
*தா.கதிரரசு, மைலாப்பூர் : புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்கும் பழக்கம், இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகம்?
கேரள மாநிலம் முதலிடம் வகிக்கிறது! படிக்கும் பழக்கம் அதிகமென்பதாலேயே, அங்கே, 'டிவி' எடுபடவில்லை! அடுத்து வரும் மாநிலம் மேற்கு வங்காளம்... வங்காளிகளும் நிறைய படிப்பவர்கள் தான்!
***
*எஸ்.மீனாட்சி, கோடம்பாக்கம்: 'ஐந்து ஹார்ஸ் பவர் மோட்டர், பத்து ஹார்ஸ் பவர் மோட்டர்' என, நீர் இறைக்கும் மோட்டர்கள் பற்றி பேசும்போது குறிப்பிடுகின் றனரே... 'ஹார்ஸ் பவர்' என்றால் என்ன?
ஒரு நொடிப் பொழுதில், 1210 கிலோ எடை உள்ள ஒரு பொருளை ஒரு அடி உயரத்திற்கு தூக்கத் தேவையான சக்தியை, ஒரு ஹார்ஸ் பவர் - ஒரு குதிரையின் சக்தி எனக் கணக்கிட்டு கூறினர் பிரிட்டிஷார். இப்போது இதை கிலோ வாட் எனக் குறிப்பிடுகின்றனர்!
***
*என்.ராம்குமார், திருவள்ளூர் : வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மதிக்கப் படுகின்றனரா?
மதிக்கப்படுகின்றனரோ இல்லையோ... நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை, அவர் களையே சாகடித்துக் கொண்டுள்ளது. வெள்ளைக் காரன் - அமெரிக்கர்களிடம் அவனது வெள்ளைத் தோலைக் கண்டு அச்சம் - தாழ்வு மனப்பான்மை! அராபியர்களிடம், 'முரட்டு பசங்க... நம்மை சாகடித்து விடுவான்' என்ற பயம்! உண்மையிலேயே நம்மை விட அறிவிலும், ஆற்றலிலும் மேற் சொன்னவர்கள் இரண்டாம் தட்டு தான்.
***
*ரா.பெரிய கருப்பன், கள்ளக்குறிச்சி : தன்னை விட படித்த மனைவியுடன் வாழ்க்கை நடத்துவது, முள் மீது நடப்பது போலுள்ளதே... ஏன்?
'இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்' எனும் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி விடுவதால், இந்த உணர்வு வந்து விடுகிறது. தம்மை விட எல்லா விதத்திலும், மனைவி ஒருபடி தாழ்ந்தே இருக்க வேண்டும் என்ற குணம் கொண்டவன் ஆண்... பொண்டாட்டி அதிகம் படித்திருப் பதை எப்படி தாங்கிக் கொள்வான்!
***
*ஜி.வெங்கட்ராமன், பரமகுடி : அறிவின் முதிர்ச்சியை காட்டுவது தாடியா - அறிவு ஜீவிகளின் அடையாளம் தாடியா?
இரண்டுமே இல்லை! டொக்கு கன்னம், வடுக்கள் நிறைந்த முகங்களின் உதவிக்கு வருவது தாடி! தினமும், ஷேவ் செய்து கொள்ள சோம்பல்படுபவர்களின் சவுகரியம் தாடி!
***
**டி.ஏகாம்பரம், சென்னை : கணவனால், மனத் துன்பத்துக்கு ஆளாகும் பெண்கள், அதை சகிப்பது, எதிர்ப்பது... எது சரி?
இரண்டுமே, 'எக்ஸ்ட்ரீம்' லெவலுக்கு போகக் கூடாது... மூங்கிலை வளைக்கலாம் என்பதற் காக அளவுக்கதிகமாக வளைத்தால் என்னாகும்? சகிப்பதும், எதிர்ப் பதும் சரியான சதவீதத்தில் இருந்தால், மனத்துன்பம் வெகு வாகக் குறையும்!
***
*கே.ஜெயச்சந்திரன், அனுப்பர்பாளையம் : திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது நல்லதா?
நல்லதோ - கெட்டதோ சொல்லத் தெரியவில்லை. ஆனால், விவேகானந்தர் தொடங்கி, அப்துல் கலாம் வரை, 'பேச்சுலர் பாயாக' இருந்தவர்கள், இருப்பவர்கள், புகழ் பெற்றவர்களாக, செல்வாக்கு மிக்கவர்களாக, நன்மை செய்பவர் களாக திகழ்கின்றனர் என்பது கண்கூடு!
***
**ச.சொக்கலிங்கம், மதுரை : பொய் சொல்லாமல் காதலிக்க முடியுமா?
நம்மிடம் கைவசம் அனுபவ மில்லாததால் லென்ஸ் மாமாவை, 'கன்சல்ட்' செய்தேன்... 'முடியவே முடியாது' என்கிறார். அவ்வப் போது சில, 'ஸ்வீட்லைஸ்' - இனிப்பான சரடுகள் விட்டால் தான், வாழ்க்கை சுவைக்குமாம்!
***

