தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 11, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீச்சில் வழக்கமான எங்கள் மீட்டிங் இடத்தின் அருகே வந்து நின்றது ஒரு கார். உள்ளேயிருந்து சிரித்துக்கொண்டே இறங்கி வந்தார் டாக்டர் நண்பர் ஒருவர்; லென்ஸ் மாமாவின் தோழர். பாங்காக்கில் ஒரு கம்பெனியில் அதிகாரியாக இருக்கிறார்.

'இப்போது நியூயார்க்கிற்கு என்னை மாற்றியிருக்கின்றனர். போவதற்கு முன், பழைய நண்பர்களையெல்லாம் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன்...' என்றார் அந்த டாக்டர் நண்பர்.

'உங்கள் பாடு தேவலாம், உலகம் பூரா சுற்றி விடுகிறீர்கள்!' என்றேன்.

'என்ன போங்கள்... எந்த உலகத்தை சுற்றினாலும், இங்கே அக்கடா என்று தமிழ்நாட்டில் இரண்டு இட்லி, சாம்பார் சாப்பிடுகிற மாதிரி இல்லையே!'

'அதைச் சொல்லுங்கள்... தமிழ்நாட்டின் பெருமை வெறும் இட்லி, சாம்பாரில் தான் இருக்கிறது...' என்றார் லென்ஸ் மாமா!

உடனே, அந்த டாக்டர் நண்பர், 'என்ன அப்படித் தமிழ்நாட்டை ரொம்ப குறைவாகச் சொல்லி விட்டீர்கள்... ஒரு காலத்தில் மலேயா, இந்தோனேஷியா, பர்மா, கம்போடியா என்று எல்லா இடத்தையும் தமிழன் ஆண்டிருக்கிறான் மாமா!

'ஒரு வருஷம் இல்லை, இரண்டு வருஷமில்லை... ஆறு, ஏழு நூற்றாண்டுகளுக்கு தமிழ் ராஜ்ஜியம் அங்கெல்லாம் நடந்திருக்கிறது. இந்தக் கண்ணால் நேரில் பார்த்துவிட்டு வந்து சொல்றேன்...' என்று சொல்லி, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டார்.

பிறகு அவரே, 'கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட் கோவிலைப் பார்த்தால், நமக்கு அப்படியே எப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில் சார்... உலகத்திலேயே ரொம்பக் குறிப்பிடத்தக்கக் கோவிலாக இருக்கிறது. தமிழ் நாட்டில் கூட அப்படிப் பிரமாண்டமாக ஒரு கோவில் இல்லை...' என்றார்.

'நான் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். நூறு வருஷங்களுக்கு முன் தான் அந்தக் கோவிலை கண்டுபிடித்தார்களாமே... பெரிய அடர்ந்த காடுகள் அந்தக் கோவில் இருக்குமிடமே தெரியாதபடி மறைத்திருந்ததாம். இல்லையா?' என்றார் அன்வர் பாய்.

நான், உடனே, 'இப்போது நமக்கிருக்கிற இட நெருக்கடிக்கு, அந்தக் காலத்தில் தமிழ் மன்னர்கள் ஜெயித்திருந்த கடாரம், சாவகம் போன்ற நாடுகள் எல்லாவற்றையும் அப்படியே வைத்துக் கொண்டிருந்திருக்கலாம், இல்லையா?' என்றேன்.

டாக்டர் கூறினார்: ஒரு நாடு இன்னொரு நாட்டைப் பிடித்துக் கொள்வதற்கு, வெறும் மண்ணாசை மட்டும் காரணமில்லையே! தன்னுடைய வீரத்தை நிலை நிறுத்துவற்காகவே பல நாடுகளை ஜெயித்திருக்கின்றனர் தமிழர்கள் என்றே நினைக்கிறேன்.

கம்போடியா நாட்டில் கதை ஒன்று கேட்டேன்... அந்த நாட்டின் வாய்த் துடுக்கான ராஜா ஒருத்தன், ஒரு நாள், தன் மந்திரியிடம் எகத்தாளமாக கூறினானாம்... 'இதோ, பார்த்தீரா மந்திரியாரே... இந்த வெள்ளித்தட்டில், நம் எதிரியான இந்தோனேஷியா ராஜாவின் தலையைக் கிள்ளி வைத்தால் எப்படியிருக்கும்?' என்று.

எப்படியோ இந்த செய்தி இந்தோனேஷிய ராஜாவுக்கு எட்டி விட்டது. உடனே, அவன் படையெடுத்து வந்து, கம்போடியா நாட்டை ஜெயித்து, அந்த ராஜாவின் தலையை சீவி விட்டானாம். சீவினதோடு, ஒரு வெள்ளித் தட்டில் அதை வைத்தானாம்.

கம்போடிய மக்கள், 'இனி நீங்களே எங்கள் நாட்டின் தலைவன்!' என்று இந்தோனேஷிய ராஜாவுக்கு மண்டியிட்டு விட்டனராம்!

அதற்கு அவன் சொன்னானாம்: உங்கள் நாடு எனக்கு எதற்கு? உங்கள் தேசத்து அரசன் என் தலைக்கு ஆசைப்பட்டான்; ஆகவே, நானும் அவன் தலைக்கு ஆசைப்பட்டேன். அவன் என் நாட்டுக்கு ஆசைப்படவில்லை; ஆகவே, நானும் அவன் நாட்டுக்கு ஆசைப்படவில்லை! என்று...

'பேஷ்... அருமையான அரசியல்!' என்றார் லென்ஸ் மாமா!

