
மாடர்ன் தியேட்டர்ஸ் தொழிலாளர்கள் பிரச்னை காரணமாக, ஷூட்டிங் முடிந்து நடிக-நடிகையர்கள் வீடு திரும்பும் போது, காரை வழி மறித்து தாக்குவது என, சில தொழிலாளிகள் முடிவு செய்திருந்தனர். இந்த பிரச்னையை சமாளிக்க டி.ஆர்.சுந்தரம் ஒரு யுக்தி செய்தார். அதன்படி, நடிகர்களின் காருக்கு முன்பாக தான் செல்வது என்று முடிவு செய்து, டி.ஆர்.சுந்தரமே, வண்டியை எடுத்தார். வண்டியில் கேமராமேன் மற்றும் இந்த சதி பற்றி தகவல் தந்த நபர் மட்டுமே இருந்தனர். கார் ஓட ஆரம்பித்தது. ஸ்டுடியோவை விட்டு ஒரு கி.மீ., தூரம் வந்ததும், மேற்கொண்டு போக முடியாமல் பாதையின் குறுக்கே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அந்த இடத்தில் காரை நிறுத்தி, மற்றவர்களை காரில் இருந்து இறங்க வேண்டாம் என்று கட்டளையிட்டவர், காரை விட்டு இறங்கி, கற்களை ஒவ்வொன்றாக நகர்த்தினார் டி.ஆர்.சுந்தரம். இரண்டொரு கற்களை அப்புறப்படுத்தியதுதான் தாமதம், மறைந்திருந்த நபர்களுக்கு என்ன தோன்றியதோ , 'திபுதிபு'வென மறைவிடத்திலிருந்து வெளியே வந்து டி.ஆர்.சுந்தரத்தின் காலில் விழுந்து, 'முதலாளி... எங்களை மன்னித்து விடுங்கள்...' என்று அழுதனர். அவர்கள் தான் இந்த தவறைச் செய்தனர் என்பது தெளிவாகி விட்டது. காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் பார்த்த போது, அவர்கள் அனைவரும், வேலையிலிருந்து சட்டப்படி நீக்கப்பட வேண்டிய தொழிலாளிகள் என்று தெரிந்தது.
அவர்கள் அனைவரும் காலில் விழுந்து கதறவே, டி.ஆர்.சுந்தரத்தின் மனம் இளகிவிட்டது. 'நீங்கள் எல்லாரும் நாளை காலை ஸ்டுடியோவுக்கு வாருங்கள்...' என்று கட்டளையிட்டு, திரும்பினார்.
அதன்பின்னரே, நடிக நடிகையர் மற்றும் பிற தொழிலாளர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.
மறுநாள் காலையில் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு, வந்திருந்த தொழிலாளர்களை, அதாவது, வழக்குப் போடப்பட்டிருந்தவர்களை, அழைத்துப் பேசினார். சம்பந்தப்பட்ட நபர்களும், ஸ்டுடியோவின் இதர நிர்வாகிகளும் விசாரணையில் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள் தான் அப்பட்டமாகத் தவறு செய்து இருக்கின்றனர் என்பதை அவர்களுக்கு புரிய வைத்தார் டி.ஆர்.சுந்தரம். லேபர் கோர்ட் முடிவு வந்தால், அவர்கள் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்படுவர் என்பதையும் அவர்களுக்கு தெளிவுப்படுத்தினார். தொழிலாளர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டனர்.
டி.ஆர்.சுந்தரம், அவர்கள் மீது லேபர் கோர்ட்டில் போடப்பட்டு இருந்த வழக்கை வாபஸ் பெற்றது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மீண்டும் ஸ்டுடியோவில் வேலை தந்தார். மேலும், விட்டுப் போன சம்பளத்தையும், தீபாவளி போனசையும் சேர்த்தே கொடுத்தார்.
தொழிலாளர்கள் செய்த தவறுதான் என்ன?
*அப்போது துவாரகா ஓட்டலில் தங்கியிருந்த நடிக நடிகைகளை, படப்பிடிப்புக்குப் போக விடாமல் தடை செய்தது.
