தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 23, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்வி அறிவு, பண பலம், பிறந்த வீட்டின் ஆதரவு, சுயசம்பாத்தியம் இல்லாத பெண்கள் தான், கணவரால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்; சந்தேகிக்கப்படுகின்றனர்; மனதாலும், உடலாலும் துன்பப்படுகின்றனர் என்ற பலருடைய கருத்து தவறானது.

பண்புள்ள, வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த, படித்த பெண் ஒருவர், தன் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகம் என்ற நோயால், தான் அடைந்த, அனுபவித்த, அனுபவிக்கும் கொடுமையை சமீபத்தில் என்னிடம் கூறியபோது, ரத்தக்கண்ணீர் வடித்தது மனம்.

சந்தித்த இடம் - விதம் ஆகியவற்றை வாசகியின் நலன் கருதி இங்கே விவரிக்கப் போவதில்லை. தன் சோகத்தை என்னிடம் கொட்டினார்.

'...ச் (தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள மாவட்டத்தின் பெயர்.) சேர்ந்தவள் நான்...' — வாசகி.

'அப்படியா... ரொம்ப சந்தோஷம்... உங்கள் முகத் தோற்றமும், நீங்கள் பேசிய தமிழுமே நீங்கள், 'அந்த' மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை கூறுகிறது...' — நான்.

'என் புறத்தோற்றத்தைக் கண்டு, என்னைப் பற்றி என்ன கணித்து உள்ளீர்கள்... 'பேஸ் ரீடிங்' உங்களுக்கு கைவந்த கலை என்பதை உங்களது எழுத்துகளின் மூலம் அறிந்துள்ளேன்...'

'நீங்கள் அறிவாளி என்பதை, உங்களது கண்கள் சொல்கின்றன. உங்களது ஆங்கில மொழி பிரயோகம் - மெத்தப் படித்தவர் என்பதை அறிவுறுத்துகிறது... உங்கள் முகத்தின் இளமை இன்னும் கல்லூரியில் இருக்கும் மாணவி அல்லது இப்போது தான் படிப்பை முடித்தவர் என்பதை கூறுகிறது. ஆனாலும், அறிவொளி வீசும் கண்களையும் மீறி விழிகளில் சோக இழைகள் தெரிகின்றன! தாங்க முடியாத வருத்தம் உங்களை அழுத்துகிறது... அது உங்களை விழுங்கி விடாமல் இருக்க, நீங்கள் முயல்வதும் தெரிகிறது!' என்றேன்.

மென்று கொண்டிருந்த, 'பபிள் கம்'மை உதட்டுக்கு கொண்டு வந்து, உதட்டைச் சுழித்து, அலட்சியமாகச் சிரித்து, பார்வையை வேறு பக்கம் அவர் திருப்பிக் கொள்வதிலிருந்து, தன் சோகம் கண் வழியே கொட்டி விடாமல் இருக்க முயல்வதும் தெரிந்தது.

பின்னர், சமாளித்து நிலைப்படுத்தி, சோகத்தை பின்னணியில் இருத்தி, புன்னகை ஒன்றை சிந்தி, 'தம் சோகத்தை, கஷ்டத்தை, நஷ்டத்தை, பிரச்னைகளை உங்களிடம் கொட்டி, அதற்கான தீர்வை, ஆலோசனைகளை கேட்ட வாசகர், வாசகியரை தான் இதுவரை சந்தித்திருப்பீர்கள்... உங்களது ஆலோசனைகளை கேட்பதற்காக வரவில்லை... என் பிரச்னைகளின் முழு வடிவமும் எனக்கு தெரியும்; அதற்கான தீர்வு என்னவென்பதையும் அறிவேன்... எனவே, வெறுமனே கேளுங்கள், போதும்...' என்றார்.

