PUBLISHED ON : மே 26, 2013

நூல் ஒன்றில், 'தரையில் இறங்கிய விமானங்கள்!' என்ற கட்டுரை கண்ணில் பட்டது. படிக்கும் காலங்களில் ஒவ்வொருவரும் என்னவெல்லாம் கோட்டை கட்டுகின்றனர்; பின்னர் நிதர்சனம் என்ன என்பது குறித்து சுவைபட வெங்கடேஸ்வரன் என்பவர் (வணிகவரி துறை) எழுதியுள்ளார்.
கட்டுரையின் சில பகுதிகள்...
மனிதன் தன் அடிப்படைத் தேவைகளை மீறி, எப்போதுமே ஏதோவொன்றிற்காய் அலைந்து கொண்டேயிருக்கிறான். அந்த ஏதோவொன்று வேறொன்றுமில்லை... தனக்கு சமூகத்தில் தனி அங்கீகாரம் வேண்டுமென்பதில் குறியாயிருந்து, அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறான்.
எண்ணிப் பாருங்கள்... எத்தனை பேர் உரிய அங்கீகாரம் பெற்றிருக்கின்றனர்? குறிப்பாய், இளைஞனாயிருந்த கால கட்டத்தில் நம்முடைய லட்சியங்கள் எதை நோக்கி இருந்தது? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? துளியும் தொடர்பில்லாது, ஏதோவொரு வெறுமை சூழ, இயந்திர வாழ்க்கை. நான் சொல்வது உண்மை தானே?
இருபத்தைந்து வயது வரை புரட்சியைப் பற்றிப் பேசாதவனிடத்திலும், 25 வயதிற்கு மேல் புரட்சியைப் பற்றி பேசுபவனிடமும் ஏதோவொரு குறையுண்டு என்றான் ஒரு ரஷ்ய அறிஞன். ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னோக்கி என் நினைவுகளை செலுத்துகிறேன். அப்பொழுது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். பல்வேறு இலக்கிய வட்டங்களில் தொடர்பு ஏற்பட்டதன் மூலம் எதிர்காலம் பற்றிய கனவுகள் உச்சத்தில் இருந்தன.
தன்னைப்பற்றிய நம்பிக்கை அதிகப்படியாக இளைஞர்களுக்கு உருவாகும் காலம் இளமைப்பருவம்; நானும் விதிவிலக்கல்ல.
பல்வேறு புத்தகங்களைப் படிப்பதில் ஒரு வெறியே ஏற்பட்டிருந்தது. நூலகமே கதியாய் கிடந்து சில புகழ்பெற்ற படைப்புகளைப் படித்ததில், சிந்தனையில் பல்வகை மாற்றங்கள் ஏற்பட்டது.
நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சிறு பத்திரிகை ஆரம்பித்தோம். 'அறிவு' என்று அதற்கு பெயர் வைத்தோம். ஆசிரியர் குழுவில் நானும் ஒருவனாக இருந்து நடத்தி, போதிய அளவு விற்பனையாகாததாலும் (படிக்கிற மாணவர்கள் நாங்கள் - எங்களிடம் ஏது காசு?) பத்திரிகைக் கான விளம்பரங்கள் வராததாலும் நிறுத்தி விட்டோம்.
ஆனால், அது ஒரு இனிய அனுபவமாக இருந்ததையும் மறுப்பதற்கில்லை.
ஒருமுறை எங்கள் கல்லூரிக்கு, அங்கு படித்து, தற்போது ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக டில்லியில் பணியாற்றும் ஒருவர் தன் குடும்பத்துடன் வந்து, அவர் படித்த வகுப்பறைகளை சுற்றி பார்த்து விட்டுப் போயிருந்தார்.
'இனிமேல் இதுபோல் அதிகாரிகள் நம் கல்லூரியிலிருந்து உருவாகுவாரா?' என்று பேராசிரியர்கள் ஏக்கத்தோடு பேசிக் கொண்டிருந்த போது, 'ஏன் நம்ம பையன் இருக்கானே... இவன் கண்டிப்பா பெரிய ஆளா வருவான் பாருங்க...' என்றார் கல்லூரி முதல்வர்.
பாவம், அவருக்கு நான், 'அரியர்ஸ்' வைத்திருந்தது தெரியாது.
எனக்கு ரொம்ப பெருமையாய் ஆகிவிட்டதுடன், என் நம்பிக்கை துளிர்விட்டது.
நண்பர்கள் அனைவரும் இரவு இரண்டு, மூன்று மணி வரை, சமூகத்தின் பல்வேறு கூறுகளை எங்கள் அறிவிற்கு எட்டியவரை அலசுவோம். இச்சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும், அதற்கு, பொது வாழ்க்கையில் இறங்க வேண்டும் என்றெல்லாம் கனவுகள் கண்டோம்.
ஒரு முறை வாணியம்பாடியில், கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் பேராசிரியர் அப்துல் காதர் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சி... 10 ஆயிரம் பேர் திரண்டிருந்த அந்த கூட்டம் வெகு சிறப்பாக மகிழ்ச்சியுடன் நிறைவுற்றது.
நண்பர்கள் ஐந்து பேரும். பயணியர் விடுதியில் ஓய்வில் இருந்த போது அப்துல்ரகுமான், 'நீங்கள் ஐவரும் மிக நன்றாகப் பேசினீர்கள். வருங்காலத்தில், தமிழகமே உங்களை தாங்கப் போகிறது...' என்று புகழ்ந்தார்.
எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
பொது வாழ்வில் ஈடுபட நானும், என் அப்பாவிடம் எவ்வளவோ வாதிட்டுப் பார்த்தேன். அவர் சராசரி நடுத்தரக் குடும்பத்து தகப்பனாராக நடந்து கொண்டார். 'தி இந்து' ஆங்கில நாளேட்டில், பணியாற்ற வாய்ப்பு வந்த போதும் தடுத்து விட்டார்.
என் கனவுகள் அவருக்குத் தெரியும் என்றாலும், அவை நடைமுறையில் சாத்தியப்படாது என்ற எண்ணத்தில் அவர் உறுதியாக இருந்தார். நான் அப்பா பிள்ளை என்பதால், என் துக்கத்தை மறைத்து, அவர் சொன்னபடியே செய்தேன்.
மூன்றாமாண்டு கல்லூரித் தேர்வுகள் முடிந்ததும், அப்பாவின் மனதை எப்படியாவது சரிக்கட்டலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த சமயம், இரண்டாமாண்டு படிக்கும் போது எழுதிய தேர்வாணைய தேர்வு முடிவுகள் இடியென வெளியாகின; நான் பாஸ் செய்திருந்தேன். உடனடியாக பணியில் சேர அப்பா வற்புறுத்தினார்; அவ்வாறே செய்தேன்.
இன்று, என்பால் அன்பு கொண்டிருந்த பலரது நம்பிக்கைகள் குலைந்து, என் முகம் தெரியாமல் - இன்னும் சொல்லப் போனால், என் சுயத்தை இழந்து, பத்தோடு பதினொன்றாய், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வரும் பஞ்சப் படிக்காகவும், ஆண்டுக்கொரு முறை வரும் ஊக்கத் தொகைக்காகவும் காத்திருக்கும் பரிதாப அரசு ஊழியனாக மாறியிருக்கிறேன்.
இது, வீழ்ச்சிதான் என்றே நான் கருதுகிறேன்.
என்னைப் போல் எத்தனை பேர் - இன்னும் பன் மடங்கு திறமையாய் - நம் துறை (வணிக வரித்துறை)யிலும், ஏன் இன்ன பிற துறைகள் மற்றும் தொழில்களிலும், நம்முடைய வரிச் சட்டத்தில் வரும் என்ட்ரி 67டி போல் எதிலும் சேராமல், பிறரால் குறிப்பிடப்படும் அளவிற்கும் இல்லாமல் - உயரப் பறந்த, பறக்கத் துடித்த விமானங்கள் இன்று தரையில் கிடக்கின்றன. எத்தனை என்ட்ரி 67டிக்கள் நம் துறையில் இருக்கின்றன என, எனக்குத் தெரியாது.
— கட்டுரை ஆசிரியரின் கருத்தைப் படித்தபின், நான் கட்டிய ஆகாயக் கோட்டைகள் ஒரு கணம் என் முன்னே தோன்றி மறைந்தன!
***
'ஓய் லென்ஸ் மாமா... உமக்கு ரொம்ப பிடிச்ச, 'சரக்கு' சமாச்சாரம் பத்தி, சமீபத்தில் படிச்சேன்... சொல்லட்டுமா?' என்ற குப்பண்ணா, மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்! வேண்டுதல் காரணமாக பழனிக்குச் சென்று சமீபத்தில் மொட்டை அடித்து திரும்பியிருந்த லென்ஸ் மாமா, மொட்டைத் தலையைத் தடவியபடியே, 'சொல்லுங்க...' என்று, குப்பண்ணாவைப் பார்த்தார்.
'சாராயத்தில் பலவகை உண்டாம் ஓய்... 'அடுகள்'ங்கற பெயருல சங்க காலத்திலேயே சாராயம் புழக்கத்தில் இருந்ததாம். பல வகைப் பழங்களை ஊறலாக்கி, அதை வடிச்சு, சாராயம் குடிக்கும் பழக்கம் 17ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்துதாம்... 'விறலி விடு தூது'ன்ற புஸ்தகத்துல இத எழுதி இருக்கா... 'சாரம்'ங்கறது தான் சாராயம் ஆச்சாம்...
'பிராந்தி, விஸ்கி இதெல்லாம் முதல்ல, நெதர்லாந்து நாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு இறக்குமதி செஞ்சாளாம்... 'நாட்டுச் சாராயம், கருப்பட்டி, வெல்லம், பேரீச்சம்பழம், வாழைப்பழம், தேங்காய், பனை - தென்னையிலிருந்து வடிக்கப்படும் கள், அரிசி ஊறல், கரும்புச்சாறு இதெல்லாம் ஊற வெச்சு நம்மூர்ல சாராயம் காய்ச்சினாளாம்...
'பட்டைச் சாராயம்ங்கறது என்ன தெரியுமா?
'பழவகை, இனிப்புகளை போட்டு, அந்த ஊறல் நாத்தமெடுத்து, சுவை கெட்டுப் போகாம தடுக்க, ஊறலோட, கருவேலம்பட்டை, வேப்பம்பட்டை போன்ற மரப்பட்டைகள் சேர்த்துப் போடுவாளாம்...
'அதனால தான் இது பட்டை சாராயம் ஆனதாம்... தேங்கா சாராயமும், பட்டைச் சாராயமும் உயர்ந்த சரக்குகளாம்... இலுப்பப் பூவை ஊற வைச்சு இலுப்ப சாராயமும் செய்தாளாம்...' என்றார்.
'இத்தோட, இப்பெல்லாம், ஊருக்கு ஊர், சுடுகாட்டிலும், வயற்காட்டிலும் காய்ச்சப்படும் கள்ளச் சாராயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்க... அப்பத் தான் சாராயப் பட்டியல் நிறைவு பெறும்...' என நான் கூற, வீரப்பா சிரிப்பு சிரித்தார் குப்பண்ணா!
***
