PUBLISHED ON : ஜன 20, 2013

சில மாதத்துக்கு முன், மதுரையிலுள்ள பிரபல ஓட்டல்... நான், லென்ஸ் மாமா மற்றும் சில நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம்... இரவு மணி 10:00 இருக்கும்...
எங்கள் ரூமை ஒட்டிய ரூமில் இருந்து, 'கசமுச' வென புரியாத ஒலிகள் சிறிது நேரமாகவே வந்து கொண்டிருந்தது... ஆனால், அது மற்றவரை இடைஞ்சல் செய்யும் அளவில் இருக்கவில்லை...
மதுரை மீனாட்சி பஜாரில் (அந்த ஊர் பர்மாபஜார்) கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவருக்கு போன் செய்து, டோர் டெலிவரியாக, தம் உ.பா.,வை பெற்றுக்கொண்ட லென்ஸ் மாமா, எங்களது பேச்சில் கலந்து கொள்ளாமல், 'டிவி'யை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்...
ரூமில் அமர்ந்திருந்த நண்பர்களுள் ஒருவர், சபரிமலைக்கு மாலை போட்டு இருந்தார். அவரிடம், 'ஏன் சாமி... மாலை போட்ட பலரும், கண்டிப்பான விரதங்களை இப்போதெல்லாம் கடைப்பிடிப்பதில்லை என சொல்கின்றனரே... இது ஏன்?' என ஆரம்பித்தேன்...
'உண்மைதான் மணி... மனிதனுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்... அதை, 'டெவலப்' செய்ய இது போன்ற பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்பதற்காகவே, 'விரதம்' என கடவுள் பெயரைச் சொல்லி ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வைத்திருந்தனர் முன்னோர்.
'காலப் போக்கில் இவை எல்லாம் மறைந்து வருகிறது... பிராந்திக் கடைகளில் கூட, சாமிகளுக்கு என, தனி டம்ளர்கள் வைக்கும் அளவிற்கு காலம் வந்து விட்டது.
'இப்போ சபரிமலை செல்வதென்பது, வருடம் ஒரு முறை, ஒரு வாரம் சுற்றுலா சென்று வருவது போன்ற, 'ரிலாக்சேஷன்' ஆகி வருகிறது...' என்று நண்பர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, பக்கத்து ரூமில், 'கசமுச'வென கேட்டுக் கொண்டிருந்த பேச்சு ஒலி அதிகரித்தது.
காங்கிரஸ் - தி.மு.க., கட்சியினர் போலும்... ஒருவரை ஒருவர் குறை கூறி சப்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர்... லென்ஸ் மாமா சிறிது எரிச்சலானார்... ரூம் கதவைத் திறந்து, பக்கத்து அறையை எட்டிப் பார்த்து வந்தவர், 'ரூம் வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டு பேசிக்கிட்டு இருக்காங்கப்பா... துளி நாகரிகம் இல்லே...' என்றவர், மீண்டும், 'டிவி' பார்க்கத் துவங்கினார்...
'சாமி' மீண்டும் பேச ஆரம்பித்தார்... 'மகரஜோதி பார்க்கணுமுன்னு அன்றைய தினம் எக்கச்சக்க கூட்டம் கூடி விடுகிறது... இதைத் தவிர்க்க, மகர ஜோதியின் உண்மை நிலவரத்தை வெட்ட வெளிச்சமாக்கி விடலாம்...' என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அடுத்த அறை வாசலில் உரத்த குரலில் ஆங்கில உரையாடல் கேட்டது... எல்லாருமே வெளியே வந்து எட்டிப் பார்த்தோம், லென்ஸ் மாமா தவிர...
ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி... சப்தம் வந்து கொண்டிருந்த ரூமின் அடுத்த ரூமில்... அதாவது, சப்தம் வந்த ரூமின் இந்த பக்கம் எங்கள் ரூம்... அந்த பக்கம் அந்தப் பெண்மணியின் ரூம்...
'ஏன் இந்த அகாலத்தில் இப்படி சப்தம் போடுகிறீர்கள்? மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறீர்கள்... நாங்கள் சுற்றுலாப் பயணிகள்... தூங்க வேண்டாமா?' எனக் கேட்டார்... சப்தம் வந்த ரூம்காரர் ஒருவர், 'சாரி மேடம்...' என மன்னிப்பு கேட்டு, ரூம் கதவை மூடிக் கொண்டார்...
விஷயத்தை அறிந்த மாமா, உடனே பிளேட்டை மாற்றி, 'நம்ம கலாசாரமே சப்தம் போட்டுப் பேசுவது தான்... சோறு இல்லா விட்டால் கூட நாம் கவலைப்பட மாட்டோம்... ஆனா, பேசக்கூடாது என வாயைக் கட்டிப் போட்டா எப்படிப் பொறுப்போம்... அந்த ஆளு ஏன், 'சாரி' கேட்கணும்? நம்ம ஆளுங்களுக்கு இன்னும் அடிமை புத்தி போகலே... வெள்ளக்காரன்னா உடனே பயந்து, பணிஞ்சு போகணுமா? வேணுமுன்னா அந்த லேடியை, வேற ஓட்டல் பாத்துக்கிட்டு போங்கன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே?' என்றார்.