பெருமிதமும், ஆச்சரியமும் கலந்த அதிர்ச்சி எனக்கு... 'இவ்வளவு மனப்பக்குவமும், பகுத்தறிவும் கொண்டவர் என் வாசகியா?'- என! கூற ஆரம்பித்தார்:

...யில் (அந்த மாவட்டத்திலேயே புகழ்பெற்ற பாரம்பரியமிக்க கல்லூரியின் பெயர்.) முதுகலையை முதல் வகுப்பில் முடித்தேன். கல்லூரி முதல்வர் முதல், துறைத் தலைவர் உள்ளடக்கி விரிவுரையாளர் வரை, என் கல்வி அறிவை மெச்சிப் பாராட்டுவர்.

வசதியான சிறிய குடும்பம்... தாயார் மிகக் கண்டிப்பானவர். தந்தையும், தம்பியும் என் தோழர்கள். தந்தையை போன்றே என் குணமும் - செயல்பாடுகளும் என்பதால், இருவருக்கும் எல்லா விஷயங்களிலும் உடன்பாடு இருக்கும்.

நான் ரேடியோ கேட்க வேண்டுமென்றால், 'டிவி' தான் பார்க்க வேண்டும் என்பாள் இளைய சகோதரி... அவ்வளவு, 'ஒற்றுமை' எங்களிடையே.

படிப்பு முடிந்த கையோடு, மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து வைத்தனர். கை நிறைய சம்பளம் வாங்கும் பணி, பாதுகாப்பு உள்ள வேலை. சொந்த ஊரிலிருந்து, தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கணவரின் பணியிடத்திற்கு குடிபெயர்ந்தேன்.

மதக்கோட்பாடுகளை கண்மூடித்தனமாக கடைபிடித்தும், 'ஆர்த்தடாக்ஸ்' குடும்பத்தில் பிறந்து அவ்வாறே வாழும் மனிதர் இவர் என்பதை முதலிரவன்றே புரிந்து கொண்டேன். அன்றிரவே... 20-25 வருடங்களாக எதிர்பார்த்து காத்திருந்து கிடைத்த அந்த இரவிலேயே, என் அன்பின் தூய்மையை சோதிக்கும் நீசக் கேள்விகளை எழுப்பினார். 'ஆண்களுக்கே உரிய குணம் போலும் இது...' என சாதாரணமாக எடுத்து கொண்டேன்.

தனிக்குடித்தனம் ஆரம்பித்த பின்னர் தான் கொடுமைகள் ஆரம்பமாயின. காலையில் பணிக்குச் சென்றால், திரும்பி வர இரவு 8:00 மணி ஆகி விடும். அதுவரை எனக்கு துணையாக இருந்தது, வானொலி தான். அதற்கும் ஆபத்து வந்தது... சினிமா பாடல் கேட்டால், கெட்டு விடுவேனாம். உற்ற துணையாக இருந்த வானொலி என்னிடமிருந்து பிடுங்கப்பட்டது.

'படிப்பதற்கு பத்திரிகைகள் வாங்கி போடுங்கள் என்றால், 'காசு செலவாகும்...' - 'சுழல் நூலகத்தில் சேர்த்து விடுங்கள்!' என்றால், 'ஒழுக்கம் கெட்டு விடும்... நான் இல்லாத நேரத்தில், நூலகப் பையன் இங்கு வருவதை அனுமதிக்க முடியாது...' - போன்ற பதில்கள்!

எப்படித்தான் பொழுதை செலவிடுவது... காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை வீட்டிலேயே அடைந்து கிடந்தாகி விட்டது... அதற்கு பின்னாவது... வேண்டாம்... வாரம் ஒரு முறையாவது வெளியே அழைத்து செல்வதுண்டா? சரித்திரப் புகழ் வாய்ந்த அந்த ஊரை, அவ்வூரின் புகழ்பெற்ற கோவிலை, கண்ணை மூடி கனவில் தான் காண முடிந்தது.

