
நண்பர் ஒருவருக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. ஜாதகம், ஜோசியத்தில் மிகுந்த நம்பிக்கையும், பற்றும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். நண்பருக்கு செவ்வாய் தோஷம் இருந்ததால், திருமணம் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் ஒரு நாள், 'மணி... நாளை மறுநாள் எனக்குக் கல்யாணம்...' என்றார்.
'என்னப்பா... திடுதிப்பென்று கல்யாணம்ன்னு சொல்றே... எப்போ பொண்ணு பாத்தே... எந்த ஊரு...' என கேள்விகளை நான் அடுக்க, 'பொண்ணு பேரு வாழை மரம்...' என்றார்; அதிர்ந்து போனேன்.
வாழை மரத்துக்கு தாலி கட்டி, பின்னர் அதை வெட்டிப் போட்டால் கல்யாணமாகும் என ஒரு ஜோசியர் சொல்ல, அதையும் செய்தார் நண்பர்.
வாழை மரம் வெட்டிய பின்னும் கல்யாண நேரம் நெருங்கவில்லை. '29 வயசு ஆச்சுப்பா... இனிமே எங்க திருமணம்...' என மூன்று மாதங்களுக்கு முன் வரை சொல்லியவருக்கு, டாக்டர் மணப்பெண்ணே கிடைத்து விட்டார்.
முதல் நாளே, திருமணம் நடக்க இருந்த ஊருக்குச் சென்று தங்கினோம், நானும், லென்ஸ் மாமாவும். ஊருக்கு வெளியே புத்தம் புதிதாய் கட்டப்பட்டுள்ள ஓட்டலில் ரூம் போட்டு இருந்தார் நண்பர். மிக அருமையாக கட்டப்பட்டுள்ள ஓட்டலில், சர்வீஸ், 'ஸீரோ!' பக்கத்து கிராமங்களிலிருந்து பிடித்து வரப்பட்ட விடலைகள் சர்வீசில் உள்ளனர்.
இரவில் உற்சாக பான, 'செஷன்' முடிந்த பின், லென்ஸ் மாமா விரும்பி சாப்பிடும், தயிர் சாதமும், டால் பிரை எனப்படும் பருப்பு குழம்பும் ஆர்டர் கொடுத்து விட்டு, 20 - 30 நிமிடங்கள் காத்து இருந்தார்.
நண்பர்கள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க, எனக்குள் ஒரே பதைபதைப்பு... பா.கே.ப., மேட்டர் எழுத வேண்டுமே என்று. ஓட்டலின், 'கெஸ்ட் ஸ்டேஷனரி' பேப்பரில், எங்கோ, எப்போதோ, எதிலோ படித்த ஜோக்குகளை நினைவுக்குக் கொண்டு வந்து எழுத ஆரம்பித்தேன்...
அவை:
*பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவரிடம் கை நீட்டினான் பிச்சைக்காரன்.
'இரண்டு நிமிடத்திற்கு முன் தானே ஒரு ரூபாய் கொடுத்தேன்...' என்றார் அவர்.
'பழங்கதை பேசிப் பேசியே தான் நம்ம நாடு கெட்டுப் போச்சு...' என்று முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தான் பிச்சைக்காரன்.
*முதலாளி திட்டினார்: ஏனப்பா, உன் அப்பா எனக்கு நண்பர் என்பதால்... உன்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டேன். நீ ஒன்றும் சரிவர மாட்டாய் போலிருக்கே...
வேலையாள் சொன்னான்: நீர் என் அப்பாவின் நண்பர் என்பதால் தான், இதுவரை நானும் உம் மீது கை வைக்காமல் இருக்கிறேன்; ஜாக்கிரதை!
*அதிகாரி: ஒருவர் முகத்தில் ஈயாடவில்லை என்றால் என்ன அர்த்தம்?
இன்டர்வியூவுக்கு வந்தவர்: அவர் தலைக்கு மேல் பேன் வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!
*திண்ணையில் உட்கார்ந்திருந்த தந்தை, வீட்டுக்குள் எட்டிப் பார்த்து... 'என்னடா அங்கே டியூஷன் வாத்தியாரோட தகராறு... நான் எழுந்திருச்சி வரட்டுமா?'
பையன்: வேண்டாம்பா! இந்த வாத்தியை நானே கவனிச்சிக்கிறேன்!
*டிக்கெட் இல்லாமல், சீட்டுக்கடியில் ஒளிந்து ரயிலில் பயணம் செய்ததற்காக, ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்; அபராதம் விதித்தார் நீதிபதி.
அரசு தரப்பு வக்கீல் எழுந்தார்: அபராதத்தை இன்னும் 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றார்.
'ஏன்?'
'இவர் முதல் வகுப்பில் அல்லவா சீட்டுக்கடியில் ஒளிந்து கொண்டிருந்தார்!'
