தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முதலாளி! (13)

முதலாளி! (13)

முதலாளி! (13)


PUBLISHED ON : மே 26, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆயிரம் தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணி தெலுங்கு படத்திலிருந்து நடிகர் ஜக்கையா விலகி கொண்டதைத் தொடர்ந்து, புதிய கதாநாயகனாக நடிகர் காந்தாராவை, அழைத்துக் கொண்டு வந்து விட்டார் டி.ஆர்.சுந்தரம். அவரும், அப்போது தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ள நடிகர் தான். ஜக்கையா நடித்த காட்சிகள் அப்புறப்படுத்தப் பட்டன. போட்ட சேட்டுகள் மீண்டும் போடப்பட்டு, காந்தாரவிற்கு புதிய உடைகள் தைக்கப்பட்டு, 15 தினங்களில் காந்தாராவை நடிக்க வைத்து படத்தை முடித்து விட்டார். 1947ல் எடுத்த தமிழ்படம், 1960ல் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது. அதே படத்தை, கன்னடத்திலும் 'டப்' செய்து வெளியிட்டனர். இந்த இரண்டு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

இடையில் ஒரு முக்கியமான செய்தி. மைசூர் நகரத்தைச் சுற்றியுள்ள காடுகளில் யானைகள் அதிகம். அங்கு இருந்த ஒரு கிராமத்தில், மக்களை வீட்டிற்குள் இருந்து வெளியே வர விடாமல் பயமுறுத்திக் கொண்டு இருந்தது ஒரு காட்டு யானை. யானைக்கு மதம் பிடித்து விட்டது என்று கூறினர். மனிதர்களைப் பார்த்தால் ஓட ஓட விரட்டும் தன்மை கொண்டதாக அது இருந்தது. சிறந்த வேட்டைக்காரர்களால் கூட அந்த யானையை அடக்க முடியவில்லை.

இதனால், மைசூர் மகாராஜா, அரசிடம் விண்ணப்பிக்க, அவர்களோ, கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள துப்பாக்கிப் பயிற்சி பெற்ற வேட்டைக்காரர்களுக்குத் தகவல் அனுப்பினர். யானையை சுட்டுத் தள்ள வந்தவர்கள் நான்கு பேர். அதில் ஒருவர் டி.ஆர்.சுந்தரம். அவர், பல ஆண்டுகளுக்கு முன், துப்பாக்கி லைசன்ஸ் பெற்று, அவ்வப்போது வேட்டைக்கு செல்லும் பழக்கமுடையவராக இருந்தார். யார் கண்களிலும் அகப்படாத யானை, டி.ஆர்.சுந்தரம் கண்களில் படவே, அதை அவர் சுட்டு வீழ்த்தினார். கிராம மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. டி.ஆர்.சுந்தரத்திற்கு பெரும் அளவில் பாராட்டுத் தெரிவித்து, ஊருக்கு அனுப்பி வைத்தனர். அரசும், டி.ஆர்.சுந்தரத்திற்கு பாராட்டு தெரிவித்தது; அவார்டும் தரப்பட்டது.

அட்டகாசம் செய்த யானையை சுட்டுக்கொன்றாலும், விநாயகர் மீது அவருக்கு அளவு கடந்த பக்தி. ஸ்டுடியோவின் முன்புறத்தில், வாயிலினுள் நுழையும் முன்பே ஒரு விநாயகர் கோவில் இருக்கிறது. இங்கே கற்பூரம் காட்டிய பின் தான், உள்ளே படத்திற்கான பூஜை நடக்கும். இந்த, விநாயகர் விஷயமாக ஒரு முக்கிய செய்தியைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரவல்லிபடப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம்... டி.ஆர்.சுந்தரத்திற்கு உதவியாக இருந்தவர் கோ.தா.சண்முக சுந்தரம் எனும் மேதாவி. ஒரு காட்சியில், ஆரவல்லியை வெல்வதற்காக பீமன் தன் நண்பனுடன், அந்த நகருக்கு வந்து ஒரு கோவிலில் படுத்திருக்கிறான். அப்போது, அங்கே வந்த பொதுமக்களில் சிலர் ஆரவல்லியின் சூரத்தனத்தைப்பற்றிப் புகழ்ந்து. 'இவளை வெற்றி கொள்ள யாருமே வரமாட்டார்களா?' என்ற கேள்வியை எழுப்பினர். இதைக் கேட்டுக் கொண்டே எழுந்த பீமனுக்கு, அடங்காத கோபம் வருகிறது.