மன இறுக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வது, மூளையை தடுமாறச் செய்து, பைத்தியமாக்கி விடும் என்பதால், வீட்டுப் படி இறங்கி, பக்கத்து வீட்டு வயதான பெண்மணியுடன் பழகி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, அவரது காலத்து பழங்கதைகளை கேட்டு, மனதை பாரமில்லாமல் வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

அதற்கும் வந்தது கேடு... திடுதிப்பென மதிய வேளையில் வீடு வந்த என் கணவர், வீட்டிற்குள் என்னை அழைத்து, 'பின்னிப் பின்னி' எடுத்து விட்டார். அவ்வப்போது, ஒன்றிரண்டு, 'கை நீட்டல்கள்' நடந்திருந்தாலும், அன்று ரத்தக் காயங்கள் ஏற்பட்டு விட்டது. பக்கத்து வீட்டில் வாலிபப் பசங்க இருக்கின்றனராம்... தப்பு, தண்டா நடந்து விடுமாம்...

பற்றிக்கொண்டு வந்தது எனக்கு... இளம்பெண் ஒருத்தியின் பருவ ஆசைகள் ஒன்றையும் அறியாமல், பூர்த்தி செய்யாமல், அதை பற்றிய சிந்தனைகளே இல்லாமல் அந்த மனிதனுடன், 'அட்ஜஸ்ட்' செய்து வாழ்ந்தும் இப்படி ஒரு பேச்சா... நிஜமாகவே, 'தப்பு' செய்து வாங்க வேண்டும் என்ற வெறி அக்கணம் ஏற்பட்டதென்னவோ உண்மை... ஆனால், வளர்க்கப்பட்ட விதம், படிப்பு, அதனால் வந்த பகுத்தறிவு, 'பொறுமை... பொறுமை' என்ற கட்டளையை மூளைக்கு அனுப்பியது.

திருமணம் முடிந்து ஒரு வருடம் போயிற்று... அந்த, 365 நாளில் பல நாள் அடி - உதை தான்! ஒரே ஒரு நாள் தான், 'இணை'ந்து இருந்தோம் என்பதை வெளியில் சொன்னால் வெட்கம்.

எவ்வளவு தான் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும்? இரண்டாம் வருடம்...' தேவைகளை பூர்த்தி செய்...' என உடல் கேட்கிறது... 'நம்மவரிடம் வெட்கம் என்ன... வெட்கம்...' என உடல் தேவையை பூர்த்தி செய்து கொண்டபோது... (திருமணம் முடிந்து இரண்டாவது முறை) உண்டானது குழந்தை... இன்று அக்குழந்தைக்கு வயது இரண்டு.

எங்கள் காதலில் - ஆசையில் பிறந்த குழந்தை அல்ல... உடல் தேவையை பூர்த்தி செய்ய முயன்ற போது ஏற்பட்ட விபத்து... இருந்தாலும் என்ன... காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு... கணவனிடமிருந்து இப்போது விலகி விட்டேன். எனக்கு ஆத்ம திருப்தியளிக்கும் பணியில் ஈடுபடுகிறேன். ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கை கல்வியையும் போதிக்கிறேன்.

மனபாரம் முழுவதும் இறங்கியது போன்ற உணர்வு எனக்கு இப்பொழுது ஏற்படுகிறது அந்துமணி! உங்களது பரிவு வார்த்தை, ஆலோசனை எதுவுமே வேண்டாம்! புரிந்து கொள்ளும் தன்மையுடைய உங்களிடம் கொட்ட வேண்டும் என நினைத்தேன்... கொட்டி விட்டேன்... என முடித்தார்.

கண்கள் லேசாக கலங்கி இருந்தாலும், உடைந்து போனது போல தெரியவில்லை. தன்னால் வாழ்வை தன்னந்தனியே எதிர்கொள்ள முடியும் என்பதை

அவரது பேச்சில் தென்பட்ட உறுதி எடுத்துக் கூறியது.

சந்தேக குணம் ஆண்களை ஏன் தொற்றிக் கொள்கிறது? - அவர்களிடம் புதைந்து கிடக்கும், 'இன்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்' காரணமா? - புரிந்து கொள்ள முடியவில்லை.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us