* பிரபல மோட்டார் கார் தயாரிப்பாளர் ஹென்றி போர்டின், 50வது ஆண்டு திருமண விழாவில், 'உங்களது திருமண வாழ்க்கையின் வெற்றிக்குக் காரணம் என்ன?' என்று கேட்டனர் நண்பர்கள். அவர் சொன்னார்:
'கார் வியாபாரத்தை போல ஒரே மாடலைப் பின்பற்றுகிறேன்!'
* லண்டன் விமான நிலையத்தில், பயணிகள் எதிரில் புத்தகமொன்றை படித்துக் கொண்டிருந்ததற்காக, விமான ஓட்டி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகம் என்ன தெரியுமா? 'பத்தே நாட்களில் விமானம் ஓட்டுவது எப்படி?' என்பது தான்!
*'உங்கள் ஓட்டலில் தேங்காய் சட்னி போடுவதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?'
'தேங்காய் நார் விற்கிற விலையில் எங்கே சார் கட்டுப்படியாகுது?'
* அகதிகள் என்பதற்கு நல்ல தமிழில், 'புலம் பெயர்ந்த மக்கள்' என்று எழுதுகிறோம். அதைவிட பொருத்தமானதும், உச்சரிக்க எளிதானதுமான ஒரு சொல்லை, தனித்தமிழ் திங்களிதழ் ஒன்றில் காண நேர்ந்தது. அது, 'ஏதிலிகள்' என்னும் சொல்! ஏதும் இல்லாதவர்கள் என்று பொருள்!
* 'ஐ.ஜி., வந்திருக்கிறாரா?'
'இதோ இருக்கிறேன்!'
'கமிஷனர்?'
'இன்னும் வரவில்லை!'
'வரவில்லையா... ஏன்?'
'கொஞ்ச நேரம் முன்கூட இருந்தார். இப்போது காணோம்!'
'கலெக்டர்?'
'அதோ வருகிறார்!'
'ஜட்ஜ் வரவில்லையா இன்னும் ?'
'இல்லை...'
'எல்லாரும் நான் வந்த பிறகுதான் வரணுமா? நாளையிலிருந்து நான் வரும்போது இல்லையானால் அப்புறம் வருத்தப்படக் கூடாது...'
யாரது இவ்வளவு பெரிய மனிதர்! 'கலெக்டர் எங்கே... ஜட்ஜ் ஏன் வரவில்லை?' என்று கேட்கிறாரே...
திகைக்காதீர்கள்!
வேறு யாரும் இல்லை...
தபாலாபிசிலுள்ள தபால்காரர் தான்.
அந்தந்த ஆபிஸ் தபால் கொடுக்கும் போது, கலெக்டர் என்று கூப்பிடும்போது, கலெக்டராபீஸ் தபால் வாங்கும் ஊழியரும், ஜட்ஜ் என்று கூப்பிடும் போது, கோர்ட்டில் தபால் கொடுக்கும் சிப்பந்தியும் தபால் வாங்க வருவர்.
* ஆண்கள் தீக்குச்சியைப் பற்ற வைக்கும் போது, பெட்டியின் கீழ்ப்புறத்திலிருந்து மேற்புறத்துக்கு குச்சியைத் தேய்க்கின்றனர். பெண்களோ மேலிருந்து கீழாக குச்சியைத் தேய்த்துப் பற்ற வைக்கின்றனர்.
அமெரிக்கப் பேராசிரியர் ஒருவரின் ஆராய்ச்சி முடிவு இது. 'சந்தேகமிருந்தால் நீங்களே கவனித்துப் பாருங்கள்...' என்றார் இவர்.
* அரபு நாட்டிலிருந்து, வியாபாரம் செய்ய அரேபியர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவர்கள் பேசிய மொழி, தமிழ் மக்களுக்குப் புரியவில்லை. அவர்களுக்கும் தமிழ்மொழி பேசத் தெரியாத காரணத்தால், தமிழர்களின் பேச்சுக்கு எல்லாம், 'லப்பைக்,லப்பைக்' என்று அரபுகள் மறு மொழி பகர்ந்தனர். அவர்கள் மொழியில், 'லப்பைக்' என்றால், 'நல்லது; அப்படியே ஆகட்டும்' என்பது பொருள். அடிக்கடி அவர்கள், 'லப்பைக்' என்று சொல்வதை கேட்ட மற்றவர்கள், அவர்களை, 'லப்பைகள்' என்று அழைக்கத் துவங்கினர்.
— இஸ்லாமிய இலக்கியக் கூட்டமொன்றில் எம்.அப்துல் வஹ்ஹப் பேசிய போது கேட்டது.
* அந்தந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை, பார்லிமென்ட்டில் அறிவிக்க, ஒரு தோல் பெட்டியில் எடுத்துப் போவார் பிரிட்டிஷ் நிதி மந்திரி. அந்த தோல் பெட்டிக்குப் பெயர் தான், 'பட்ஜெட்!' பெட்டியின் பெயரே நாளடைவில் உள்ளே இருந்த பத்திரங்களின் பெயராக மாறி விட்டது.
— இப்படியாக எழுதி முடித்திருந்த போது நேரம், விடிகாலையை நெருங்கிக் கொண்டிருந்தது.
***

