PUBLISHED ON : செப் 30, 2012

*எஸ்.குலசேகரன், விருதுநகர்: அந்தமான் செல்ல பாஸ்போர்ட் தேவையா?
இந்தியாவின் ஒரு பகுதி தானே அந்தமான். இங்கிருந்து பெங்களூரு செல்ல, மும்பை செல்ல பாஸ்போர்ட் தேவையா? அதுபோல்தான்! ஆனால், லட்சத் தீவுக்குச் செல்ல, கொச்சியில் இருக்கும் லட்சத்தீவு நிர்வாகத்திடம், '÷ஷார் பாஸ்' என்ற அனுமதி சீட்டு வாங்கியே ஆக வேண்டும். (அந்தத் தீவுகளும் இந்தியாவில் ஒரு பகுதி தான்!)
***
** த.கிருஷ்ணமூர்த்தி, சென்னை: கணவன் - மனைவி இருவரும், அரசாங்க வேலையில் இருந்தும், நிறைய சம்பாதித்தும், மாதக் கடைசியில், நெருக்கடியாக இருக்கிறது என்கின்றனரே...
பயம் தான்; எங்கே கடன் கேட்டு விடுவீங்களோ என்ற நினைப்பில், அட்வான்சாக, 'நெருக்கடி' எனக் கூறி வருகின்றனர் போலும்!
***
*எம்.தமிழ்மலர், பீளமேடு: ஒருவரோடு ஒருவர், மனதால் வாழ்ந்து விட்டு, பின், வேறு ஒருவரோடு எப்படி வாழ முடியும்?
தட் இஸ் லைப்... அது தான் வாழ்க்கை நிதர்சனம் என்பதை புரிந்து கொள்கின்றனர். வாழ்ந்தாக வேண்டுமே!
***
* எம்.ஜமுனா ராணி, கூடல்நகர்: திருமணத்திற்குப் பின், வேலைக்கு போகும் பெண் - ஹவுஸ் ஒய்ப்... இதில், எந்த வகை பெண்களின் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது?
இரண்டு, 'கேட்டகிரி'யுமே புலம்பதான் செய்கின்றன. 'மாமியார் - நாத்தனார் பிடுங்கல் இல்லை... சமையல் வேலை இல்லை... அவளுக்கென்ன கை நிறைய காசு... நினைத்ததை வாங்கிக்கறா...' என்று ஹவுஸ் ஒய்ப் புலம்ப; 'ஹும்... அடித்து பிடித்து, பஸ் பிடிச்சு, இடிபட்டு, மிதிபட்டு போனாலும் லேட் ஆகுது; திட்டு வாங்க வேண்டியிருக்கு... கை ஒடிய, மனம் நோக ஆபீஸ் வேலை, வாரம் ஆறு நாட்கள் பார்க்க வேண்டி இருக்கு... அவளுக்கென்ன ஹாயா எழுந்து, நிதானமா வேலை செஞ்சு, 'டிவி' சீரியல் ஒன்று விடாமல் பார்த்து...' — மொத்தத்தில் இக்கரைக்கு அக்கரை பச்சை!
***
* மா.ராஜகோபாலன், பொள்ளாச்சி: ஜப்பானின், சிங்கப்பூரின் இமாலய முன்னேற்றத்துக்கு காரணம் என்ன?
நம்மூர் ஜனங்களைப் போல, அரசியல் வெறித்தனம் அவர்களிடம் இல்லை. உழைப்பை மறந்து, போஸ்டர் ஒட்டுவதிலும், கொடி கட்டுவதிலும், 'கட்-அவுட்' வைப்பதிலும், தம் நேரத்தை வீணாக்குவது இல்லை. அரசியல் ஊர்வலம், கூட்டங்களில் கலந்து, வாழ்க, ஒழிக கோஷம் எழுப்பி, தம்மையும், தம் நாட்டையும் ஒழித்துக் கொள்வதில்லை; முன்னேறி விட்டனர்.
***
** பா.சந்திரசேகர், கொரட்டூர்: விளம்பரங்கள் இல்லை என்றால், பத்திரிகைகள் என்ன செய்யும்?
அப்படியே விலையை டபுள் ஆக்கி விடும். விளம்பர வருமானம் இருந்தால் தான் விற்பனையை, 'சப்சிடைஸ்' செய்து, வாசகர்களின் சுமையை குறைக்க முடிகிறது.
***
*எல்.வெங்கட்ரமணன், திருவத்திபுரம்: விழி பேச்சில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா?
சந்தேகமில்லாமல் ஆண்கள் தான்! துணிந்து ஒரு பெண்ணை பார்த்து, முதலில் கண்ணடிப்பது ஆண்கள் தான்! 'ஹவ் ஆர் யூ?' கேட்பது, 'குட்மார்னிங்' சொல்வது, 'டிரஸ் சூப்பர்' என்பதையெல்லாம் விழி மொழியில் பேசுவதில், ஆண்கள் கில்லாடிகள். குறிப்பிட்ட ஆணுடன் பழகி, தைரியம் அடைந்து விட்ட பெண்ணும், விழிமொழியில் வல்லவள் தான்! பழகும் வரையில் தான் பெண்ணுக்கு சங்கோஜம், சங்கடம் எல்லாம்!
***