'அவளை நான் வெற்றி கொண்டே தீருவேன்...' என்று சப்தம் போட்டு, அறைகூவல் விடுத்த பின், கையிலிருந்த கதையை பலமாக வீசுவான். அப்போது அருகில் இருந்த ஒரு விநாயகர் சிலை, கதை பட்டு உடைந்து விடுகிறது. காட்சி நன்றாக அமைந்துவிட்டது என்று எல்லாருக்கும் திருப்தி.

படம் முடிவடைந்த பிறகு அதைச் சிலருக்குப் போட்டுக் காட்டுவது ஸ்டுடியோவின் வாடிக்கைகளில் ஒன்று. ஸ்டுடியோ தொழிலாளர்கள் உட்பட சில வெளியுலக பிரபலங்களும் அங்கே அழைக்கப்படுவது உண்டு. இவர்களில் சில முக்கிய நபர்கள் தங்களது விமர்சனத்தைக் எழுதிக் கொடுப்பர்.

ஆரவல்லி படம் பார்த்த குழுவினருள் இருந்து ஒரு முக்கிய நபர் எழுதிய விமர்சனம், டி.ஆர்.சுந்தரத்தின் கவனத்திற்குக் கொண்டு போகப்பட்டது. அதை அவர் படித்துப் பார்த்தார். 'ஈ.வெ.ரா., விநாயகர் சிலைகளை உடைத்துக் கொண்டு வரும் இந்தக் காலகட்டத்தில், பீமனின் கதைபட்டு ஒரு விநாயகர் சிலை உடைவது ஈ.வெ.ரா.,வின் கொள்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அதனால், இப்படிப்பட்ட ஒரு காட்சி தேவை இல்லை என்பது என் கருத்து. ஏனெனில், மக்களின் விமர்சனத்திற்கு நிச்சயம் இது தப்பாது. பீமன், தன் கதையை வீசுவதோடு நிறுத்திக் கொண்டால் போதும்...' என்று எழுதியிருந்தார் அவர். டி.ஆர்.சுந்தரத்திற்கும் இது சரி என்றே பட்டது. அந்தக் காட்சியை மட்டும் படத்திலிருந்து வெட்டி விடச் சொன்னார். ஆனால், டி.ஆர்.சுந்தரத்தின் உதவியாளராக இருந்த நபருக்கு அதை நீக்க விருப்பமில்லை. பிடிவாதமாக விவாதித்தார். பயன் இல்லை. அதனால், அந்த நபர், தன் உத்தியோகத்தை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்து, வெளியேறி விட்டார்.

அப்படிப் போனவர், 'மேதாவி' என்று அழைக்கப்பட்ட நாவலாசிரியர் கோ.தா.சண்முகசுந்தரம். இந்த விமர்சனத்தை எழுதிக் கொடுத்தது எழுத்தாளர் மகரிஷி!

நல்ல விஷயத்தை யார் சொன்னாலும், சொல்லும் மனிதனின் தராதரத்தைப் பார்க்காமல் ஏற்றுக் கொள்ளும் பரந்த மனப்பான்மை டி.ஆர்.சுந்தரத்திடம் இருந்தது.

ஆரவல்லி படத்துக்குப் பின், டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்த படம், கைதி கண்ணாயிரம். இந்தக் கதை தேர்ந்தெடுக்கப்பட்டதே எதிர்பாராத விதமாகத்தான். ஆங்கில, இந்திப் படங்களைப் பார்க்கும் மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவினர், ஒரு படத்தை சிறந்தது என்று ஏகோபித்துச் சொன்னால், அந்தப் படத்தை ஸ்டுடியோவிற்கு வரவழைத்துப் பார்ப்பார் ஆர்.சுந்தரம். கதை பிடித்து இருந்தால், அதன் உரிமையை வாங்கி, தமிழ் மக்களுக்குப் பிடிக்கும் வகையில், சில, 'சென்டிமென்டுகளை' சேர்த்துத் திரைக்கதையை அமைப்பதில், டி.ஆர்.சுந்தரம் தேர்ச்சி பெற்று இருந்தார். கதை இலாகாவில் இருந்த எல்லாருக்கும், அவரது விருப்பம் என்னவென்பது தெரியும். சில சமயங்களில், எத்தனையோ படங்களைப் பார்த்தாலும், ஒரு படம் கூடத் தேறாது. அதற்காகப் படப்பிடிப்பில் தொய்வும் ஏற்படுவதில்லை. ஏதாவது, ஒரு படத்தை, 'டப்' செய்து ரிலீஸ் செய்து விடுவார். அப்படித்தான், சிந்தாமணி படம் கன்னடத்தில், 'டப்' செய்யப்பட்டது. பலரின் முயற்சியால் ஒரு நல்ல இந்திப்படம் கிடைத்தது. அது, கைதி 911. ஷேக்முக்தார் என்ற உயரமான வில்லன் நடிகர், நடித்து வெற்றி கண்ட படம்.