***

'பிரான்சில் இருக்கிறானே என் சினேகிதன்... அவன் என்ன பண்ணினான் தெரியுமோ? அவனுக்கு குழந்தை பிறந்து மூன்று மாதமாகிறது. அங்கே வளர்க்க சவுகரியமில்லை என்று இங்கே இருக்கிற தன் அப்பா, அம்மாவிடம் போன வாரம் அனுப்பி விட்டான்!' என்றார், அன்று அலுவலகம் வந்த எழுத்தாளர் நண்பர் ஒருவர்!

'அதிலே என்ன அதிசயம்?' என்றேன் நான்.

'பிளேனில் தனியாக அனுப்பியிருக்கிறான்; குழந்தையுடன் யாரும் வரவில்லை. ஒரு சின்னத் தொட்டிலில் வைத்து, விமானக் கம்பெனியின் பொறுப்பில் அனுப்பி விட்டான்! அவர்கள் பத்திரமாய் அழைத்து வந்து, விமான நிலையத்தில் நண்பனின் அம்மாவிடம் ஒப்படைத்து விட்டனர்... இது அவனுக்கு மூணாவது குழந்தை; அதனால் அலட்சியமோ, என்னவோ!' என்றார்.

'அந்தத் தாய்க்காரியை சொல்லுங்க... மூன்று குழந்தை இருந்து விட்டால், அன்பு குறைந்து கொண்டே வருமா என்ன! குசேலர் பெண்டாட்டியானால் கூட, முதல் குழந்தை எப்படியோ, அப் படித்தான், 27வது குழந்தையும்!' என்றேன் நான்.

'கரெக்ட்' என்று ஆமோதித்தார் குப்பண்ணா; அப்போது, அவரும் உடனிருந்தார். 'ஐசனோவரின் அம்மாவுக்கு ஐந்து பிள்ளைகள். எல்லாரும் பெரியவர்,களாகி ஒவ்வொரு துறையில் தலையெடுத்திருந்தனர். ஆனால், ஜெனரல் ஐசனோவரைத் தான் உலகத்துக்குத் தெரியும். அவர் அம்மாவுக்கு அப்படி இருக்குமா?

'ஐரோப்பாவில் பிரமாதமான பல போர்கள் நடத்திவிட்டு ஐசனோவர் அமெரிக்கா திரும்பியபோது, ஒரு பத்திரிகைக்காரர் அந்த அம்மாவிடம், 'உங்கள் பிள்ளையைப் பற்றிப் பெருமைப்படுகிறீர்கள் இல்லையா?' என்று கேட்டாராம். 'எந்தப் பிள்ளையைச் சொல்கிறீர்?' என்று திருப்பிக் கேட்டாராம் ஐசனோவரின் அம்மா!' என்றார் குப்பண்ணா!

இவளல்லவோ தாய்!

***

நவுரு என்ற ஒரு நாடு பற்றிய தகவல்களை லண்டனில் இருந்து வெளியாகும் டைம்ஸ் நாளிதழில் படித்தேன்! படிக்க உதவியது உ.ஆ., ஒருவர்! வியப்பை அளிப்பதாக இருந்தது. இந்நாடு உலகிலேயே சின்னஞ்சிறிய குடியரசு. ஆஸ்திரேலியா பக்கம் இருக்கிறது. இதன் பரப்பளவு, 21 சதுர கிலோ மீட்டர் தான். சென்னை மாநகர், 174 சதுர கி.மீ., என்றால், இது எவ்ளோ குட்டி நாடு என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இந்நாடு ஒரு தீவு.

நம் நாட்டைப் போலவே, இந்நாடும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு விடுதலைப் பெற்ற நாடு. உலகின் மிகவும் ஏழை நாடுகளில் இதுவும் ஒன்று. எவ்வளவு ஏழ்மை என்றால் - அரசாங்கத்துக்கு சொந்தமான ஏழு விமானங்களை ஆஸ்திரேலியாவிடம் விற்று, ஜீவனம் நடத்தும் ஏழ்மை.

விமானங்களை மட்டும் விற்கவில்லை; லண்டனில் இருந்த இந்நாட்டின் தூதரக அலுவலகத்திற்கு வாடகைகூட கட்ட முடியாமல் காலி செய்து விட்டது.

இருபத்திநான்கு மணி நேரத்தில், இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சார சப்ளை உண்டு. நவுருவின் தொலைபேசி சர்வீசை கவனித்து வந்தது ஆஸ்திரேலியா. அதற்கான நிர்வாகக் கட்டணத்தை நவுருவால் செலுத்த முடியவில்லை. இதனால், தொலைபேசி இணைப்புகளை துண்டித்து விட்டது ஆஸ்திரேலியா. இப்போது, அங்கே, 'ஹலோ... ஹலோ...' சொல்லவே முடியாது.

பெருமாளே பிச்சை எடுத்துக் கொண்டிருக்க, அவரிடம் பிச்சை கேட்க வந்த கதையாக, ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், நவுரு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதாவது, தம் தீவின் அருகே கடலில் சிக்கி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆப்கன் அகதிகளுக்கு தஞ்சம் கொடுத்துள்ளது நவுரு. தலிபானின் ஆட்சியின் போது, அவர்களது கொடுமைகளுக்கு அஞ்சி, நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் அந்த அகதிகள்.

அகதிகளுக்கு தஞ்சம் கொடுத்தாலாவது உலக நாடுகளின் இரக்கத்தையும், உதவிகளையும் சம்பாதிக்க முடியாதா என்ற நப்பாசையே இதற்குக் காரணம் என கூறுகிறது டைம்ஸ்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us