PUBLISHED ON : செப் 30, 2012

அந்த காலத்தில், ஜி.டி. நாயுடு ஒரு பஸ் கம்பெனி வைத்திருந்தாராம் கோவையில். அதன் பெயர், 'யு.எம்.எஸ்.,' பஸ் கம்பெனியாம். அதில் பணியாற்றிய ஒருவர் சிக்கினார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது...
'ஜி.டி.நாயுடு கண்டிப்புக்கு பெயர் பெற்றவர். அவரது பஸ் கம்பெனி நிர்வாகிகளில் ஒருவராக பணியாற்றினேன். அவரது பஸ் ஸ்டாண்டில், சட்ட திட்டங்கள் குறித்து எழுதி வைத்திருந்த போர்டுகள் வினோதமானவை...' என்று அவர் கூறியதாவது:
* உள்ளே போகும் வழி!
* ஒவ்வொரு பயணியும் டிக்கெட் வாங்கிய பின், எந்த பஸ்சுக்கு வாங்கி இருக்கின்றனரோ, அந்த பஸ் புறப்படுவதை ஜாக்கிரதையாகக் கவனித்து, அந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும். அவ்விதம் அந்த பஸ்சை தவறவிட்டு விட்டால், யாதொரு காரணத்தைக் கொண்டும் டிக்கெட் பணம் வாபஸ் கொடுக்கப்பட மாட்டாது.
* சில்லரை கொடுப்பதில்லை.
* பயணம் செய்பவர்கள் மாத்திரம் இவ்விடம் தங்க வேண்டும்; பயணம் செய்யாதவர்களை இவ்விடம் கண்டால், போலீசாரிடம் ஒப்புவிக்கப்படும்.
* கான்டீன்-இங்கு வேலை செய்பவர்களுக்கு மட்டும்.
* கை கழுவும் தண்ணீர்.
* குடிக்கும் தண்ணீர்.
* எந்த விதமான காரணத்தைக் கொண்டும், இவ்விடம் எச்சில் துப்பவோ, வாய் கொப்பளிக்கவோ கூடாது.
* இங்கு எங்காவது எச்சில் துப்பினால், அதை நீங்களே சுத்தம் செய்ய வேண்டும்.
* இங்கே சைக்கிள் நிறுத்தக் கூடாது; வேண்டுமானால் பின்னால் ஸ்டாண்டில் நிறுத்தவும்.
* எந்த வேலையும் காலி இல்லை.
* இன்று முதல் யாருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட மாட்டாது.
* ஒரு பொய் உன்னை வெளியேற்றி வீட்டுக்கு அனுப்பும்; ஒரு திருட்டு உன்னை ஜெயிலுக்கு அனுப்பும்.
* அஜாக்கிரதை, சோம்பேறித்தனம், சுத்தமாக செய்யாத வேலை, உன்னை பட்டினிக்கு இழுக்கும் அல்லது உன்னை வெளியில் போகச் செய்யும்.
* வெளியே போகும் வழி.
— இவற்றில் சிலவற்றையாவது தெற்கு ஆசியாவிலேயே பெரிய, பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் எழுதி வைக்கலாம்!
***
அன்று லென்ஸ் மாமா, பெரியசாமி அண்ணாச்சி, அன்வர் பாய், குப்பண்ணா என, வழக்கமானவர்கள் யாரும் இல்லாத ஒரு, 'கூட்டம்!' எழுத்தாள நண்பர்கள்... 'எங்க பெயரெல்லாம் எழுதி விடாதே...' எனக் கேட்டுக் கொண்ட நாலைந்து எழுத்தாளர்கள், வாசகர்கள் கொண்ட கும்பல் அது; உடன் நானும்.
ஊரைத்தாண்டி, கடற்கரை மணலில் அசெம்பிள் ஆனோம்; சூரியன் மறைந்து விட்டான்!
எழுத்தாள நண்பர் ஒருவர், தன் ஜோல்னா பையில் இருந்து தடிமனான ஒரு புத்தகத்தை எடுத்தார். அருகே இருந்த, 'எமர்ஜன்சி' விளக்கருகே புத்தகத்தைக் கொண்டு சென்று, 'எல்லாரும் இந்தப் புத்தகத்தைப் பாருங்கள்!' என்றார்.
'உப பாண்டவம்' என பெரிய எழுத்திலும், அதன் கீழ், சிறிய எழுத்தில் எழுதியவரின் பெயரும், என்னவென்று ஊகித்து அறிய முடியாத முகப்புப் படம் ஒன்றும் அச்சாகி இருந்தது.
'இந்த நூல், 'மிடியோகிரிட்டி'யின் (இரண்டாந்தரமான) மொத்த எடுத்துக்காட்டா இருக்குப்பா... சிறு பத்திரிகையாளர்களுக்கு தமிழே எழுதத் தெரியாது என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று! ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரனிடம் உள்ள, 'புரொபஷனலிசம்' சிறு பத்திரிகைக்கு எழுதுபவர்களிடம் இல்லை...' என எடுத்த எடுப்பிலேயே பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்!
'அப்படி என்னதான் இருக்கு?' என்றேன்.
'நீயே படிச்சுப் பாரு... குறிப்பா, 300வது பக்கத்தில் அஸ்வமேத யாகம் பத்தி எழுதி இருக்கான்... அதப்படி...' என்றார்.