இதற்குத் திரைக்கதை எழுதிய பின், கைதி கண்ணாயிரம் என்னும் பெயரைச் சூட்டினர். இந்தக் கதைக்காக, அவர் தேர்ந்தெடுத்த நடிக, நடிகையரின் பட்டியல் பெரியது. பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ்.மனோகர், ஜாவர் சீதாராமன், கே.ஏ.தங்கவேலு, ராஜசுலோசனா, ஈ.வி.சரோஜா மற்றும் மனோரமா ஆகியோர் நடித்தனர். படத்தில், பிரதான வேடத்தில் நடித்த பி.எஸ்.வீரப்பாவிற்கு மொட்டையடிக்க வேண்டும். தன் அடர்த்தியான முடியை இழக்க, அவர் சம்மதிப்பாரா?

யாரும் அவரிடம் கேட்கவே இல்லை. மேக்கப்மேன் பலராம் நாயுடுவும், காஸ்டியூமர் அர்த்தனாரியும் சேர்ந்து, வீரப்பாவின் தலைக்கேற்ற ஒரு, விக் தயாரித்தனர். அந்த, 'விக்' அணிந்து கொண்டால், முடி சுத்தமாக மறைந்து, மொட்டைத் தலையாகக் காட்சியளிக்கும். வீரப்பாவின் முடியும், சிரிப்பும் தான், அவருக்கு அந்த காலத்தில் புகழைக் கொடுத்தன. முடிக்கு மேல் அந்த, மொட்டை, 'விக்'கை ஒட்டுவது சிரமமான காரியம் என்றாலும், அதை விட சிரமமான காரியம், 'விக்' ஒட்டப்பட்ட தலையுடன் நடிப்பது. சினிமா உலகில் அப்போதுதான் இந்த மொட்டை 'விக்' கலாசாரம் அறிமுகமானது. பசை ஒரு பக்கம் முகத்தின் தசைகளை இழுக்க, அந்த வேதனையைப் பொறுத்து கொண்டு வீரப்பா நடிக்க வேண்டும். நன்றாகவே நடித்தார். தலையில் ஒட்டப்பட்டிருப்பது, 'விக்' என்றே தெரியாமல், கேமராமேன் சி.ஏ.மணி காட்சிகளைப் படமாக்கினார். இந்தப்படத்திற்கு ஆர்ட் டைரக்டர் நாகராஜனும், ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினமும் கொடுத்த ஒத்துழைப்பை பாராட்டியே ஆகவேண்டும். இப்படத்தின், படப்பிடிப்பு நடக்கும்போது, நடந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

உயரமான ஓர் இடத்தில் பி.எஸ்.வீரப்பா, மனோகர் இருவருக்கும் நடக்கும் சண்டைக் காட்சி. இரவு நேரத்தில் படமாக்கப்பட்டது. இந்தக் காட்சிக்கு சில, 'டிரிக் ஷாட்டுகள்' தேவை. அவர்கள் பத்தடி உயரமுள்ள இடத்தில் நின்று சண்டை போட்டாலும், நான்கு மாடிக் கட்டடத்தின் மீது நின்று கொண்டு, சண்டை போடுவது போல் காட்சி அமையவேண்டும். இக்காட்சியைத் தெருவில் போவோர், வருவோர் நின்று அண்ணாந்து பார்க்க வேண்டும். இதற்காகத் துணை நடிகர்கள், ஆண்களும், பெண்களும் நூறு பேர் சேலத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர்.

மனோகர், வீரப்பா, ஜாவர் சீதாராமன் போன்ற நடிகர்களும் வந்துவிட்டனர். படப்பிடிப்பும் ஆரம்பமாகி விட்டது. படப்பிடிப்பு முடிய, இரவு இரண்டு அல்லது மூன்று மணியாகும் என்று நினைத்து விட்ட கார், பஸ் டிரைவர்கள், 'தாகசாந்தி' செய்து கொண்டு படுத்து விட்டனர். ஆனால், எப்போதுமே அசுரகதியில் நடக்கும் படப்பிடிப்பு வேலை, இரவு பன்னிரெண்டு மணிக்கே முடிந்து விட்டது. எல்லாரும் வீடு திரும்பத் தயாராகி விட்டனர். டிரைவர்களை உடனே வண்டிகளை எடுக்கச் சொல்லி டி.ஆர்.சுந்தரம் உத்தரவிட்டார். போதையில் இருக்கும் அவர்கள் எப்படி எழுந்து வர முடியும்?

— தொடரும்.

ரா. வேங்கடசாமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us