*வேலைக்குச் சென்ற உண்மையான தொழிலாளர்களை, வேலைக்குப் போக வேண்டாம் என்று தடுத்து மறியல் செய்தது.
*படப்பிடிப்பிற்கு வந்த சாப்பாட்டு வேனை, மறித்து திருப்பி அனுப்பியது.
இவை எல்லாம் நிரூபிக்கப்பட்ட தவறுகள்.
டி.ஆர். சுந்தரத்தின், ஸ்டுடியோ நிர்வாகம் மிகவும் சிறப்பாக இருந்தது என்பதை, சென்னை ஸ்டுடியோ அதிபர்கள் வாயாரப் புகழ்ந்த நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.
முதன்முதலாக டி.ஆர்.சுந்தரம் சிங்களப் படம் ஒன்றைத் தயாரிக்குமாறு, அவர் நண்பரும், டைரக்டருமான சிலோன் குணரத்னா வற்புறுத்தினார். ஊக்கம் கொடுக்க ஆட்கள் இருக்கும்போது, படம் எடுக்க அவருக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த முதல் சிங்களப்படம் சுஜாதா. இது, 1953ல் தயாரிக்கப்பட்டது. இந்தப் படம் ஒரு கூட்டுத் தயாரிப்பு என்றாலும், டி.ஆர்.சுந்தரம் மற்றும் டி.வி.சாரி இதை இயக்கினர்.
படம் இலங்கையில், இலங்கை நடிக - நடிகையர் நடித்ததால் பெரும் வெற்றி பெற்றது; குணரத்னாவுக்கு மிகவும் திருப்தி. திரும்பவும் அவர் மாடர்ன் தியேட்டர்சுடன் கூட்டு சேர்ந்து படம் தயாரிக்க விரும்பினார்.
கடந்த, 1953ல் துவங்கிய இந்தக் கூட்டுத் தயாரிப்பு, 1960ம் ஆண்டு வரை நீடித்தது. ஏழுபடங்களை சிங்களத்தில் எடுத்தாலும், தமிழ்படங்களிலும் டி.ஆர்.சுந்தரம், கவனம் செலுத்தத் தவறவில்லை.
சிங்களக் கதாசிரியர்கள் மற்றும் வசன, பாடலாசிரியர்கள் ஆகியோரை தன் உதவியாளர்களாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்திற்கும் தேவையான வெளிப்புறக் காட்சிகளை, இலங்கையிலேயே போய் எடுத்து, வெற்றி கண்டார் டி.ஆர்.சுந்தரம். இங்கிருந்தே, தன் டெக்னிஷியன்களை உடன் அழைத்துச் சென்றார் என்பது தான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.
அவ்வளவு படங்களும் இலங்கையில் நல்ல வசூலைக் கொடுத்தன. டி.ஆர்.சுந்தரத்துக்கு முன்போ இல்லை அவருக்குப் பின்போ, யாரும் தங்களது ஸ்டுடியோவில் இவ்வளவு சிங்களப் படங்களை எடுத்ததாகச் சரித்திரமே இல்லை.
மந்திரிகுமாரி படத்திக்குப் பின் சிவாஜி நடித்து, கருணாநிதி கதை,வசனம் எழுத, டி.ஆர். சுந்தரம் இயக்கிய படம் திரும்பிப்பார்!
படப்பிடிப்புக்கான சகல ஏற்பாடுகளும் வேகமாக நடந்தன. இந்த இடத்தில், தன் ஸ்டுடியோ தொழிலாளர்களின் மீது, டி.ஆர்.சுந்தரம் வைத்திருந்த அபார நம்பிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ என்பது, ஒரு தொழிற்சாலையைப் போல என்று, அப்போது எல்லாரும் சொல்வர். சிவாஜிக்கு அதிக உடைகள் போட்டு மகிழ்ந்த இடம் இந்த ஸ்டுடியோதான்.
ஸ்டுடியோவிற்கு வரும் முன், சிவாஜியின் உடல் அளவு தெரிந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த காஸ்டியூமர், டி.ஆர்.சுந்தரத்திடம் சிவாஜிக்கான ஆடைகளின் அளவை எடுத்துக் கொள்ள, அனுமதி கேட்டார்.
