண்ட் ஹிலாரி, அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்க நேரிட்டது. ஆனால், தோல்வியில் துவண்டு விடாமல், மலையடிவாரத்தில் நின்று, எவரெஸ்ட்டை பார்த்து, 'நீ வெறும் மலை. நான் மனிதன். உன் சிகரத்தைத் தொடுவதற்கு நான் மீண்டும் வருவேன்...' என கூறினார். சொன்ன மாதிரியே டென்சிங்கோடு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, சாதனை படைத்தார்.

கப்பல், தண்ணீரில் மிதப்பதற்கான காரணத்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ், தண்ணீர்த் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த போது, தீவிர சிந்தனையில் இருந்தார். அப்போது ஒரு பொறி தட்டி, மிதக்கும் கோட்பாட்டைக் கண்டுபிடித்த வெற்றியின் மகிழ்ச்சியில் வெளியில் ஓடிச் சென்று, தன் தாய்மொழியில் 'யுரேகா' (கண்டுபிடித்து விட்டேன்) என்று துள்ளிக் குதித்தார். பிறகு தான் அவருக்கு புரிந்தது, தான் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில், நிர்வாணமாகத் தெருவுக்கு ஓடி வந்து விட்டோம் என்று. குறிக்கோளை அடையும் முயற்சியில், தன்னை மறந்த நிலைக்குச் சென்று விடுவதற்கு, இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.

தன் குறிக்கோளை இப்படித்தான் அடைய வேண்டும் என்பதில் இருக்கும் உறுதிக்கு, இந்திய விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒரு நிகழ்ச்சி... காந்திஜியின் தலைமையில், அகிம்சை வழியில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் போது, ஓரிடத்தில் வன்முறை வெடித்தது. நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லாம், 'இந்தியா சுதந்திரம் அடைவதற்கு வேண்டிய தருணம் நெருங்கி விட்டது' என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், காந்திஜி உடனடியாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி, வன்முறையைக் கண்டித்து, உண்ணாவிரதத்தில் இறங்கினார். விடுதலை பெற வேண்டும் என்பதில் எந்த அளவுக்கு உறுதியாக இருந்தாரோ, அந்த அளவுக்கு, 'அகிம்சை வழியில்தான் விடுதலை பெற வேண்டும்' என்பதிலும் தீவிரமாக இருந்தார்.

குறிக்கோளில் தெளிவும், உறுதியும் பிறக்கும் போது, நம் பேச்சு, செயல், நடை, உடை, பாவனை அனைத்திலும் மாற்றம் வெளிப்படக் காணலாம். மகாகவி பாரதியார், தன்னுடைய வாழ்க்கையின் அர்த்தத்தை, தன் பாடல் வரிகளில் பதிவுசெய்து வைத்தார். 'எமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராது இருத்தல்' என்று, தன் வாழ்க்கைப் பாதையை நிர்ணயம் செய்தார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும், வேறு வேறு அர்த்தம் இருக்கலாம். ஆனால், அவரவர் வாழ்க்கையின் அர்த்தத்தை முழுவதுமாக புரிந்து, அதில் தெளிவும், உறுதியும் வேண்டும். இந்த விஷயத்தில் தெளிவில்லாதவர்கள், விவரம் தெரிந்த மூத்த நண்பரையோ, உறவினரையோ, ஆலோசகரையோ அணுகி தெளிவு பெற வேண்டும்.

சரித்திர நாயகர்களுக்கு மட்டுமே, குறிக்கோள் இருக்கும் என்று அர்த்தமில்லை. ஒரு கூலித் தொழிலாளி தன் பிள்ளையை, கலெக்டராக்க வேண்டும் என்று ஆசைப்படுவதிலும், ஒரு ஆசிரியர், தன் மாணவர்கள் இத்தனை விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைப்பதிலும், ஒரு தொழிலதிபர், இந்தாண்டு விற்பனையை இத்தனை கோடி பெருக்கி, பலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவதிலும், உன்னதமான குறிக்கோள் இருக்கிறது.

குறிக்கோளின் மீது இருக்கும் ஆசையோடு, அதில் தெளிவும் இருக்க வேண்டும். சிலர், 'நான் என்றாவது ஒருநாள், எப்படியாவது, பெரிய ஆளாகி விட வேண்டும்' என்று சொல்லக் கேட்டிருப்போம். குறிக்கோளில் தெளிவு இருப்பவர்கள், 'நான் இந்த ஆண்டுக்குள், இந்த வழியில், இந்த நிலையை அடைவேன்...' என்று சொல்வர்.

குறிக்கோளற்ற வாழ்க்கை, நூலறுந்த பட்டம்போல, துடுப்பிழந்த படகு போல, எந்தத் திசையில் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், ஆசைப்படும் இலக்கை அடைய இயலாது.

குறிக்கோள் நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கிறது. நம் கவனம், திறமை மற்றும் உழைப்பை ஒருமுகப்படுத்த உதவுகிறது. நம் குறிக்கோளின் மேல் தீவிர ஆசை இருக்கும்போது, அதுவே நம்மைச் சுமந்து சென்று, வெற்றி சிகரத்தில் ஏற்றி விடும்.

— தொடரும்.

சி. அருண்பரத், கூடுதல் ஆணையர், வருமானவரித்துறை மும்பை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us