அவரை சட்டை செய்யாமல், எங்கள் பேச்சைத் தொடர்ந்தோம்...
'சபரிமலை கோவிலில் இது போல குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே நடை திறக்கும் வழக்கம் இருப்பதால் தான் கூட்டம் ஒரே நேரத்தில் அலை மோதுகிறது... 'டிமாண்ட்' அதிகம் இருப்பதால் வாகன கட்டணங்களும், மற்ற செலவுகளும் பல மடங்காக உயர்கிறது... பலரும் ஒரே நேரத்தில் ஒரே திசையை நோக்கிச் செல்வதால் விபத்துகளும், உயிர் சேதங்களும் ஏற்படுகின்றன... 'இதை எல்லாம் தடுக்க, தவிர்க்க வேண்டுமானால், வருடம் முழுவதும் கோவிலைத் திறந்து வைக்க வேண்டும்... இதற்கான முயற்சிகளை, தொடர்புடையவர்கள் மேற்கொள்ள வேண்டும்...' என, 'சாமி' சொல்லிக் கொண்டிருக்கும் போதே... மீண்டும் பக்கத்து ரூமில் வெள்ளைக்கார பெண்மணியின் குரல்...
இப்போது, 'புல்மப்பில்' இருந்த பக்கத்து ரூம் ஆசாமிகள், வெள்ளைக்காரப் பெண்மணியை எகிறிக் கொண்டிருந்தனர் சொல்லால்... லென்ஸ் மாமா கூறிய அதே வார்த்தைகள்...
பயந்து போன பெண்மணி, ஓடிப்போய் தன் ரூமில் புகுந்து, கதவைத் தாளிட்டார்... இங்கே, பக்கத்து ரூம் ஆசாமிகள் முகத்தில் ஆனந்த தாண்டவம்...
'மப்ழே... தெய்ரிமா வெழ்ழக்காழிய எழுத்துப்புழ்ழே... நீல்லாம் சூழந்திழத்துக்கு முன்னே பொழந்து இருந்தா எப்பவோ வெழ்ழக்காழன் ஓடி இருப்பான்...' என்றபடியே, ஆங்காங்கே சரிந்தனர்... சிலர், 'உவ்வே' செய்தனர்!
தலையில் அடித்துக் கொண்டு ரூமிற்கு திரும்பினோம்...
பின்னர் என்னுள் எழுந்த கேள்விகள்...
1) சோறு இல்லாவிட்டாலும், பேச்சு அவசியம் என்று கருதும் இனம் நாம் என்று லென்ஸ் மாமா கூறியதில் நிஜம் எவ்வளவு?
2) பக்கத்து ரூம் ஆசாமி, முதலில், 'சாரி' கேட்டது பயத்தினாலா, நாகரிகம் கருதியா? பின்னர் அவரே, அப்பெண்மணியை மற்றவர்களுடன் சேர்ந்து ஏசியது ஏன்?
3) லென்ஸ் மாமா கூறியது போல, நம்மை விட்டு, இன்னும் அடிமை உணர்வு அகலவில்லையா?
— இப்படி இன்னும் பல கேள்விகள்... விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.
***
பத்திரிகை ஒரு பெரிய சக்தி. ஆனால், கரையில்லா நீர் பிரவாகம், எவ்விதம் கிராமப் புறங்களை எல்லாம் மூழ்கடித்து, பயிர்களையும் நாசமாக்கி விடுமோ, அதேபோல, கட்டுத் திட்டத்திற்கு உட்படாத பேனாவும், நாச வேலைக்குத் தான் பயன்படும். கட்டுத் திட்டம் வெளியிலிருந்தே வருவதாயிருந்தால், கட்டுத் திட்ட மில்லாததைவிட, அது, அதிக விஷமான தாகும்.
கட்டுத் திட்டம் உள்ளுக்குள் இருந்தே வருவதாக இருந்தால் தான் லாபம் உண்டு. இந்த நியாயம் சரியானது என்றால், உலகில் இப்பொழுது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை இந்த சோதனையில் தேறும்? பயனில்லாதவைகளாக இருப்பவைகளை யார் நிறுத்துவர்?
பொதுவாக, நல்லதையும், தீயதையும் போல, பயனுள்ளவையும், பயனில்லாதவையும் கலந்து இருந்து கொண்டு தான் வரும். மனிதனே அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்!'
— மகாத்மா காந்தியின் சுய சரிதை; மதுரை காந்தி மியூசியம் வெளியீடு!
— காந்தி காலத்திலும், பத்திரிகைகள், இந்த லட்சணத்தில் தான் இருந்திருக்கின்றன என்பதை நினைக்கும்போது, கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது!
***