அனுமதி கேட்ட நபரிடம் டி.ஆர்.சுந்தரம் ஒரு புகைப்படத்தை கொடுத்தார். அது, சிவாஜியின் புகைப்படம். நின்று கொண்டிருந்த கோலத்தில் எடுத்தது.
'இந்தப் படத்தைப் பார்த்து அளவுகளைத் தெரிந்து கொள். இதற்காக, சென்னை போய் வரவேண்டிய அவசியமில்லை...' என்று சொல்லி விட்டார்.
ஸ்டுடியோவில் இருந்த இதர நிர்வாகிகள், இந்த காஸ்டியூமர் தைப்பது நன்றாக இருக்காது என்று நினைத்து, சேலத்தில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஒரு தையற்கடை அதிபரையும் உடை தைக்க கூறியிருந்தனர். நேரு அந்த காலத்தில் அணிந்திருந்ததை போல், சிவாஜி கணேசன் அளவுக்கு, ஒரு 'செட்'உடை தைக்க வேண்டியிருந்தது. தன்னிடம் டி.ஆர்.சுந்தரம் கொடுத்த புகைப்படத்தின் உருவ அமைப்புக்கு ஏற்றவாறு உடைகளைத் தைத்து விட்டார் ஸ்டுடியோ காஸ்டியூமர்.
வெளியில் கொடுத்திருந்த ஆடைகளும் வந்துவிட்டன. சிவாஜி ஸ்டுடியோவுக்கு வந்தவுடன் முதலில் காஸ்டியூமரைத்தான் அழைத்தார்; உடைகள் ஏற்கனவே தைத்தாகி விட்டன என்றவுடன், சிவாஜிக்கு வியப்பு.
நிர்வாகிகள், முதலில் வெளியில் தைக்கப்பட்ட ஆடைகளை சிவாஜியிடம் கொடுத்தனர். அவரும் அதை போட்டுப் பார்த்தார். அவ்வளவு சரியாக இல்லை. எங்கெங்கோ சரிசெய்ய வேண்டும் போல் இருந்தது.
அதைக் கழற்றிக் கொடுத்த பிறகு, ஸ்டுடியோவில் தைக்கப்பட்ட ஆடைகள் வரிசையாகக் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொன்றும் அவருடைய அளவுக்கு ஏற்றாற்போல் கச்சிதமாக இருந்தன. நேரு டிரஸ் அவருக்கு மிகவும் அற்புதமாகப் பொருந்தியது.
அங்கே வந்த டி.ஆர்.சுந்தரம் உடைகளைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தார். தன் தொழிலாளிக்கு அவர் கொடுத்த பாராட்டு அது. 'இதைத் தைத்த காஸ்டியூமரை நான் பார்க்க வேண்டுமே...' என்றார் சிவாஜி.
'இதோ இவர்தான்...' என்று, அருகில் இருந்த ஓர் இளைஞரைச் சுட்டிக் காட்டினர். மிகவும் ஒல்லியாக இருந்த நபரை சிவாஜி ஏற்றுக்கொள்ள வில்லை.
'வேறு யாராவது இருக்கலாம்...' என்றார்.
'இங்கே இருக்கும் ஒரே காஸ்டியூமர் இவர்தான். இவர்தான் உங்கள் புகைப்படத்தைப் பார்த்து ஆடைகளைத் தைத்தவர்...' என்று சொல்ல, சிவாஜி வியந்து, காஸ்டியூமரின் இரு கைகளையும் பிடித்து குலுக்கினார்.
அந்த காஸ்டியூமர் தான் அர்த்தனாரி. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் எல்லாவற்றுக்கும் காஸ்டியூமராகப் பணியாற்றியவர். திருச்செங்கோட்டில் பிறந்ததால் அர்த்தனாரி என்ற பெயரை, டி.ஆர்.சுந்தரத்தின் தந்தை ராமலிங்க முதலியார் தான் வைத்தார்.
— தொடரும்.
ரா. வேங்கடசாமி