புத்தகத்தை வாங்கி, நான் புரட்டிக் கொண்டிருந்த நேரத்தில், அருகே, 'கலக்கல்' வேலை நடந்து கொண்டிருந்தது!
கலக்கல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, புத்தகத்தைப் பற்றி மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள, எழுத்தாள நண்பரை ஓரம் கட்டி அழைத்துச் சென்றேன்.
'இந்த நூலோட மூலப் பிரதி, 1923ல் வெளியானதுப்பா... மொத்தம், 18 நூல்கள்; 14 ஆயிரம் பக்கங்கள். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தவர் உ.வே.ஸ்ரீநிவாஸாசார்யர். இவரு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சமஸ்கிருத பண்டிதராக இருந்தவராம்ப்பா... நூலை பதிப்பித்தவர் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழ் பண்டிதராக இருந்த ராமானுஜாசார்யா.
'இந்த, 18 வால்யூம்களையும் பிரசுரிக்க, தன் சொத்து முழுவதையும் இவர் விற்க நேர்ந்ததாம். இதன் பிரதி, இப்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள என் நண்பர் கண்ணனின் தந்தையார் உ.வே.திருமலாச்சாரியாரிடம் மட்டுமே உள்ளது. அவர் ஒரு உபந்யாசகர். இந்த மூலப் பிரதியில் இருந்தே, இப்போது நீ கையில் வைத்திருக்கும், 'உப பாண்டவம்' எழுதப்பட்டுள்ளது, போதுமா தகவல்?' என்றார் நண்பர்!
புத்தகத்தை பத்திரப்படுத்தி, மற்றவர்களின் அரட்டையில் கலந்து கொண்டேன்.
— 'என் பொண்ணு எப்பவும் புகார் சொல்லிக்கிட்டே இருக்கும்... 'அம்மாவுக்கு சாம்பார் தவிர வேறு குழம்பு ஒண்ணுமே வைக்கத் தெரியலே!'ன்னு... மணி சார்... எழுதிக் கொடுத்த, மோர் குழம்பையும், மிளகு கூட்டையும் நானே சமைத்தேன்... இப்பல்லாம் வாரம் ஒருமுறை இதையே செய்யச் சொல்றா எம் பொண்ணு...' என ஒருவர், மற்றவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
இன்னொருவர், 'வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல, தாழி உடைஞ்ச கதை ஆயிட்டுப்பா...' எனச் சொல்லிக் கொண்டு இருந்தார்.
திரைக்கதை ஒன்று தயார் செய்து, பட்ஜெட் போட்டு, நடிகர், நடிகையர் தேர்வு செய்து, தென் மாவட்டத்தில் டாக்டர்களாக பிராக்டீஸ் செய்யும் இருவரை, தயாரிப்பாளர்களாகவும், 'செட்' செய்து இருந்தார்.
பூஜை போட தேதி குறிக்கும் அளவுக்கு முன்னேறி விட்ட நிலையில், தயாரிப்பாளர்களாக இருந்தவர்கள் சைடில் இருந்து ஒரு தொய்வு... அதனால் மனம் வருந்தி மேற்படி வசனத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.
இப்படி ஆளாளுக்கு கதை பேசி பொழுதையும், 'குப்பி'களையும் காலி செய்து கிளம்பினர்.
அடுத்த நாள், 'உப பாண்டவம்' புத்தகத்தை, ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
புத்தகத்தில், 300ம் பக்கம் அஸ்வமேத யாகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அது:
குற்றுயிராக குதிரை வீழ்ந்து கிடக்கும் இரவில், குதிரையின் அருகே அரசனும், அவன் பட்டத்து அரசியும், உடலில் ஒரு வஸ்திரமும் இன்றி நிர்வாணிகளாக ஒருவரையொருவர் நெருங்காமல் ஒரு இரவும், நெருங்கிப் புணரா நிலையில் ஒரு இரவும் படுத்து எழ வேண்டும். பின்பு பட்டத்து அரசியானவள், குதிரையோடு உடல் உறவு கொள்ள வேண்டும். குதிரையை... (அச்சிட முடியாத வார்த்தை) அவளோடு சம்போகம் செய்ய உதவி செய்யும் பணியாளர்கள் இருந்தனர். பின், குதிரையின் குருதியை தன் கேசத்தில், உடலில் அவள் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
யுதிஷ்ட்ரன், தன் மனைவி பாஞ்சாலியோடு இந்த பலிசடங்கை செய்வதற்காக, நிர்வாணம் கொண்டு குதிரையருகே படுத்துக் கொண்டான். குதிரையோடு உறவு கொள்ள திரவுபதியை அழைத்தவர்கள், தனியே கூட்டிப் போனார்கள். இந்த அஸ்வபலி சடங்கின் சாந்தி காரியங்களை சகோதரர்களும் செய்தனர். பட்டத்து அரசிக்கு பின்பு அவளுக்கு அடுத்த நிலைப் பெண்களும், அரசனின் உதிர வழிகளும் இதே குருதி சடங்கைச் செய்தனர். குதிரையின் குருதியானது, உலகில் வெல்ல முடியாத சக்திகள் யாவையும் கொண்டு வந்து சேர்க்கும் என நம்பினர்.
— இப்படி எழுதப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞான உலகத்தில் இதெல்லாம் நம்பக் கூடியவைகளாக இல்லையென்றாலும், சமஸ்கிருதம் அறிந்த பண்டிதர்கள் உண்மை நிலையை விளக்குவரா?
***
